Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அற்புதம் செய்யும் அக்குபங்சர்!

நன்றி குங்குமம் தோழி

‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்...’ இன்றளவில் எல்லோரது எதிர்பார்ப்பும் இதுதான். எவ்வளவு ஓடி ஓடி சம்பாதிச்சாலும் அதை அனுபவிக்க நாம் ஆரோக்கியமாக இருக்கணும். வள்ளுவரும் நோய் என்ன என்று அறிந்து அதற்கான காரணம் மற்றும் நம் உடலுக்கு ஏற்ப சிகிச்சை மூலம் குணப்படுத்தும் வழியையும் தெரிந்து கொள்வது அவசியம் என்று தன் குறள் மூலமாக கூறியுள்ளார். ஒரு சிகிச்சை எடுக்கும் போது பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடாது. அப்படிப்பட்ட சிகிச்சையில் ஒன்று தான் அக்குபங்சர் சிகிச்சை. இந்த சிகிச்சை ஒருவரின் உடலில் செய்யக்கூடிய அற்புதங்கள் பற்றி கூறுகிறார் அக்குபங்சர் நிபுணரான சாந்தி தனசேகர்.

‘‘நாம் அன்றாடம் சாப்பிடும் உணவில் மருந்து கலக்கப்பட்டுள்ளது. இதில் தனியாக வேறு நாம் மருந்துகளை உட்கொள்ள வேண்டுமா என்ன? மருந்து, மாத்திரைகள் இல்லாமல் குணமாகணும் என்ற வேண்டுகோளுடன் தான் என்னை நாடி வருகிறார்கள். நான் உயிரியலில் பட்டப்படிப்பு முடிச்சிருந்தாலும், தற்போது அக்குபங்சர் ஹீலராக உள்ளேன். 2008ல் என் கணவருக்கு சில உடல் பிரச்னைகள் இருந்தன. அவருக்கு மருந்து, மாத்திரைகள் சாப்பிட விருப்பமில்லை.

மாற்று மருத்துவம் தேடிய போதுதான் நண்பர் ஒருவர் மூலமாக அக்குபங்சர் மருத்துவம் பற்றி கேள்விப்பட்டு சிகிச்சைக்காக சென்றோம். வலி இல்லாத சிகிச்சைகள் மற்றும் அவர்களின் வாழ்வியல் முறைகளை கடைபிடிப்பது எளிதாக இருந்தது. என் கணவரின் பிரச்னைகளும் குணமாக தொடங்கியது. அதனால் அவருக்கு இந்த மருத்துவம் பிடித்துப் போனது. அதை முறையாக கற்றுக்கொண்டார். அவருடன் இணைந்து நானும் இதில் டிப்ளமோ படிச்சேன். 2012 முதல் சிகிச்சை அளித்து வருகிறேன்’’ என்றவர் அக்குபங்சர் மருத்துவம் குறித்து விவரித்தார்.

‘‘இந்த சிகிச்சை முறையினை சீனர்கள் பின்பற்றி வந்தார்கள். 5000 வருடங்கள் பழமையான மருத்துவம். இந்தியாவில் 1959ல்தான் பயன்பாட்டுக்கு வந்தது. வலியில்லா, மருந்தில்லா மருத்துவம் என்பதால் மக்கள் மத்தியில் இந்த சிகிச்சை முறைகள் பிரபலமானது. நம்முடைய உடலில் 361 அக்குபங்சர் புள்ளிகள் உள்ளன. அதில் 65 புள்ளிகள் முதன்மையானவை. இந்த மையப்புள்ளிகள் சிறிய குத்தூசி, விரல்கள் மற்றும் எண்ணங்கள் மூலம் தூண்டப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும். ஒருவரின் கையில் நாடியைப் பிடித்து பார்த்தாலே அவர்கள் உடலில் உள்ள பிரச்னைகளை கண்டறிய முடியும். அவ்வாறு பிரச்னைகளை கண்டறிந்து அதை சரி செய்வதே இம்மருத்துவ முறை.

இந்த சிகிச்சையினை மேற்கொள்ளும் போது வாழ்வியல் முறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். அப்போதுதான் சிகிச்சையின் பலனை முழுமையாக பெற முடியும். உச்சி முதல் பாதம்வரை நம் உடலில் ஏற்படும் எல்லா நோய்களுக்கும் சிகிச்சைகள் உள்ளன. குறிப்பாக பெண்களுக்கு கர்ப்பப்பை, மாதவிடாய் பிரச்னைகளுக்கான தீர்வினை இதில் எளிதில் காணமுடியும். புற்றுநோயினை ஆரம்பகட்டத்தில் கண்டறிந்தால் குணமாக்கலாம். ஆனால், கடைசி கட்டத்தில் வந்தால் எந்த சிகிச்சையும் பலன் அளிக்காது.

