Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அம்மான் பச்சரிசி கீரையின் பயன்கள்!

நன்றி குங்குமம் டாக்டர்

உயிர்தொழில்நுட்பத் துறை முனைவர் ஆர். சர்மிளா

அம்மான் பச்சரிசி சாலை ஓரங்களிலும் தரிசு நிலப்பகுதிகளிலும் வளரக்கூடிய தாவரமாகும். இது மழைக்காலங்களில் நன்கு வளரக்கூடியது. பெரும்பாலும் நாம் அனைவராலும் அறியப்பட்ட செடியாக இருந்தாலும் ஒரு சிலருக்கே இதை கீரையாக சமையலில் பயன்படுத்தலாம் என்பது தெரிகிறது. நமது முன்னோர்கள் இந்த கீரையை மூலிகைத் தாவரமாகவும் பயன்படுத்தி வந்திருப்பது சிறப்புக்குரியதாகும். இது துவர்ப்பு மற்றும் இனிப்பு சுவையுடையது. இதற்கு சித்திரவல்லாதி, சித்திரப்பாலாவி, சித்திரப்பாலாடை ஆகிய பெயர்களும் உண்டு. மேலும், அம்மான் பச்சரிசியின் விதைகள் தோற்றத்திலும் சுவையிலும் சிறுசிறு அரிசிக் குருணைகள் போலிருப்பதால் ‘பச்சரிசி’ என்றும், தாய்ப்பால் பெருக்கும் உணவு என்பதால் அடைமொழியும் சேர்ந்து ‘அம்மான் பச்சரிசி’ என்ற பெயர் ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

அம்மான் பச்சரிசி 50 செ.மீ. உயரம் வரை வளரக்கூடிய சிறியவகை தாவரமாகும். இது பச்சை மற்றும் சிவப்பு நிறம் கலந்த இலைகளை உடையதாக இருக்கும். மேலும், இதன் இலைகள் எதிரெதிராக அமைந்து காணப்படும். இந்தத் தாவரத்தின் இலைகள் கூர்மையான அமைப்புடையவை. மெல்லிய தண்டை உடைய சிறிய செடியாக வளரும் இதன் தண்டை உடைத்தால், பால் வடியும் தன்மை கொண்டது. இது தரையோடு படர்வதும், சிறு செடியாக வளர்வதும், நிறங்களின் அடிப்படையிலும் அம்மான் பச்சரிசியில் பிரிவுகள் உண்டு. அந்தவகையில், சிறு அம்மான் பச்சரிசி, பெரு அம்மான் பச்சரிசி என இருவகைகளாகக் காணப்பட்டாலும் இவற்றின் மருத்துவ குணங்கள் ஒத்தே காணப்படுகின்றன.

அம்மான் பச்சரிசியின் தாவரவியல் பெயர்:

யூபோர்பியா ஹிர்டா(Euphorbia hirta). இது யூபோர்பியேசியே எனும் தாவரக் குடும்பத்தைச் சார்ந்தது. இத்தாவரம் இலங்கை, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வளர்ந்து காணப்படுகிறது. அம்மான் பச்சரிசி குடல் புழுக்களை அழிக்கவும், உடலில் ஏற்படும் காயங்களைக் குணப்படுத்தவும். ஆஸ்துமா, வாய்ப்புண், இருமல், சரும நோய், முகப்பரு, முகத்தில் எண்ணெய்ப் பசை, கால் ஆணி, பித்த வெடிப்பு, இரைப்பு ஆகியவற்றை குறைக்கவும், தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்க என பல்வேறு காரணங்களுக்காக நமது முன்னோர்கள் இக்கீரையை பயன்படுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இத்தாவரத்தின் அனைத்து பகுதிகளும் மருத்துவ குணம் நிறைந்தவையாக காணப்படுகிறது.

