Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

துத்திக் கீரை பயன்கள்!

நன்றி குங்குமம் டாக்டர்

உயிர்தொழில்நுட்பத் துறை முனைவர் ஆர். சர்மிளா

மனித உடலின் ஆரோக்கியத்தையும் மனதின் ஆரோக்கியத்தையும் தீர்மானிப்பது நாம் உட்கொள்ளும் உணவே. ஆகையால் உணவு வகைகளை தேர்ந்தெடுத்து உணவில் சேர்த்துக்கொள்வது நமது ஆரோக்கியத்தை நிலையாக வைத்திருக்க உதவும். பொதுவாக உலகில் இருக்கக்கூடிய ஒவ்வொரு உயிரினத்திற்கும் தனிச்சிறப்பு உண்டு என்பதற்கேற்ப கிடைக்கக்கூடிய அத்தனை தாவரங்களுக்கும் தனி பண்பு உண்டு. அந்தவகையில் சாலையோரங்களிலும் வயல் வெளிகளிலும் காணப்படும் துத்திச் செடியும் ஒன்று.

துத்தியின் அறிவியல் பெயர் - அபுடிலான் இன்றகாம்.

இது மால்வேசியே எனும் தாவரக்குடும்பத்தைச் சார்ந்தது. இத்தாவரம் இந்தியா, இலங்கை, சீனா, வங்காளதேசம், பர்மா, தாய்லாந்து, தைவான், ஜப்பான், மலேசியா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் காணப்படுகிறது. இதில் இதய வடிவிலான இலைகள், பொன் மஞ்சள் நிறத்தில் பூக்கும் பூக்கள், சர்க்கர வடிவிலான காய்கள் காணப்படும். இதன் இலை, வேர், பட்டை, காய் மற்றும் பூ என அனைத்துப் பகுதிகளுமே மருத்துவ பண்புகள் நிறைந்ததாகும். துத்தியில் சிறுதுத்தி, மலைத்துத்தி, பனியாரத்துத்தி, வாசனைத் துத்தி, அரசிலைத்துத்தி மற்றும் கருந்துத்தி எனப் பலவகைகள் உண்டு. இது ஒரு புதர்ச் செடி வகையைச் சார்ந்த தாவரமாகும்.

துத்தியில் காணப்படும் மூலக்கூறுகள்

அல்கலாய்டுகள் - உடலில் ஏற்படும் அழற்சியைக் கறைக்கும் தன்மை கொண்டவை.

பிளேவனாய்டுகள் - நச்சுத் தன்மையை குறைத்து ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

டேனின்கள் - காயங்களை குணப்படுத்த மற்றும் செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது.

பினாலிக் அமிலங்கள் - ஆன்டி

ஆக்ஸிடன்டுகளாக செயல்படுகின்றன.

சாபோனின்கள் - நோய் எதிர்ப்பு

சக்தியை அதிகரிக்க உதவுகின்றன.

வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் - வைட்டமின் சி மற்றும் கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், இரும்பு உள்ளிட்ட முக்கிய தாதுக்கள் துத்தியில் காணப்படுகின்றன.

துத்தியின் மருத்துவ பண்புகள்

இன்றைய மாறுபட்ட உணவுப்பழக்கத்தால் பெரும்பாலானோருக்கு மலக்குடலை சுற்றியுள்ள நரம்புகள் வீக்கமடைந்து பைல்ஸ் நோய் ஏற்படுகிறது. இதனை தடுப்பதில் துத்தி சிறந்து விளங்குகிறது. இதில் காணப்படும் தாவர மூலக்கூறுகள் மூலநோயால், ஏற்படும் கடுமையான வலியை தடுக்க உதவுகிறது.சிறு நீரகக்கல் பிரச்னைக்கு ஒரு சிறந்த தீர்வாகவும் துத்தி விளங்குகிறது. இதனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளும் போது சிறுநீரகத்தில் உள்ள கற்கள் கரைந்து சிறுநீர் வழியாக வெளியேறும் வாய்ப்பு உள்ளது.

மாறுபட்ட பனிச்சூழலின் காரணமாக அதிகமானோர் இன்று மூட்டுவலி மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் உள்ளிட்ட, பிரச்னையால் சிரமப்படுகிறார்கள். இதனை தடுக்கவும் துத்தி உதவுகிறது. உடலில் ஏற்படும் வலிகள் மற்றும் வீக்கத்தினை குறைக்க துத்தி பயன்படுகிறது.குறிப்பாக ஃப்ரீரேடிக்கலின் உற்பத்தியைத் தடுத்து கல்லீரல் உட்பட பல்வேறு உடல் உறுப்புகளின் செயல்பாட்டினை மேம்படுத்துகிறது.உடலின் அமில காரத்தன்மையை நிலைப்படுத்தி ஆரோக்கியத்துடன் வாழ வழி செய்கிறது.குடற்புண், வாயுக்கோளாறு, உள்ளிட்ட பிரச்னைகளையும் தடுக்கிறது.

பெண்களுக்கு குறிப்பாக கருப்பை சார்ந்த பிரச்னைகளை தடுக்க உதவுகிறது. மேலும் ரத்தத்தை சுத்தப்படுத்தவும், நரம்புகளை வலுப்படுத்தவும் பயன்படுகிறது. வைட்டமின் சி காணப்படுவதினால் தோல் சார்ந்த பிரச்னைகளுக்கு துத்தி பயனுள்ளதாக திகழ்கிறது.காய்ச்சல், சளி, இருமல் போன்ற பிரச்னைகளுக்கு துத்தி நல்ல மருந்தாக செயல்படுகிறது. இத்தகைய நன்மை வாய்ந்த துத்திக் கீரையை களைச்செடி என்று கருதாமல் அடிக்கடி உணவில் சேர்ப்பது பல்வேறு நன்மைகளை உடலுக்கு தரும். இதனை பாசிப்பருப்புடன் சேர்த்து சாம்பார் செய்து சாப்பிடலாம்.

இலைகளை கொதிக்க வைத்து நீரினை வடிகட்டியும் குடித்து பயனடையலாம். துத்தி இலைகளைப் பறித்து, ஒரு கைப்பிடி அளவு எடுத்துக் கொண்டு, அதை நன்கு அலசிக் கொள்ள வேண்டும். அதை நான்கு சின்ன வெங்காயத்தோடு சேர்த்து நன்கு மை போல அரைத்து மோரில் கலந்து தொடர்ந்து 4 நாட்கள் சாப்பிட்டால் மூலம் குணமடையும்.துத்தி, துளசியைப் போன்றுதான் சுவையுடன் இருக்கும். வெறும் வாயில் கூட மென்று சாப்பிடலாம். எந்தவித பக்க விளைவும் ஏற்படாது. இதன் பயன்கள் பதார்த்த குணப்பாடத்தில் கீழ்கண்டவாறு கூறப்பட்டுள்ளது.

துத்தியின் நற்குணம்

மூலநோய் கட்டி முளபுழப்புண்ணும் போஞ்

காலவதக்கிக் கட்டத்தையலே - மேலுமதை

எப்படியேனும் புசிக்கி லெப்பிணியுஞ் சாத்தமுறு

மிப்படியிற் றுத்தி யிலையை.