நம்முடைய ஆரோக்கியத்தின் முதல் எதிரி நம் உடலில் தேங்கும் கழிவுகள். இதனை நீக்கினாலே அனைவரும் ஆரோக்கிய வாழ்வினை பின்பற்ற முடியும். அதாவது, எங்களின் மருத்துவத்தில் நான் சொல்லும் நான்கு கோல்டன் ரூல்களை பின்பற்றுவது மிகவும் அவசியம். பசி, தாகம், தூக்கம், ஓய்வு. இந்த நான்கையும் முறையாக பின்பற்றினால் நமக்குள் இருக்கும் மருத்துவர் நம் உடலை ஆக்டிவாக வைத்துக்கொள்வார்.

பசிக்கும் போது பிடித்த உணவுகளை அளவோடு நன்றாக மென்று சாப்பிடணும். காலையில் திரவ உணவு, மதியம் திட உணவு, இரவு எளிய உணவு எடுத்துக் கொண்டால் உடல் நலம் சீராக இருக்கும். ‘போதும் நிறுத்து’ என்று உடல் சிக்னல் தரும். அப்போது கண்டிப்பாக உணவு உட்கொள்வதை நிறுத்திவிடவேண்டும். தண்ணீர் குடிக்கும் போது உதடும், நாக்கும் நனைச்சு குடிக்கணும். தூக்கி குடிக்காமல் வாய் வைத்து குடிக்கணும். தண்ணீரும் தேவை என்றால் மட்டும் குடிக்க வேண்டும். மண் பானையில் வைக்கப்படும் தண்ணீர் சிறந்தது. அதில் நிறைய உயிர் சத்துக்கள் உள்ளன.

இரவு தூக்கம் மிகவும் அவசியம். குறைந்தபட்சம் எட்டு மணி நேரம் தூக்கம் நம் உடலுக்கு தேவை. இரவு நேர வேலைக்கு செல்பவர்களின் உடல் கண்டிப்பாக பாதிக்கப்படும். இரவு 11 மணி முதல் 3 மணி வரை கல்லீரல் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும். அந்த சமயத்தில் நாம் தூங்காமல் இருந்தால் உடலில் கழிவுகள் தேங்கத்தான் செய்யும். ஓய்வும் உடலுக்கு மிகவும் அத்தியாவசியமானது. எந்த வேலையையும் தொடர்ச்சியாக செய்யாமல் சிறிது பிரேக் விட்டு செய்ய வேண்டும். இதனால் உடம்பும் மனசும் சோர்வடையாமல் இருக்கும். இந்த நான்கையும் பின்பற்றினால் உங்களுக்குள் ஏற்படும் மாற்றத்தை நீங்களே உணர்வீர்கள்’’ என்றவர் அக்குபங்சர் அகாடமி ஒன்றில் பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார்.

‘‘இந்த அகாடமியினை உமர் ஃபரூக் என்பவர்தான் நடத்தி வருகிறார். அவரும் அக்குபங்சர் நிபுணர்தான். தன்னுடைய மனைவிக்கு அக்குபங்சர் சிகிச்சை மூலம் உடல் நிலை சரியானதால், இவரும் அதற்கான பயிற்சி மேற்கொண்டது மட்டுமல்லாமல், அகாடமி ஒன்றை துவங்கினார். தமிழகம் முழுதும் கிளைகள் கொண்ட இந்த அகாடமி மூலம் பட்டயப் பயிற்சியினை அளித்து வருகிறார். தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் மற்றும் அழகப்பா பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்று துவங்கப்பட்டுள்ள இந்தியாவின் முதல் அக்குபங்சர் பகுதி நேரக் கல்லூரி. முறையாகப் பயிற்சி பெற்றவர்கள்தான் சிகிச்சை அளிக்க முடியும்’’ என்றார் சாந்தி தனசேகர்.

எங்க வாழ்வியல் முறை மாறிடுச்சு!

சத்யா மோகனகிருஷ்ணன், அக்குபங்சர் பயிற்சி மாணவி: ‘‘மருந்தில்லா மாற்று மருத்துவத்தை என் பசங்களுக்கும் குடும்பத்துக்கும் கொடுக்க நினைச்சேன். அதனால குளோபல் யூனிவர்சிட்டியுடன் இணைந்த கம்பம் அகாடமியில் 2 வருட டிப்ளமோ இன் அக்குபங்சர் சயின்ஸ் முடிச்சேன். அடுத்து அட்வான்ஸ் டிப்ளமோ இன் அக்குபங்சர் படிக்கப் போறேன். முடித்தவுடன் கிளினிக் வைக்கும் எண்ணம் உள்ளது. நான் இந்த கோர்ஸ் படிச்சதால எங்க வாழ்வியல் முறை முற்றிலும் மாறிடுச்சு. என் குடும்பத்தார் ஆரோக்கியமா இருக்காங்க.’’

தொகுப்பு: கலைச்செல்வி