Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மூலநோய்க்கு ஆயுர்வேத தீர்வு!

நன்றி குங்குமம் டாக்டர்

மனிதனை தாக்கும் பல்வேறு நோய்கள் இருந்தாலும் அதில் சில மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தக்கூடியவையாக இருக்கின்றன. அதில் ஒன்றுதான் இந்த மூல நோய். இதனாலேயே தான் ஆயுர்வேதத்தில் இவ்வியாதி அர்ஷஸ் என்று அழைக்கப்படுகின்றது. அர்ஷஸ் என்றால் ஒரு ஜென்ம எதிரியைபோல நம் உடலைச் சித்திரவதை செய்யக்கூடிய நோய் என்று பொருள். இது மலக்குடலின் உள்ளே அல்லது ஆசனவாயின் விளிம்பிலே வீங்கிய நரம்புகளைக் குறிக்கும். மலம் உடலை விட்டு வெளியேறும் இடத்தில் அவை தோன்றும். சில நேரங்களில் மலம் கழிக்கும்போது ரத்தப்போக்கை ஏற்படுத்தும்.

இதன் பொருட்டு மிகுந்த வலியையும் உண்டாக்கும். இன்றைய சூழ்நிலையில் மூலநோய் மிகவும் பொதுவான பிரச்னையாக இருக்கின்றது. ஆங்கிலத்தில் பைல்ஸ் என்று அழைக்கப்படுகின்றது. பல காரணங்களால் மூலநோய் ஏற்படக்கூடும். இருப்பினும் முக்கியமான ஒன்று நாள்பட்ட மலச்சிக்கல். இன்றைய நவீன காலத்தில் உணவுமுறை மாற்றங்களால் இளைஞர்கள் மற்றும் குழந்தைகளையும் கூட இந்த மூலநோய் பாதிக்கிறது.

முறையான உணவு மற்றும் வாழ்க்கைமுறைப் பழக்கவழக்கங்களை புறக்கணிப்பது, செரிமானத் தீயை (அக்னி) குறைத்து, மந்தாக்னி எனப்படும் நிலையை உண்டாக்குகிறது. இதனால் ஆசனவாய்ப் பகுதியில் தொந்தரவுகள் தோன்றி மூலநோயை உருவாக்குவதாக ஆயுர்வேதம் கூறுகிறது.

மூலநோய் ஏற்பட காரணங்கள்

மூல நோய்க்கு முதன்மையான காரணம் மலச்சிக்கல், அதற்கு பொதுவான காரணம் மாறிய உணவு மற்றும் வாழ்க்கைமுறைதான்.உடல்நலத்தை கவனித்துக் கொள்ளாது இருத்தல், உடற்பயிற்சி செய்யாது இருத்தல், மசாலாப் பொருள்களை அதிக அளவில் உட்கொள்ளுதல், எண்ணெய் நிறைந்த உணவை உட்கொள்ளுதல் போன்ற செயல்கள் மூலநோய்க்கு வழி வகுக்கிறது.

அதிக நேரம் உட்கார்ந்து வேலை செய்பவர்களுக்கு மூலநோய் வரலாம். கர்ப்பகாலத்தில் சில பெண்களுக்கு மூலநோய் வரலாம்.

மதுப்பழக்கம், புகைப்பழக்கம் மற்றும் சரியான நேர்த்தில் உணவு எடுத்துக் கொள்ளாதவர்களுக்கும் மூலநோய் வருவதுண்டு.உடலில் அதிக வெப்பம் உடையவர்களுக்கும் மூலநோய் உருவாக ஒரு முக்கியமான காரணமாகும்.

மூலநோயின் வகைகள்

மூலநோய் முக்கியமாக இரண்டுவகை, அவை இடம் பொறுத்து உள் அல்லது வெளிமூலம் என வகைப்படுத்தப்படுகின்றன.

உள்மூலம்

இதில், ஆசனவாய் உள்ளே மூலம் தோன்றி குடல் இயக்கத்தின்போது இந்த மூலம் உடைந்து ஆசனவாய் வழியே ரத்தம் கசியத் தொடங்கலாம். இதனால் அதிக வலி உண்டாக்கும். இந்த வகையில் நாம் வீக்கத்தை காணமுடியாது. ஆனால் அதை உணர முடியும். வெளிமூலம், ஆசனவாய் வெளியில் மூலம் தோன்றும், அதில் வலி எதுவும் ஏற்படுவதில்லை. எனினும், மலம் கழிக்கும்போது அதிக அரிப்பு மற்றும் வலி ஏற்படலாம். இந்த வகையில் வீக்கத்தை காண முடியும்.

மூலநோய் அறிகுறிகள்

மலம் கழிக்கும்போது ரத்தம் வெளியேறக்கூடும். இந்த ரத்தப்போக்கு பொதுவாக வலியற்றது.மலச்சிக்கல் மற்றும் ரத்தப்போக்கு, மலம் ஆட்டுப்புழுக்கைப் போல் இறுகியதாக இருப்பதனால் ஏற்படுகிறது.சில நேரங்களில் மலம் கழிக்கும்போது மிகுந்த வலி எரிச்சல் ஏற்படக்கூடும். ஆசனவாயிலிருந்து சதை வெளித்தள்ளுதல் ஏற்படும்.

