நன்றி குங்குமம் தோழி
நமது பாரம்பரியத்தின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாகக் கருதப்படுவது விருந்தோம்பல். திருக்குறளில் கூட ஒரு அதிகாரமாகவே வைத்து இதனை திருவள்ளுவர் பாடிஇருப்பதை பார்க்கலாம். இப்படிப்பட்ட விருந்தோம்பலில் கடைபிடிக்கப்படும் முக்கியமான ஒரு பழக்கம், வரும் விருந்தினருக்கு உணவில் முக்கிய உணவாக இனிப்பு உணவினை அளிப்பது. சிலர் அவ்வாறு அளிக்கப்படும் இனிப்பினை உணவு அருந்தும் முன்பாகவும், சிலர் உணவு அருந்திய பிறகும் சாப்பிடுவதை பார்க்கலாம்.
இந்நிலையில் அறிவியல் ரீதியாக இனிப்பு உணவினை எவ்வாறு சாப்பிட்டால் உடலுக்கு நல்லது என்று தெரிந்து கொள்வது அவசியமாகிறது. அதாவது, இனிப்புப் பொருட்களை உணவுடன் முதலில் சாப்பிட்டால் என்ன ஆகும்? கடைசியில் சாப்பிட்டால் என்ன ஆகும்? இனிப்பு உணவு என்னென்ன மாறுதல்களை நமது உடலில் ஏற்படுத்தும் என்பனவற்றையெல்லாம் தெரிந்து கொள்வோம், வாருங்கள்.
இனிப்புச் சத்தின் அறிவியல்...
அறிவியல் படி நாம் உண்ணும் சர்க்கரை சத்தினை (Carbohydrates) மூன்றாகப் பிரிக்கலாம். அதாவது,
1. மாவுச்சத்து: இதனை ஆங்கிலத்தில் குளுக்கோஸ் (Glucose) என்போம். இட்லி, தோசை, சாதம் போன்றவை உதாரணங்கள்.
2. இனிப்புச் சத்து: இதனை ஃப்ருக்டோஸ் (Fructose) என்போம். பழங்களில் இருந்து கிடைக்கும் சத்து.
3. நேரடி சர்க்கரை சத்து: இதனை சுக்ரோஸ் (Sucrose) என்போம். நேரடியாக சர்க்கரையிலிருந்து கிடைப்பது.
இந்த மூன்றில் இருந்தும் நமக்குக் கிடைப்பது உடனடியான ஆற்றல் (Instant Energy). அதாவது, நாம் நடக்க, பேச, தூங்க என நம் உடலில் அனைத்து செல்களும் இயங்க உதவுகிறது. இந்த உணவுகளை உட்கொள்வதன் மூலம் ஜீரணம் பெற்று ரத்தத்தில் சர்க்கரை சத்தாக (Glucose) கலந்து நமக்கு ஆற்றலாக மாறுகிறது.
உடனடி மாற்றங்கள் என்னென்ன...
* மேலே சொன்ன சர்க்கரை சத்துகளில் எது ஒன்றை நாம் எடுத்துக் கொண்டாலும் உடனடியாக குளுக்கோஸ் அதிகமாகிறது.
* இதனால் ரத்தத்தில் சர்க்கரை சத்தாக சேர்ந்து ரத்த சர்க்கரை அளவு அதிகமாகிறது.
* இதன் காரணமாக நமது கணையம் இன்சுலினை அதிகமாக சுரக்க வேண்டிய சூழலில் உள்ளது.
* மேலும் இரண்டு மணி நேரம் கழித்து மீண்டும் நமக்கு அதே போன்ற பசி உணர்வு ஏற்படுவதோ, ஏதேனும் இனிப்பு உணவை சாப்பிட வேண்டும் என உந்துதல் (Sugar Cravings) ஏற்படுவதோ நிகழ்கிறது.
* நம் மூளை கட்டாயத்தின் அடிப்படையில் மீண்டும் மீண்டும் நம்மைத் தூண்டி இனிப்பு உணவுகளை உண்ணச் சொல்கிறது.
