Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அசோக் செல்வன் ஃபிட்னெஸ் சீக்ரெட்ஸ்!

நன்றி குங்குமம் டாக்டர்

சூதுகவ்வும் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் அசோக் செல்வன். அதைத் தொடர்ந்து தெகிடி, ஓ மை கடவுளே, நித்தம் ஒரு வானம் என பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கென ஓர் இடத்தை தக்க வைத்துக் கொண்டவர் இவர். எந்தவொரு சினிமா பின்புலமோ, திரையுலக அனுபவமோ இல்லாமல், பலவித போராட்டங்களுக்கு பிறகு நடிகராகி, தன் திறமையால் ரசிகர்களின் கவனம் ஈர்த்த அசோக் செல்வன் நடிப்பில் சமீபத்தில் வெளியான பொன் ஒன்று கண்டேன் திரைப்படம் ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளது.

அதைத் தொடர்ந்து, விரைவில், பிரஷாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் ஜாக் மற்றும் பாலாஜி கேசவன் இயக்கத்தில் எமக்குத் தொழில் ரொமான்ஸ் ஆகிய திரைப்படங்கள் வெளிவர உள்ளது. இதுதவிர, அசோக்செல்வன் தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நடித்து வருகிறார். அசோக்செல்வன் தனது ஃபிட்னெஸ் ரகசியங்களை இங்கு பகிர்ந்துகொள்கிறார்.

ஒர்க்கவுட்ஸ்

கல்லூரி காலத்திலிருந்தே ஜிம்முக்கு போகும் பழக்கம் ஏற்பட்டுவிட்டது. அதுபோன்று முடிந்தளவு காலை 5.30 மணிக்கெல்லாம் எழுந்துவிடுவேன். அவ்வாறு எழுந்ததும் குறைந்தது ஒரு மணி நேரமாவது தவறாமல் உடற்பயிற்சிகள் செய்வதில் நேரத்தை செலவிடுவேன். ஷூட்டிங் காரணமாக வெளியூர் சென்றிருந்தாலும் ஒர்க் அவுட் செய்ய தவற மாட்டேன். என்னுடைய ஒர்க்கவுட்டில் கார்டியோ பயிற்சி, எடை பயிற்சி மற்றும் செயல்பாட்டு பயிற்சிகள் (டிரெட்மில் ஸ்பிரிண்ட்ஸ்) போன்றவை இருக்கும். மேலும், பைசெப்ஸ் மற்றும் கால்களுக்கு உடற்பயிற்சி செய்வதையும் வாரத்தில் ஆறு நாட்களும் செய்கிறேன். இந்த பயிற்சிகள் எல்லாம் என்னை ஃபிட்டாகவும் புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்க உதவுகிறது. இது தவிர, தினசரி காலையில் யோகா பயற்சி, ஓட்டம், சைக்கிள் ஓட்டுதல், நீச்சல் போன்ற பயிற்சிகளும் மேற்கொள்வேன்.

டயட்

பொதுவாக, உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள நாம் உடற்பயிற்சிக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறேமோ அதே அளவு உணவு பழக்கத்திலும் நிச்சயம் கவனம் செலுத்த வேண்டும். அப்போதுதான் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள முடியும். அதுபோன்று, படத்துக்கு படம் தேவையான உடலமைப்பை கூட்டவும், குறைக்கவும் கூட உணவுமுறை அடிப்படையாக இருக்கிறது. அதனால், ஒரு படம் கமிட் ஆனதும் அந்த கேரக்டருக்கு தேவையான உடல்வாகை பெற உணவு பழக்கங்களை மேற்கொள்வேன். அதுபோன்று, அந்தப்படம் முடிந்ததும், மீண்டும் உடற்பயிற்சிகள், உணவுக் கட்டுப்பாடு மூலம், உடலை பழைய நிலைக்கு கொண்டு வந்துவிடுவேன்.

அந்த வகையில், எனது பொதுவான டயட் என்று எடுத்துக் கொள்ளும்போது, அதிக புரதம், குறைந்த கார்ப்போ ஹைட்ரேட் மற்றும் குறைந்த கொழுப்புள்ள உணவுகள் அடங்கிய ஒரு உணவுத் திட்டத்தை பின்பற்றுகிறேன். அதுபோன்று, காலையில் எழுந்ததும் மூன்றில் இருந்து நான்கு டம்ளர் வெதுவெதுப்பான நீரை கட்டாயம் அருந்திவிடுவேன். பின்னர், ஜிம்முக்கு செல்வதற்கு முன்பு அவித்த முட்டை மற்றும் பழங்கள் எடுத்துக் கொள்வேன். பிறகு பயற்சிகள் எல்லாம் முடிந்து வீடு திரும்பியதும். சிறிது ஓய்வு எடுத்துக் கொண்டு, பிறகு காலை உணவை எடுத்துக் கொள்வேன். அதில் பெரும்பாலும், காலை உணவாக பருப்பு வகைகள் மற்றும் ஓட்ஸில் சமைத்த உணவுகள் அதிகம் எடுத்துக் கொள்வேன்.

மதிய உணவாக, கிரீல்ட் வெஜிடபிள் மற்றும் சாலட் வகைகள் நிச்சயம் இருக்கும். இது தவிர, பிடித்த உணவு என்றால், வீட்டில் அம்மா சமைக்கும் உணவுகள் எல்லாமே ரொம்ப பிடிக்கும். அதிலும் அம்மாவின் கைப்பக்குவத்தில் மீன் குழம்பும் கடல் உணவுகளும் ரொம்ப ரொம்ப பிடித்த உணவுகளாகும். இரவில் அரிசி சாதத்தை தவிர்த்துவிட்டு, சாப்பாத்தி, ரொட்டி - சப்ஜி போன்றவற்றை எடுத்துக் கொள்கிறேன்.

டயட் கன்ட்ரோலில் இருக்கும்போது முடிந்தளவு அசைவ உணவுகளை தவிர்த்துவிடுவேன். ஷூட்டிங் சமயத்திலும் அசைவ உணவுகளை அதிகமாக உட்கொள்ள மாட்டேன். அதுபோன்று, வெளியூர் பயணங்கள் செல்லும்போது மட்டுமே ஹோட்டல் உணவுகளை சாப்பிடுவேன். மற்ற நேரங்களில் பெரும்பாலும் ஹோட்டல் உணவுகளை தவிர்த்துவிட்டு, முறையாக சமைத்த வீட்டு உணவுகளைத்தான் சாப்பிடுவேன். ஏனென்றால், வீட்டில் நம்முடைய ஆரோக்கியத்துக்காக பார்த்து பார்த்து சமைப்பார்கள் என்பதால், அது நமது உடலுக்கு எந்த தீங்கையும் விளைவிக்காது.

தொகுப்பு: ஸ்ரீதேவிகுமரேசன்