அடிக்கடி சிறுகச் சிறுக வயிறு மற்றும் ஆசனவாயில் வலி.மலவாய் திறப்பில் இருந்து சில நேரங்களில் சளி போல் வெளியேறும்.மலவாயை சுற்றிய பகுதியில் அரிப்பு, சிவத்தல் அல்லது வேதனை ஏற்படும். இவை தவிர, சுஷ்கர்ஷாஸ் (உலர்ந்த மூலம்) மற்றும் ரக்தர்ஷஸ் மூலத்துடன் ரத்தம் வடிதல்) ஆகியவற்றின் குறிப்பிட்ட அறிகுறிகள் பின்வருமாறு.

சுஷ்கர்ஷாஸ் (உலர்ந்த மூலம்) பொதுவாக ரத்தம் வராத மூலநோய் சுஷ்கர்ஷாஸ் எனப்படும். வாயு மற்றும் கபம் ஆகியவற்றின் ஆதிக்கத்தால் இந்த வகையான மூலநோய் ஏற்படுகிறது. ரக்தர்ஷஸ் மூலத்துடன் ரத்தம் வடிதல் ரக்தர்ஷஸ் என்பது பித்தம் மற்றும் ரத்தத்தின் ஆதிக்கத்தால் ஏற்படும் மூலநோய், இந்த நிலையில், திடீரென மலத்துடன் ரத்தம் வெளிப்படும். சில நேரங்களில் ரத்த சோகை போன்று சிக்கல்களுக்கும் வழிவகுக்கும்.

சிகிச்சை முறைகள்

மூலநோய்க்கு பயனுள்ள சிகிச்சையாக உணவை நிரந்தரமாக கட்டுப்படுத்த வேண்டும். உணவில் நார்ச்சத்து சேர்க்க வேண்டும். மலச்சிக்கல் பிரச்னையை சரிசெய்ய இவை உதவும். ஆயுர்வேதத்தில் மூலநோய்க்கு நிரந்தர தீர்வுகிடைக்கும். மலச்சிக்கலை போக்கவும் செரிமானத்தை சரி செய்யுவும். வலியை குறைக்கவும். பின்பு மலம் சீராக வெளியேறவும் ஆயுர்வேதத்தில் பல மருந்துகள் உள்ளன.

பொதுவான வீட்டு வைத்தியம் (ஒற்றை மருந்துகள்)

திரிபலா பொடி - 10 கிராம், ஒரு நாளைக்கு இரண்டுமுறை மோர் சேர்த்து சாப்பிட வேண்டும்.ஓமம் 1 கிராம் மற்றும் பிளாக் சால்ட்- 1 கிராம், ஒரு நாளைக்கு இரண்டுமுறை மோர் சேர்த்து சாப்பிட வேண்டும்.16 கிராம் துத்திப் பொடியை ஒரு நாளைக்கு இரண்டுமுறை எடுத்துக் கொள்ள வேண்டும்.மாதுளைப் பழத்திலிருந்து பெறப்பட்ட புதிய சாறு - 14 மில்லி, 5 முதல் 10 கிராம் வரை எடுத்துக் கொள்ள வேண்டும். சர்க்கரை ஒரு நாளைக்கு இரண்டுமுறை. கடுக்காய்த் தோலை பொடிசெய்து - 1முதல் 3 கிராம் வரை, 50 மி.லி. சூடான நீர், ஒரு நாளைக்கு இரண்டுமுறை. மாதுளைத் தோல் - 12 கிராம். சம அளவு சர்க்கரையுடன் ஒரு நாளைக்கு இரண்டு முறை எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஆயுர்வேத மருந்துகளான துஸ்பர்ஷகாதி, சிறுவில்வாதி, லசுன ஏரண்டாதி, சுகுமாரம், கந்தர்வஹஸ்தாதி, புனர்ணவாதி வாரணாதி ஆகிய கஷாயங்களும் அபயாரிஷ்டம், மிருத்விகாரிஷ்டம், தந்த்யாரிஷ்டம், விடங்கரிஷ்டம் பஹுஷால குடம், கல்யாணகுடம், மணிபத்ர குடம், சூரணவலேஹம், ஹிங்குத்ரிகுண தைலம், வ்யாக்ரியாதி லேஹம், சப்தவிம்ஷதி குங்குலு, திரிபலா சூர்ணம், அர்ஷோக்ன வடி, காங்காயன குடிகா, அர்ஷகூடார ரசம் முதலிய மருந்துகளும் தகுதி வாய்ந்த ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனைப்படி எடுத்துக்கொள்ளலாம். வெளிப்புற மூலத்திற்கு ஆயுர்வேதத்தில் ஷார சூத்திரம் என்னும் ஒருமுறை பின்பற்றப்படுகிறது.மூலப் பிரச்னைகளுக்கு அவகாசம் சிட்ஸ் பாத் என்னும் ஆயுர்வேத சிகிச்சை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது தொற்றுநோயை தடுக்க சிறந்த வழியாகும். வீக்கத்தை குறைக்கும்.

தவிர்க்கும் முறைகள்

அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.

நீண்ட நேரம் உட்காருவதை தவிர்க்க வேண்டும்.

உட்காரும்போது மென்மையான இருக்கைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

மது, புகைப்பிடித்தல் மற்றும் துரித உணவுகளை தவிர்க்கவும்.

நார்ச்சத்து அடங்கிய உணவுகளை உட்கொள்வது மிகவும் முக்கியமாகும்.

உடல் உஷ்ணத்தை மேலும் அதிகப்படுத்தும் கார உணவுகள், சிக்கன் மற்றும் ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளை உண்பதால் மலம் இறுகி மூலநோய் ஏற்பட்டுவிடும்.

தொகுப்பு: உஷாநாராயணன்