* இதை ஒரு தொடர்ச்சியாக ஒரு நாள் முழுக்க தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதே சங்கிலி செயல் (Chain Reaction) அடுத்த நாளும் தொடர்கிறது.
பக்க விளைவுகள்...
* நமக்கு அடிக்கடி சர்க்கரை உணவுகளை உண்ண வேண்டும் என ஆசை வருவது.
* மேலும் மேலும் நமது மூளை இனிப்புச் சத்துக்கு அடிமையாகி இனிப்புச் சத்தினை கேட்பது.
* இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை நமக்கு பசி இல்லை என்றாலும் கூட நாம் ஏதேனும் சாப்பிட்டுக் கொண்டே இருப்பது.
* மூளை ‘தற்சமய மந்தம்’ (Brain Fog) ஆவது.
இவ்வாறு தொடர்ச்சியாக செய்வதால் அது மூளைக்கு பழக்கப்பட்டு இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை நம்மை தொடர்ந்து நிர்ப்பந்தப்படுத்தி ஹார்மோன்களை வெளி சுரக்கிறது. இதனால் மீண்டும் மீண்டும் நாம் ஒரு சங்கிலியை போன்று திரும்பத் திரும்ப இனிப்புப் பொருட்களையே ஒரு நாள் முழுவதும் உண்டு கொண்டே இருக்கிறோம். பின் தினமும் தொடர்ந்து கொண்டிருக்கிறோம்.
வரும் நோய்கள்...
சர்க்கரை நோய், ரத்தத்தில் அதிக சர்க்கரை அளவு, இன்சுலின் எதிர்ப்புத் தன்மை, முறையற்ற மாதவிடாய் சுழற்சி, கர்ப்பம் தரிக்க தாமதமாவது, தைராய்டு ஹார்மோன்களில் சமச்சீரற்ற தன்மை நிலவுவது, பி.சி.ஓ.டி. எனும் கர்ப்பப்பை நீர்க்கட்டி, உடல் பருமன், சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலையான ‘பிரி டயபடீஸ்’ (Pre Diabetes), உடல் சோர்வு, ரத்தத்தில் அதிக கொழுப்பின் அளவு, கொழுப்படைந்த கல்லீரல் (Fatty Liver), இளமையிலேயே வயதான தோற்றம், ஞாபக சக்தி குறைவது, நிலையான மன நிலை (Mood Swing) இல்லாமல் இருப்பது. இதனால் அடிக்கடி மற்றவர்கள் மீது கோபப்படுவது, எரிச்சல் அடைவது, வயிற்றை சுற்றி அதிக கொழுப்பு படிவது. அதாவது, தொப்பை உருவாகுவது.
தீர்வுகள்...
* இனிப்புச் சத்தினை கடைசியாகவே உண்ண வேண்டும்.
* எந்த வகையான விருந்தாக இருந்தாலும் சரி, சாதாரணமாக வீட்டில் சாப்பிட்டாலும் சரி, இனிப்புச் சத்து, மாவுச்சத்தினை கடைசியாகத்தான் உண்ண வேண்டும்.
* முதலில் நாம் நார்ச்சத்து அல்லது புரதச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.
* பழங்களை உண்ணும் நபராக இருந்தால் அதனையும் கடைசியாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். பந்தியில் எப்பொழுதும் இனிப்புப் பண்டத்தையும், பழத்தையும் கடைசியாகத்தான் உண்ண வேண்டும்.
புதிய டிப்ஸ்...
* வீட்டில் உணவருந்தினாலும் சரி, வெளியில் விருந்தில் அருந்தினாலும் சரி, ‘ஸ்டார்டர்ஸ்’ (Starters) என்று சொல்லப்படும் உணவுக்கு முன் அருந்தும் சிறு உணவுகளை உண்ணுவதை நாம் பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். ஆனால், நமது தேர்வு நார்ச்சத்து அல்லது புரதச் சத்தாக மட்டுமே இருக்க வேண்டும். இப்படி செய்யும் போது நாம் அதன்பின் சாப்பிடும் மாவுச்சத்து அதிக அளவில் இருந்தாலும் அது பொறுமையாகத்தான் ரத்தத்தில் கலக்கும்.
