Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

செரிமானத்தை சரி செய்யும் சோம்புக்கீரை!

நன்றி குங்குமம் டாக்டர்

தமிழர் பாரம்பரியத்தில் சமையலிலும், மருத்துவத்திலும் தனித்துவமான இடத்தைப் பெற்றது சோம்பு. இதன் இலைகள் மணத்திலும், சுவையிலும் தனிச்சிறப்பினைப் பெற்றது. தமிழகத்தில் பெருஞ்சீரகம்தான் சோம்பு என பலராலும் அழைக்கப்படுகிறது. இவை நீளமான நீண்ட மெல்லிய கொத்துமல்லி இலைகளை ஒத்த இலைகளைக் கொண்டிருக்கும். இதன் தாவரவியல் பெயர் ஃபோனிக்குலம் வல்காரே. சோம்புக்கீரை அபியேசியே எனும் தாவரக் குடும்பத்தைச் சார்ந்தது.

இதில் சிறிய மஞ்சள் நிறத்திலான பூக்கள் காணப்படும். குறிப்பாக, மண்வளம் நிறைந்த இடங்களில் நன்கு வளரக்கூடியது.அதிக வெப்பமும், பனியும் இல்லாத சூழ்நிலையில் நன்கு வளரக்கூடியது. இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பரவிக் காணப்படும் சோம்புக்கீரை ஆசியா, ரஷியா மற்றும் வட அமெரிக்காவினை பூர்விகமாக கொண்டதாக திகழ்கிறது. குறிப்பாக எகிப்தியர்கள் வலியினை போக்குவதற்கும், கிரேக்க மக்கள் தூக்கமின்மை பிரச்னைக்கும் மருந்தாக பயன்படுத்தியதாக ஆய்வுகள் கூறுகின்றது. பண்டைய சங்க இலக்கியங்களிலும் சோம்பு மற்றும் அதன் இலைகள் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. இதன் சிறப்பினை அறிந்து சங்க காலத்திலிருந்தே தமிழர்களும் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

சோம்புக்கீரையில் காணப்படும் சத்துகள்

நார்ச்சத்து

விட்டமின் சி

விட்டமின் எ

கால்சியம்

இரும்புச்சத்து

பொட்டாசியம்

கிளைக்கோஸைடுகள்

ஸ்டிராய்டுகள் உட்பட பல்வேறு சத்துகளை கொண்டதாக சோம்புக்கீரை திகழ்கிறது.

சோம்புக்கீரையில் உள்ளடங்கிய இயற்கை வேதிப் பொருட்கள்

கட்ராவோவன், ஏபியால், கேம்ஃஸரால், குமாரின்கள், பிளேவோனாய்டுகள், சாந்தைன்கள் மற்றும் ட்ரை பெரிபினாய்டுகள் உள்ளிட்ட பல்வேறு தாவர மூலக்கூறுகளைக் சோம்புக்கீரை கொண்டுள்ளது. சோம்புக்கீரை சிறந்த மூலிகைத் தாவரமாக கருதப்படுவதற்கு இதுவே முக்கிய காரணமாகும்.

சோம்புக்கீரையின் மருத்துவ குணங்கள்

குடல் மற்றும் வயிற்றுப் பிரச்னைகளைச் சரிசெய்ய உதவுகிறது. செரிமானமின்மை, வயிற்றுவலி போன்ற பிரச்னைகளுக்கு சிறந்த மருந்தாகிறது.

இந்தக் கீரை குறைந்த அளவிலான கலோரியினை கொண்டுள்ளதால் உடல் எடையை குறைப்பதற்கு உதவுகிறது.சோம்புக் கீரையில் விட்டமின் சி நிறைந்துள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கவும், சருமம் தொடர்பான பிரச்னைகளைத் சரி செய்யவும் உதவுகிறது.

விட்டமின் ஏ சத்து சோம்புக் கீரையில் அதிகம் இருப்பதால் கண் சார்ந்த பிரச்னைகளுக்கு தீர்வாகிறது. இதிலிருக்கும் கால்சியம் சத்தானது எலும்பு வலிமையினை காக்க உதவுகிறது.

சோம்புக் கீரையில் இரும்புச்சத்து நிறைந்திருப்பதால் ரத்த சோகையைத் தடுக்க உதவுகிறது.சோம்புக் கீரையில் உள்ள பொட்டாசியம் சத்தானது ரத்த அழுத்தத்தினை கட்டுப்படுத்த உதவுகிறது.

பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலியைத் தடுக்க உதவுகிறது.

இந்தக் கீரையில் ஆன்டி ஆக்ஸிடன்டன்கள் அதிகமாக உள்ளதால் உடலில் தேங்கியுள்ள தேவையற்ற நச்சுக்களை நீக்க உதவுகிறது. மேலும், செல் சிதைவினை தடுக்கிறது.இதன் ஆன்டி - இன்பளமேட்டரி பண்புகள் மூட்டு வலியைக் குறைக்க உதவுகிறது.

சோம்புக் கீரை டீடாக்ஸ் பண்புகளைக் கொண்டது. இந்தக் கீரை புற்றுநோய் செல்களைத் தடுக்க உதவும் பைட்டோகெமிக்கல்களைக் கொண்டுள்ளதால் புற்றுநோயினைத் தடுக்க கூடியது.பல்வேறு தொற்று நோய்கள், காய்ச்சல் மற்றும் வறட்டு இருமல், சளி ஆகியவற்றைக் குணப்படுத்த சோம்புக் கீரை உதவுகிறது.பெண்களுக்கு பிரசவத்திற்குப் பிறகான காலத்தில் பத்தியச் சமையலுக்கு இது மிகவும் நல்லது. பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் உற்பத்தியை அதிகரிக்க உதவும்.சோம்புக்கீரை மற்றும் விதை இரண்டும் வயிற்றில் இருக்கும் வாயுக்களை நீக்கி செரிமானத்தை மேம்படுத்தும்.

சோம்புக் கீரையின் இலைகளை மென்று சாப்பிடுவது வாய்நாற்றத்தை குறைக்கும்.ஆயுர்வேத மருத்துவத்தில் சோம்புக் கீரை முக்கிய மூலிகையாகப் பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. சோம்புக் கீரை ஹார்மோன் சமநிலையைக் மேம்படுத்த உதவுகிறது. அதுபோன்று கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கவும் உதவுகிறது.இத்தகைய நன்மைகளைக் கொண்ட சோம்புக்கீரையை கீரைக் கூட்டு, பொரியல், கீரை ரசம், கீரை வடை, கீரைக் குழம்பு எனப் பல வகைகளில் சமையலில் பயன்படுத்தலாம். சோம்புக்கீரை சுவையும் மணமும் மட்டுமின்றி மருத்துவப் பண்புகளைக் கொண்ட இயற்கையளித்த அற்புதக்கீரை ஆகும். பாரம்பரிய உணவில் இதனை சேர்ப்பது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, இயற்கை மருத்துவத்திற்கும் உதவும்.

தொகுப்பு: உயிர்தொழில்நுட்பத் துறை முனைவர் ஆர். சர்மிளா