Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆரோக்கியம் காக்கும் கற்றாழை!

நன்றி குங்குமம் டாக்டர்

கற்றாழை உச்சி முதல் உள்ளங்கால்வரை உள்ள அத்தனை உறுப்புகளுக்கும் உகந்த ஒரு மூலிகை ஆகும். கற்றாழைக்குக் கன்னி, குமரி என்ற பெயர்களும் உண்டு. கற்றாழையில் சிறு கற்றாழை, பெரும் கற்றாழை, செங்கற்றாழை, பேய்க்கற்றாழை, கருங்கற்றாழை, வரிக்கற்றாழை எனப் பல வகை உண்டு. இவற்றில் சோற்றுக்கற்றாழை மட்டுமே மருத்துவப் பயன்பாட்டில் உள்ளது.

கற்றாழையில் இயற்கை சத்துக்களான வைட்டமின்கள், தாதுக்கள், அமினோ அமிலங்கள் ஏராளமாக உள்ளன. மேலும், மிக அரிய தாதுக்களான செலினியம், குரோமியம் ஆகியவையும் இதில் அடங்கியுள்ளன. உடலைக் குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள கற்றாழை உதவுகிறது. அழகுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள் தயாரிக்கப் பெரிதும் பயன்படும் இவற்றின் உள்ளே இருக்கும் சதைப் பகுதியான ஜெல்லை எடுத்து, அதைத் தண்ணீரில் ஏழு முதல் பத்து தடவை நன்றாகக் கழுவி பின் பயன்படுத்த வேண்டும்.

சூரிய ஒளியுடன் கலந்து வரக்கூடிய கடுமையான வெப்பத்தை ஏற்படுத்தும் காமா மற்றும் எக்ஸ்ரே கதிர் வீச்சுகளின் பாதிப்பிலிருந்து கற்றாழை ஜெல் சருமத்தைக் காக்கும் தன்மை உடையது. அத்துடன் சருமத்தின் நிறத்தையும் மேம்படுத்தும்.கற்றாழை ஜூஸ் நிறைய நோய்களுக்கு நிவாரணம் தரக்கூடியது. தினமும் காலை வேளையில் வெறும் வயிற்றில் இந்த ஜூஸைக் குடித்துவந்தால் உடலில் உள்ள நச்சுகள் முழுமையாக வெளியேற்றப்படும். இதனால் உடலில் மெட்டபாலிசம் அதிகரித்து, உடல் எடை வேகமாகக் குறையத் தொடங்கும்.

மூலக்கோளாறால் பாதிக்கப்படுபவர்களுக்கு கற்றாழை நல்ல மருந்து. இதன் சதைப் பகுதியை நன்றாகக் கழுவி, அதனுடன் இரண்டு கைப்பிடி முருங்கைப்பூ சேர்த்து அரைத்து, அதனுடன் சிறிது வெண்ணெய் சேர்த்து, ஒரு தேக்கரண்டி அளவுக்கு தினமும் காலையில் ஒரு வாரம் வரை சாப்பிட்டுவந்தால், மூலத் தொந்தரவில் இருந்து நிவாரணம் கிடைக்கும். இதைச் சாப்பிடும்போது உப்பு, காரம் சேர்க்கக் கூடாது.கற்றாழையின் ஜெல்லை தினமும் வெண்படைகளின்மீது பூசி வந்தால் நாளடைவில் குணமாகும்.

குழந்தை பெற்ற பெண்களுக்கு தோள்பட்டை, தொடை, வயிறு, மார்பு போன்ற பகுதிகளில் வரிவரியாகத் தழும்புகள் ஏற்படும். இதைப் போக்க தினமும் இதன் சதையை எடுத்துத் தடவி, அரை மணி நேரம் கழித்துக் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இதைத் தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். பாத வெடிப்புக்கு இரவில் படுக்கும்முன் கற்றாழை ஜெல்லை தடவி வர, பாத வெடிப்பு குணமாகும்.

தொகுப்பு: ரிஷி