Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

கீரைகளின் பயன்கள்!

நன்றி குங்குமம் டாக்டர்

*கரிசலாங்கண்ணி

பூக்களின் நிறங்களின் அடிப்படையில் மஞ்சள், வெள்ளை, நீலம், சிவப்பு என கரிசலாங்கண்ணி நான்கு வகைப்படும். கரிசாலை எனப்படும் கரிசலாங்கண்ணியின் சமூலத்தைச் சூரணம் செய்து இளநீர் அல்லது மோரில் கலந்து சாப்பிட்டு வந்தால் இளம் வயதில் வரும் நரை மாறும். கண்களைப் பாதுகாப்பதில் மிக முக்கியமான மூலிகையாக கரிசாலையைச் சொல்கிறார்கள். கிராமங்களில் குழந்தைகள் மற்றும் பெண்கள் தங்கள் கண்களில் மையிட்டுக் கொள்ளப் பயன்படுத்தும் கண்மை இதன் சாற்றிலிருந்துதான் தயாரிக்கப்பபடுகிறது.

கரிசலாங்கண்ணியை அரைத்துச் சாறு எடுத்து, அதனுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து காய்ச்சி தடவி வந்தால் கூந்தல் கருமை நிறத்துடன் செழித்து வளரும். கரிசலாங்கண்ணியைச் சமைத்துச் சாப்பிட்டு வருவதன் மூலம் மஞ்சள் காமாலை உள்ளிட்ட பல்வேறு நோய்கள் குணமாகும்.

*பொன்னாங்கண்ணி

நாட்டுப் பொன்னாங்கண்ணி, சீமைப் பொன்னாங்கண்ணி என இரண்டு வகைகள் உள்ளன. இந்தக் கீரை மேனியை பொன் போல மின்னச் செய்யும். என்பதாலேயே இதற்கு இந்த பெயர் அமைந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்தக் கீரையில் இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்கள் நிறைந்து காணப்படுகின்றன.

இந்த கீரையைக் கருவுற்றிருக்கும் பெண்கள் சாப்பிட்டு வந்தால் உடல் உறுதி பெறும். பிறக்கும் குழந்தையின் தோல் பொன் போன்று இருக்கும். இதில் நிறைய ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் இருக்கிறது. இதனால், சர்க்கரைநோய் மற்றும் உயர் ரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்தும்.

பொன்னாங்கண்ணிக்கு இயல்பாகவே குளிர்ச்சியூட்டும் தன்மை உண்டு என்பதால், உடலின் உள்சூட்டை தணிக்கும். அதீத சூட்டினால் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதலைக் குணப்படுத்த இந்தக் கீரை பயன்படும். அத்துடன் கண்களுக்குக் குளிர்ச்சி தரும்.

*மூக்கிரட்டை

இது கிராமம், நகரம் என்றில்லாமல் நீர்வளம் நிறைந்த பகுதிகளில் படர்ந்து காணப்படும். குறிப்பாக, நகரங்களில் பூங்காக்களில் இந்தச் செடிகளைக் காணலாம். சிறு செடிவகையைச் சார்ந்த இந்தக் கீரையை பெரும்பாலும் பயன்படுத்துவது இல்லை. ஒரு களைச்செடியாகவே பார்க்கப்படுகிறது. இந்தக் கீரையை சிலர் கலவைக்கீரைகளுடன் சேர்த்து சமைப்பார்கள்.

ரத்த தட்டணுக்களை அதிகப்படுத்தக் கூடியது என்பதால் தாராளமாக உணவில் சேர்த்துக் கொள்ளலாம். சீறுநீரகம் சம்பந்தமான நோய்களுக்கு கசாயமாகவோ, உணவாகவோ பயன்படுத்தலாம். அதிகரித்த யூரியா மற்றும் கிரியாட்டினின் அளவைக் குறைக்கும் ஆற்றல் இதற்கு உண்டு. கட்டுக்குள் இல்லாத சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு ஆகியவற்றால் ஏற்படும் சிறுநீரகப் பாதிப்பையும் தடுக்கும்.

*முடக்கற்றான்

இதனை முடக்கு அறுத்தான் என்றும் கூறுவர். உடலில் தோன்றும் முடக்குகளை நீக்கக்கூடியது. வயதானவர்களைப் பாதிக்கும் மூட்டு சம்பந்தப்பட்ட உபாதைகளுக்கு நல்ல தீர்வு தரும். மழைக்காலங்களில் காலியிடங்கள், வேலிகள் என எங்கும் படர்ந்திருக்கும் கொடி வகை இது. கிராமங்களில் மிகச் சாதாரணமாகக் கிடைக்கும் இந்தக் கீரை பெருநகரங்களில் விலைக்கு விற்கப்படுகிறது.

முடக்கற்றானை தோசை மாவுடன் கலந்தோ, ரசம் வைக்கும்போது சேர்த்தோ பயன்படுத்தலாம். குழம்பு வகைகளில் இதைச் சேர்த்தும் சாப்பிடலாம். இதைச் சாப்பிடுவதால் எலும்புகள் பலம்பெறுவதுடன் மூட்டு வலிகள் நீங்கும்.

*பசலை

சதுப்பு நிலங்களில் வளரும் பசலைக்கீரை, நீர்ச் சத்து நிறைந்தது. இதில் கொடிப் பசலை, செடிப் பசலை, தரைப்பசலை போன்ற பல வகைகள் உண்டு. இதை சாப்பிடுவதால் இரும்புச் சத்துக் குறைபாடு அகலும். இது குறைந்த கலோரி உள்ள கீரை என்பதால் அனைத்து வயதினரும் இதைக் தாராளமாகச் சாப்பிடலாம். வைட்டமின் சத்துகள் அதிகமாகக் காணப்படுகிறது.

இதனை பருப்புச் சேர்த்து சமையல் செய்து உண்ண நீர் எரிச்சல், வாந்தி தீரும். இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் சீராகும். இதன் மூலம் ஆண்மைக் குறைபாடுகள் நீங்கும்.

*வல்லாரை

இது நீரோட்டம் நிறைந்த பகுதிகளின் அருகே படர்ந்து வளரும். இதற்கு யோசனவல்லி என்ற பெயரும் உண்டு. இது நரம்புகளை வலுவாக்கி ஞாபக சக்தியைப் பெருக்கும். இதனை பருப்புகளுடன் சேர்த்துச் சமைத்துக் கொடுக்கலாம். சித்த மருத்துவத்தில் வல்லாரை நெய் முக்கியமானதாக உள்ளது. இதனை பாலில் கலந்து கொடுக்க குழந்தைகளுக்கு ஏற்படும் கணைச்சூடு, மாந்தம் ஆகியவற்றுக்கு தீர்வு கிடைக்கும். வல்லாரை சாப்பிடுவதால் உடலுக்கு வன்மை அதிகரித்து நோய் அணுகாமல் காக்கும்.

இன்றைய சூழலில் பலரும் உடல் நலத்துடன் வாழவும், உறுதியான உடல்வாகு பெறவும் இணை உணவுகள்( டயட்டெரி சப்ளிமெண்ட்) என்று விற்கப்படும் மருந்துகளை வாங்கிச் சாப்பிடுகிறார்கள். அதை தவிர்த்துவிட்டு, இயற்கையாக விளையும் கீரைகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டால் அதற்கு இணையான வேறு இணை உணவுகள் எதுவும் தேவையில்லை.

தொகுப்பு: பொ. பாலாஜிகணேஷ்