நன்றி குங்குமம் தோழி
‘‘உடலையும் மனதையும் இணைத்து ஒருவரின் ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்தும் அற்புதமான கலை நமது பாரம்பரியமிக்க யோகக்கலை என்றால் அது கொஞ்சமும் மிகையாகாது. யோகா செய்வதன் மூலம் ஒருவரது உடல் தோற்றம் அழகாகிறது, மன அமைதி கிடைக்கிறது’’ என்கிறார் பிளாரன்ஸ் ஹெலன் நளினி. உலக பிரபஞ்ச அழகிப் பட்டம் பெற்றிருக்கும் இவர் உளவியலாளர், தொழில்முனைவோர், எழுத்தாளர், மொழியியலாளர் மற்றும் யோகா பயிற்சியாளர் என பன்முகங்களை கொண்டவர். யோகா மீதிருந்த ஆர்வம் காரணமாக சென்னை பல்கலைக்கழகத்தில் டிப்ளமோ இன் யோகா படித்துள்ளார்.
யோகா மீது ஆர்வம்...
2021ம் ஆண்டு இந்தியாவில் கொரோனா பாதிப்பு உச்சக்கட்டத்தை அடைந்திருந்தது. கொரோனா மற்றும் நிமோனியாவால் நான் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தேன். உயிர் பிழைப்பேனா என்று நினைத்தேன். கிட்டத்தட்ட மரணத்தின் வாசலை தொட்டு விட்டு நான் இன்று உயிரோடு நடமாடிக் கொண்டிருக்க காரணமாக இருந்தது நான் பயின்ற யோகாசனக் கலைதான். அந்த சமயத்தில் யோகாசனம் மற்றும் பிராணாயாமம் பயிற்சிகளை மேற்கொண்டேன். எனது கணவரும், மகள்களும் எனக்கு மேலும் ஊக்கம் கொடுத்தார்கள். இதெல்லாம் சேர்ந்துதான் கொடிய நோயை எதிர்த்து போராடி மீண்டு வந்தேன். அதன்பிறகு நடனம், உடற்பயிற்சி, நீச்சல், யோகா என என்னை முழுவதுமாக தயார்படுத்திக் கொண்டு உலக அழகிப் போட்டிகளில் கலந்து கொண்டேன்.
அழகிப் போட்டி...
2022ம் ஆண்டு அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி நகரில் நடைபெற்ற திருமதி உலக பிரபஞ்ச அழகிப் போட்டியில் இந்தியா சார்பாக பங்கேற்றேன். இதில் ஒவ்வொரு சுற்றிலும் சிறப்பாக செயல்பட்டதால், ‘Miss International World People’s Choice Winner 2022’ என்ற பட்டத்தை வென்றேன். இந்தப் பட்டத்தினை நான் சுலபமாக வென்றிடவில்லை. 3,000 பேர் இந்தப் போட்டியில் பங்கு பெற்றனர். அதில் இறுதியாக 52 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அதில், தமிழகத்தில் இருந்து தேர்வானது நான் மட்டுமே. ‘கிளாமரஸ் அச்சீவர்’ என்ற துணைப் பிரிவிலும் ஒரு பட்டம் வென்றேன்.
அழகுக்கலையில் யோகா...
அழகுக்கும் ஆரோக்கியத்திற்கும் யோகாவிற்கும் நிறைய தொடர்புகள் உண்டு. யோகா செய்வதன் மூலம் தூக்கமின்மை குறைபாடு நீங்கி, உடலுக்கு போதுமான ஓய்வும் நல்லதொரு தூக்கமும் கிடைக்கும். நன்றாக தூங்கினாலே முகம் பிரகாசமாக இருக்கும். யோகாசனங்கள் செய்வதால், தசைகள் வலுவடையும், உடல் அமைப்பு மேம்படும். உடல் தோற்றமும் எழிலாகும். தியானம் மற்றும் பிராணாயாமம் மன அழுத்தத்தினை குறைத்து மன அமைதியை தரும். இதனால் நம் தோற்றம் பொலிவுடன், புத்துணர்ச்சியுடன் காணப்படும். யோகாசனங்கள் நமது உடலின் நெகிழ்வுத் தன்மையை அதிகரிக்க செய்கிறது, உடல் அசைவினையும் எளிதாக்குகிறது. பொதுவாகவே பெண்களுக்கு வயதானாலும், அழகு குறித்த உணர்வு அதிகமாக இருக்கும். சருமம் பளபளப்பாகவும், இளமையாக இருக்க விரும்புவார்கள். அதனை யோகாசனம் மூலம் பெறலாம். ஒவ்வொரு காலகட்டத்திலும் தனிப்பட்ட பயிற்சிகள் செய்ய வேண்டும். நின்ற நிலை, குப்புறப்படுத்த நிலை, மல்லாக்கப்படுத்த நிலை, உட்கார்ந்த நிலை மற்றும் படுத்த நிலை என அவரவரின் தேவைகளுக்கு ஏற்ப மேற்கொள்ளலாம். இவை வயிற்றுப் பகுதிக்கு தேவையான ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். பிராணாயாமம் செய்வதன் மூலம் சுவாசம் சீரடையும். மேலும், சருமம் பொலிவடையும். ஒருவரின் உள்மன ஆன்மாவை அமைதிப்படுத்துவதால், உள்ளார்ந்த அழகை வெளிப்படுத்த இயலும்.
யோகா செய்யக்கூடிய நேரம், காலம்...
நினைக்கும் நேரத்தில் யோகாசனம் செய்ய முடியாது. அதிகாலையில் ஆக்சிஜன் நிறைந்திருக்கும் வேளையில் யோகாசனம் செய்வதே நமது உடலுக்கும் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது. நடைப்பயிற்சி மேற்கொள்வதால், தசைகள் வலுவடையும். அதேபோல் யோகா பயிற்சியில் உள்ளுறுப்புகள் வலுவடையும், அகச்சுரப்பிகளை துாண்டி ஆரோக்கியமாக செயல்படுத்த உதவும். இயங்காத தசைகளையும் யோகா மூலம் செயல்படுத்த முடியும். யோகாசனம், பிராணாயாமம் என தினமும் 40 நிமிடம் செய்யலாம். காலையில் செய்ய முடியாதவர்கள் மாலையில் பயிற்சியினை மேற்கொள்ளலாம்’’ என்று கூறும் பிளாரன்ஸ் ஹெலன் நளினி, தமிழகத்தில் செயல்படும் வுமன் எம்பவர்மென்ட் என்ற அமைப்பின் தலைவராக செயல்பட்டு வருகிறார். இதன் மூலம் தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் உள்ள பெண்கள் முன்னேறுவதற்கான தொழிற் சார்ந்த ஆலோசனைகள் மற்றும் உதவிகளை வழங்கி வருகிறார். பின் தங்கிய கிராமத்தில் உள்ள குழந்தைகளுக்கு கல்வி விழிப்புணர்வினை ஏற்படுத்துவது என சமூக சேவையிலும் ஈடுபட்டு வருகிறார்.
தொகுப்பு: தனுஜா ஜெயராமன்