Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பேரிக்காயின் நன்மைகள்!

நன்றி குங்குமம் டாக்டர்

ஆப்பிளைப் போன்றே அதிகசத்துக்களைக் கொண்ட பழம் தான் பேரிக்காய். பேரிக்காயை நம் நாட்டின் ஆப்பிள் என்று கூடச் சொல்வார்கள். தமிழ்நாட்டில் பேரிக்காய்தான் அதிக அளவில் பயிராகும் குளிர்மண்டல பழப்பயிராகும். இது மலைப்பகுதிகளில் சுமார் 1500 முதல் 2500 மீட்டர் உயரமுள்ள இடங்களில் சாகுபடி செய்யப்படுகிறது. 10 முதல் 12 ஆண்டு வயதுடைய மரங்களில் இருந்து 100 முதல் 120 கிலோ பழங்கள் கிடைக்கும்.

மே-ஜூன் மாதங்களில் வால்பேரியும், ஆகஸ்டு முதல் செப்டம்பர் வரை இதர பேரி வகைகள் மற்றும் நாட்டுப்பேரி வகைகள் அறுவடைக்கு வருகின்றன. பேரிக்காய் மரத்தின் தாவரவியல் பெயர் ‘பைரஸ் கம்யூனிஸ்’ என்பதாகும்.100 கிராம் பேரிக்காயில் புரதம், நார்ப்பொருள், மாவுப் பொருள், கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீஷியம், சோடியம், பொட்டாஷியம், தாமிரம், கந்தகம், குளோரின், ஆக்சாலிக் அமிலம், பைட்டின் பாஸ்பரஸ், கரோட்டின் உள்ளிட்ட சத்துக்கள் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பேரிக்காய் நரம்புத்தளர்ச்சி நோய்க்கு நல்லது. இதயத்தை பலப்படுத்தும். சிறுநீர் சம்பந்தப்பட்ட நோய்களுக்கும் கீல்வாதத்திற்கும் சிறந்தது. கல் அடைப்பை நீக்கும் குணங்கள் பேரிக்காயில் இருப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.பேரிக்காயில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. மேலும் இதனில் குறைந்த அளவு கலோரிகளே உள்ளது. பேரிக்காயில் நார்ச்சத்துக்களோடு சேர்த்து கேட்டிசின்ஸ் மற்றும் ஃப்ளாவனாய்டுகள் எனப்படும் குறிப்பிடத் தக்க இரு வகையான உயிர் வளியேற்ற எதிர்ப்பொருட்கள் (ஆண்டிஆக்ஸிடண்ட்) உள்ளன. இவற்றின் மூலம் பேரிக்காய் உண்ணும் உணவில் உள்ள கொழுப்பு வயிற்றில் சேராமல் தடுக்கும் என்று சில ஆய்வு முடிவுகள் குறிப்பிடுகின்றன.

சிறுநீரகக் குறைபாடு உள்ளவர்களுக்கு இது மிகச்சிறந்த கனி. சிறுநீரை வெளியேற்றவும், பலவீனமான சிறுநீரகச் செயல்பாட்டைச் சரிசெய்யவும், உடலின் அதிகப்படியான நீரை வெளியேற்றி சுத்தப்படுத்தவும் உதவுகிறது. பேரிக்காய் சாப்பிடுவதால் எலும்புகள், பற்கள் பலப்படும். இதயம் வலுவாகும். இரைப்பை, குடல், பிற ஜீரண உறுப்புகளை பலமாக்கும் ஆற்றல் இதற்கு உண்டு.

அன்றாடம் பேரிக்காய் சாப்பிடுவதால் அடிக்கடி உண்ணும்போது நல்ல பசியும், ஜீரணமும் ஆகும். வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் ஆற்றல் பேரிக்காய்க்கு உண்டு. பேரிக்காய் தோலின் துவர்ப்புத் தன்மைதான் இதன் பலமே. பேரிக்காயைத் தோலுடன் சாப்பிடும்போது அது இதயநோயை கட்டுப்படுத்துகிறது. இதில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால், டைப் 2 சர்க்கரை நோய்க்கான வாய்ப்பை குறைக்கிறது. யூரிக் அமிலம் உடலில் அதிகமாக சுரந்து, அது உடலிலிருந்து வெளியேறுவதில் சிரமம் ஏற்பட்டால் கணுக்காலில் வீக்கம் ஏற்படும். இந்த யூரிக் அமிலத்தை வெளியேற்றும் ஆற்றல் பேரிக்காய்க்கு உள்ளது.