* ஒருவேளை அதிகமாக இனிப்பு சத்தினை நாம் எடுத்துக்கொண்டால், உணவு உண்ட பின் நடக்க வேண்டும். அதாவது, நம் வீட்டிலேயே 20 முதல் 30 தடவை தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கலாம். இதன் மூலம் ரத்தத்தில் கலக்கும் குளுக்கோஸ் உடனடியாக தசை செல்களுக்கு எரிபொருளாக சென்று சேரும். எனவே, ரத்தத்தில் உடனடியாக அதிகரிக்கும் சர்க்கரை அளவினை குறைக்கலாம்.
* அதேபோல நாம் மாவுச்சத்து உணவுகளை உண்டால், இரண்டு மணி நேரத்திற்கு பின் பசி வரும். இதனை ‘பொய் பசி’ என்று உணர்ந்து தண்ணீர் அருந்தலாம். கூடுமானவரை பசியினை கட்டுப்படுத்திக் கொண்டு நம் அடுத்த உணவு வேலை வரும் வரை காத்திருக்க வேண்டும். அல்லது அப்படியும் பெரும் பசி இருந்தால் மீண்டும் மாவுச் சத்து இருக்கும் பொருளினை விடுத்து ஏதேனும் புரதச்சத்து இருக்கும் உணவை உண்ணலாம். உதாரணமாக, மதியத்தில் நாம் நிறைய சாப்பாடு சாப்பிட்டுவிட்டு மேலும் பழங்கள், இனிப்பு எனச் சாப்பிட்ட பின் இரண்டு மணி நேரம் கழித்து நமக்கு பசிக்கும். அதனை சமாளிக்க மீண்டும் மாவுச்சத்து நிரம்பிய தின்பண்டங்களை உண்ணாமல் வேர்க்கடலை பர்பி போன்ற உணவுகளை மாலை தின்பண்டமாக எடுத்துக் கொள்ளலாம்.
* காலையில் அதிக எண்ணிக்கையில் இட்லியினை உண்ணும் போது அது நிறைய மாவுச்சத்தாக ரத்தத்தில் உடனடியாக கலக்கிறது. அதனால் நமக்கு மீண்டும் மூளையில் சமிக்கைகள் அனுப்பப்பட்டு இரண்டு மணி நேரத்திற்கு பின் பசி எடுக்கும். இந்த சுழற்சியினை நாம் தொடர விடக்கூடாது. அதனால் அதனை தடுக்க அடுத்த மதிய உணவை நாம் அதிக புரதச்சத்துடனும், நார்ச்சத்துடனும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இப்படி செய்வதன் மூலம் அந்த சுழற்சியினை உடைக்கிறோம். இதனால் நமது சர்க்கரை அளவு மீண்டும் சீராக அமைகிறது.எனவே அறுசுவையும் முக்கியம் என்பதை உணர்ந்து இனிப்புக்கு மட்டும் பெரும் நாட்டத்தினை ஒதுக்காமல் மீதி இருக்கும் ஐந்து சுவைகளுக்கும் நாம் கவனம் தர வேண்டியது அவசியமாகிறது. அதிலும் குறிப்பாக, இன்றைய உடல் உழைப்பு குறைந்த காலகட்டத்தில் இனிப்புச் சுவை என்பது மிக மிக குறைந்த அளவில் எடுத்துக் கொண்டாலே போதுமானதாக இருக்கிறது என்பதை ஒவ்வொருவரும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
மேலும், இன்றைக்கு கொண்டாட்டம் என்றாலே நாம் இனிப்பினை மட்டும்தான் தேடுகிறோம். அதில் தவறு இல்லை. ஆனால், அதனை எவ்வாறு சாப்பிட வேண்டும், எப்படி அளவோடு உண்ண வேண்டும் என்பதனை தெரிந்து கொண்டால் இன்னும் சிறப்பாக ஆரோக்கியத்தினை செம்மையாக வைத்திருக்கலாம். மொத்தத்தில் சுவையான தருணங்களிலும் உங்களின் இனிப்பை கடைசியாக உண்ணுங்கள்.
தொகுப்பு: நந்தினி சேகர்