அம்மான் பச்சரிசியில் காணப்படும் தாவர மூலக்கூறுகள்:

யூபோர்பின் - ஏ, பி, சி மற்றும் டி டெர்கிபின் ஆல்பா அமைரின், பீட்டா அமைரின், பிரைடுலின் மற்றும் பல்வேறு பிளேட் வானாய்டுகள், கிளைக்கோஸைடுகள், ஆண்டி ஆக்ஸிடன்டுகள் நிறைந்து காணப்படுகின்றன. மேலும், வைட்டமின், ஏ, பி மற்றும் சி உள்ளன. போதிய நார்ச்சத்தும் தாதுக்களும் இக்கீரையில் உள்ளடங்கியுள்ளன.

அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணங்கள்:

வயிற்றுப்புண் மற்றும் வாய்ப்புண் குணமடைய பயன்படுத்தலாம். சரும நோய்கள் வராமல் தடுக்கவும் அம்மான் பச்சரிசி பயன்படுகிறது.உடல் வெப்பத்தினை குறைக்கவும், தேவையற்ற கொப்புளங்களை குறைக்கவும், முகப்பருக்கள் சார்ந்த பிரச்னைகளை குறைக்கவும் அம்மான் பச்சரிசி சிறந்து விளங்குகிறது.ஆன்டி பாக்டீரியல், ஆன்டிமைக்ரோபியல் குணங்கள் அதிகமாக இக்கீரையில் இருப்பதினால் ஆஸ்துமா நோயாளிகளுக்கு சிறந்த தீர்வினை அளிக்கிறது. இதன் காரணமாக இச்செடியினை ஆஸ்துமா செடி எனவும் கிராமப்புறங்களில் அழைக்கின்றனர்.

நோய் எதிர்ப்பு சக்தியினை மேம்படுத்த உதவுகிறது. ரத்த சர்க்கரை அளவினை கட்டுப்படுத்த உதவுகிறது. மலச்சிக்கல், பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் போன்ற பிரச்னைகளுக்கு ஒரு சிறந்த தீர்வாக உள்ளது.வயிற்றுப்பூச்சிகளை அழிக்கவும் இக்கீரை பயன்படுகிறது.மேலும் காய்ச்சல், இருமல் போன்ற பிரச்னைகளுக்கும் இக்கீரை ஒரு நல்ல மருந்தாக உள்ளது. இத்தகைய சிறப்பு வாய்ந்த கீரையை பாசிப்பருப்புடன் சேர்த்தும், வெங்காயம் சேர்த்து சமைத்தும் உணவாக உட்கொள்ளலாம். மேலும் இதன் பயன்களை பதார்த்த குணப்பாட நூலில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அம்மான் பச்சரிசியின் நற்குணம்

காந்தல் விரணமலக்கட்டு மேகத் தடிப்பு

சேர்ந்த தின விவைகள் தேசம் விட்டுப் - பேர்ந்தொன்றா

யோடுமம்மாள் பச்சரிசிக் குண்மையினத்துடனே

கூடுமம்மா ணொத்த கண்ணாங்கூறு.

பயன்படுத்தும் முறை

அம்மான் பச்சரிசியின் பூக்களை தேவையான அளவு எடுத்து சுத்தம் செய்து, பசும்பால் விட்டு அரைத்து, பசும்பாலிலேயே கலந்து காலையில் மட்டும் பருகி வந்தால் இளம் தாய்மார்களுக்கு குழந்தைக்குத் தேவையான பால் சுரக்கும்.அம்மான் பச்சரிசி இலையை அரைத்து மோரில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் ஐந்து நாட்கள் வரை அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல் நின்றுபோகும்.

அம்மான் பச்சரிசி பாலை மருவின் மீது தடவி வந்தால் விரைவில் மரு உதிர்ந்து விடும்.அம்மான் பச்சரிசி, தூதுவளை இரண்டையும் சம அளவு எடுத்து பாசிப்பருப்பு, உளுந்தம் பருப்பு இவற்றுடன் சேர்த்து கூட்டு வைத்து அதனுடன் தேங்காய் துருவல், நெய் கலந்து சாப்பிட்டு வந்தால் உடம்பில் தாது பலப்படும்.