Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

உஷார் மழைக்காலம் தொடங்கி விட்டது!

நன்றி குங்குமம் தோழி

மழைக்காலம் மற்றும் குளிர்காலம் வந்து விட்டாலே வீட்டில் ஒருவருக்காவது ஜுரம் வந்து விடும். இதற்கு காரணம் மழை மற்றும் குளிர் காலத்தில் நுண்கிருமிகளின் தாக்குதல் அதிகமாக இருக்கும். நோய் தொற்றை எதிர்த்துப் போராடக்கூடிய எதிர்ப்பு சக்தி உடலில் இல்லை எனும் போது உடனே நோய் தாக்குதல் ஏற்படுகிறது. குளிர், மழைக்காலங்களில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க கீழ்க்கண்ட உணவுகளை உட்கொண்டால் சளி, இருமல், காய்ச்சல் போன்றவற்றில் இருந்து தப்பிக்கலாம்!

*சமையலில் மஞ்சள், சீரகம், சோம்பு, மிளகு, கசகசா, இஞ்சி, பூண்டு, வேப்பம்பூ ேபான்றவற்றை நிறையவே சேர்த்துக் கொள்ளலாம். இவை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

*வெது வெதுப்பான நீரில் சில துளசி இலைகளை போட்டு பருகலாம்.

*கேரட், பீட்ரூட், ஆப்பிள், மாதுளைப் போன்ற அடர் நிறங்களைக் கொண்ட பழங்களை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

*கிரீன் டீ, மூலிகை டீ போன்றவற்றையும் அவ்வப்போது குடிக்கலாம்.

*பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

*சாப்பிடும் உணவுகள் சூடாக இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

*வைட்டமின் ‘சி’ சத்துள்ள உணவுப் பொருட்களை அதிகம் எடுத்துக் கொள்வது அவசியம்.

*தேன் சிறிது எடுத்துக் கொள்வது வறட்டு இருமல், சளி ஆகியவற்றை கட்டுப்படுத்தும்.

*உணவில் மிளகுப் பொடியை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.

*இரவு தூங்குவதற்கு முன் பாலில் மஞ்சள் தூள், மிளகுத் தூள், பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிடலாம்.

*தண்ணீரை கொதிக்க வைத்து, ஆறவைத்து குடிக்க வேண்டும்.

*வெதுவெதுப்பான நீரில் 1 ஸ்பூன் தேன், ½ மூடி எலுமிச்சைச் சாறு பிழிந்து பருகினால் தொண்டை கரகரப்பு சரியாகும்.

*சித்தரத்தை சிறிது, மிளகு 10, சுக்கு சிறு துண்டு, அதிமதுரம் சிறிது இவற்றைப் பொடியாக்கி 2 டம்ளர் தண்ணீரில் சேர்த்து 1 டம்ளராகக் காய்ச்சி பனங்கற்கண்டு சேர்த்து 2 நாளுக்கு இரு வேளை சாப்பிட இருமல் சரியாகும்.

*அரிசி திப்பிலியை லேசாக வறுத்து, நன்கு பொடி செய்யவும். ஒரு தேக்கரண்டி பொடியில் தேன் கலந்து காலை, மாலை என இரு வேளை உட்கொள்ள சளி சரியாகும்.

தொகுப்பு: குப்பம்மாள், கிருஷ்ணகிரி.