Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

கிராம்பின் பயன்கள்!

நன்றி குங்குமம் டாக்டர்

சமையலுக்கும், கறிகளுக்குச் சுவையூட்டவும், கறி மசாலா வகைகள் தயாரிக்கவும் முக்கிய இடம் பிடிக்கும் கிராம்பு ஏராளமான மருத்துவ குணங்கள் கொண்டது. மேலும் கிராம்பு வாசனைத் தயாரிப்பு, சோப்புத் தயாரிப்பிலும் பயன்படுகிறது.

கிராம்பில் கார்போ ஹைட்ரேட், ஈரப்பதம், புரதம், வாலடைல் எண்ணெய், கொழுப்பு, நார்ப்பொருள், மினரல், ஹைட்ரோகுளோரிக் அமிலச் சாம்பல்கள், கால்சியம், பாஸ்பரஸ், தயமின், ரிபோ பிளேவின், நயாசின், வைட்டமின் -சி மற்றும் ஏ போன்றவை உள்ளன. கிராம்பின் மொட்டு, இலை, தண்டு போன்றவற்றிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது.கிராம்பில் பலவித மருத்துவ குணங்கள் உள்ளன. இவை பெரும்பாலும் ஊக்கு வித்தல், தூண்டுதல் உண்டாக்கும் பொருளாக உள்ளது. பல வலிகளைப் போக்குவதுடன் வயிற்றுப் பொருமல் போன்றவற்றுக்கும் மிகச் சிறந்த நிவாரணி.

ஜீரண உறுப்புகளில் சுரக்கும் நொதிகளை கிராம்பு ஊக்குவிக்கிறது. இதனால் ஜீரணக்கோளாறுகள் நீங்குகின்றன.கிராம்புப் பொடியை வறுத்து அரை கிராம் தேனில் குழைத்து சாப்பிட்டால் வாந்தி நிற்கும். கிராம்பில் உள்ள விறைக்கப் பண்ணும் ஒரு பொருள் வயிற்றிலுள்ள சில உறுப்புகளை விறைப்படையச் செய்து வாந்தியைத் தடுக்கிறது.

சிறிது சமையல் உப்புடன் கிராம்பை சப்பிச் சாப்பிட்டால் தொண்டை எரிச்சல், கரகரப்பு நீங்கி தொண்டை சரியாகும். தொண்டை அடைப்பால் ஏற்படும் எரிச்சலைத் தவிர்க்க, சுட்ட கிராம்பு மிகச் சிறந்தது.கிராம்பு எண்ணெய் மூன்று துளியுடன் தேன் மற்றும் வெள்ளைப்பூண்டுச் சாறு சேர்த்து படுக்கைக்குப் போகும் முன்பு சாப்பிட ஆஸ்துமாவால் ஏற்படும் சுவாசக் குழல் அழற்சி சரியாகும்.

முப்பது மில்லி நீரில் ஆறு கிராம்புகளைப் போட்டு கொதிக்க வைத்து அந்தக் கசாயத்தில் தேன் கலந்து குடித்தால் ஆஸ்துமா கட்டுப்படும். கிராம்புப் பொடியை பற்பொடியுடன் கலந்து பயன்படுத்தி வர, வாய் நாற்றம், ஈறு வீக்கம், பல்வலி ஆகியவை குணமாகும். கிராம்பு எண்ணெயை பாதிக்கப்பட்ட ஈறுகளில் தடவிவர குணம் கிடைக்கும்.

3-5 துளி நல்லெண்ணெயில் ஒரு கிராம்பை சூடு காட்டி அந்த எண்ணெயை வலியுள்ள காதில் இட்டால் சுகம் கிடைக்கும்.தசைப்பிடிப்புள்ள இடத்தில் கிராம்பு எண்ணெயைத் தடவி வர குணம் கிடைக்கும். கிராம்பு மற்றும் உப்பை பசும்பாலில் அரைத்து அந்தப் பசையைத் தடவினால் தலைவலி பறந்துவிடும். தலையிலுள்ள நீரை உப்பு உறிஞ்சி எடுப்பதால் தலைபாரம் குறைந்து குணம் கிடைக்கிறது.கண் இமைகளில் ஏற்படக்கூடிய அழற்சிகளை போக்க கிராம்பை நீரில் உரசி அந்த நீரைப் பயன்படுத்தினால் குணம் கிடைக்கும்.