Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மனவெளிப் பயணம்

நன்றி குங்குமம் டாக்டர்

ப்ளேட்டோனிக் லவ் ஒரு பார்வை!

மனநல ஆலோசகர்காயத்ரி மஹதி

காதலில் என்றுமே நமக்கே நமக்கான கனவுக் கன்னியோ, கனவு நாயகனோ மட்டுமே நமக்குத் தேவை என்று பல எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கும் இளைஞர்கள் கூட்டம் அதிகம் என்று நமக்குத் தெரியும். இங்கு கனவுக்கன்னி, கனவு நாயகன் என்பவர்களை சமூகளவில் எப்படி பார்ப்பார்கள் என்றால், அவர்களின் அழகு, அவர்கள் போடும் டிரஸ், அவர்கள் விரும்பிச் சாப்பிடும் உணவுகள், உணவை உண்ணும் முறைகள், அவர்களுடைய உடல் எடை, பார்த்து, அவர்கள் செய்யும் அலங்காரங்கள் போல், தாங்களும் செய்வது என்று ஒரு நபரை அப்படியே காப்பி அடித்து நடப்பார்கள். இப்படியாகத்தான் ஒவ்வொரு கனவு நாயகனும், கனவுக் கன்னியும் உருவாகிறார்கள். தற்போதைய யூட்யூப் சமூகத்தில் அவர்களுக்கு என்று மிகப்பெரிய ஒரு ரசிகப் பட்டாளத்தை உருவாக்கி வைத்தும் இருக்கிறார்கள்.

இவை எல்லாவற்றையும் மீறி தற்போதைய காலக்கட்டங்களில் காதலில் ஒரு சாரார் இளைஞர்கள் கொஞ்சம் மாற்றம் கொண்டு வரத் தொடங்கிவிட்டார்கள். இவர்களுக்கு கனவுக் கன்னி, கனவு நாயகன் இல்லாமல், அறிவில் சிறந்து விளங்கும், இன்டலெக்சுவல் நபர்கள் மீது காதல் வேண்டும் என்று சொல்லத் தொடங்கிவிட்டார்கள். இதில் அவர்கள் படிக்கும் புத்தகங்கள், அவர்கள் செய்யும் புராஜக்ட் வெற்றிகள், அதில் அவர்கள் கையாளும் யுக்திகள், அவர்கள் முடிவு எடுக்கும் திறன், எந்தச் சூழலிலும் புலம்பாமல், அடுத்து என்ன என்ற ரீதியில் வாழ்க்கையை கையாளும் விதம் என்று அவர்களுடைய ஆட்டியுடு வைத்து காதல் செய்ய ஆரம்பிக்கிறார்கள். இதற்கு அவர்கள் சொல்லும் காரணம் உடலளவில் மட்டும் ஈர்ப்பு இல்லாமல், தங்களுடைய செக்ஸுவல் அப்பர்டாஸ் பகுதி தங்களுடைய மூளைக்குள் இருந்து ஆரம்பிக்கிறது என்று சொல்கிறார்கள்.

இப்படி அறிவு சார்ந்து காதல் துணையைத் தேர்ந்து எடுக்கலாம் என்ற எண்ணம் வந்த பின், இக்காலத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் உள்ள புரிதலில் உள்ள நிறை, குறைகளைத்தான் இக்கட்டுரையில் பேசப் போகிறேன். பெண்ணின் கல்வியறிவு பற்றியும், அவளது சுதந்திரங்கள் பற்றியும் பேசும் இச்சமூகம்தான், அவளின் சிந்தனையின் வளர்ச்சியைப் பார்த்து பெரிய பயத்தையும், திமிரானவள் என்கிற பிம்பத்தையும் கட்டமைக்கிறது.

‘‘அறிவாளிப் பெண்’’ என்றாலே யாருடைய பேச்சையும் கேட்காமல் இருப்பவள் என்றும், அவளுடன் எதுக்குறித்தும், எளிதாக உரையாட முடியாது என்றும், இப்படியான உரையை சமூகம் எல்லோரிடத்திலும் சொல்கிறது. தெளிவாக சிந்திக்கும் பெண்ணிடத்தில் ஆண், பெண் இருவரும் இயல்பாக அவரவர் வட்டத்தில் சேர்த்துக் கொள்ள தயங்குகின்றனர். என்னதான் தெளிவாக இருந்தாலும், இம்மாதிரியான செயல்கள் தொடரும்போது, அறிவாளி என்று சொல்லப்படும் பெண்கள், தங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் உணர்வு ரீதியாக நிலைகுலைந்து போகிறார்கள்.

‘‘படிச்சா ரொம்ப நல்லா வருவ” என்று தன்னம்பிக்கையுடன் சொல்லும் இந்த வரிகளைப் பின்பற்றி அதில் வெற்றி பெற்ற பெண்களைப் பார்த்து, இந்தச் சமூகம் சொல்லும் கட்டுப்பாடுகளுக்கும், அவள் சிந்தித்துப் பேசும் வார்த்தைகளுக்கும் மிகப்பெரிய முரணை யதார்த்த வாழ்க்கை கண் முன்னே காண்பிக்கிறது. ஒவ்வொரு பெண்ணிடமும் நாம் சொல்வது, நல்லா படித்து, தெளிவா முடிவு எடுக்கத் தெரிந்தால் போதும், நீ நினைத்த அத்தனையும் உன் கைகளில் வந்து சேரும் என்று, இங்குள்ள பெண்களுக்கு சொல்லிக் கொடுக்கிறோம். ஆனால் இதை எல்லாம் யோசிக்கும்போது, இந்த அறிவின் வளர்ச்சியால் ஆண், பெண் உறவில் நிகழும் வன்முறைகள் தான் அதிகமாக மாறி வருகிறது என்று சொன்னால் மிகையாகாது.

இதில் தான் நாம் பார்க்க வேண்டிய இடம் என்னவென்றால், conscientiousness க்கும், Fluid intellegence க்கும் உள்ள வேறுபாட்டை சொல்ல வேண்டியதாக இருக்கிறது. ஆண்களின் காதலில் உள்ள இன்டலக்சுவல் எல்லாமே conscientiousness கலந்து இருக்கும். அதாவது எத்தனை முற்போக்கு இருந்தாலும், அதில் சமூகம் சொல்லும் ஜாதி, மதம், வர்க்கம் எல்லாம் கலந்துதான் பேசுகிறார்கள்.

ஆனால் பெண்ணின் காதலில் இண்டலக்சுவல் என்பது புதிதாக ஒரு மாற்றத்தை உருவாக்குவது, புதிதாக குடும்ப அமைப்பில் உள்ள மூடப்பழக்கங்களை உடைத்து, அவளுடைய அறிவின் பால் உள்ள குடும்பத்தை உருவாக்குவதாக இருக்கும். அறிவின் வளர்ச்சியால் ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே வரும் மோதல்கள் எல்லாமே சமமாக நடத்து என்பதே ஆகும். ஆனால் இங்கு ஆண் பார்க்கும் அறிவின் வளர்ச்சியும், பெண் பார்க்கும் அறிவின் வளர்ச்சியும் ஒரு பெரிய முரண் போன்ற சுவரைத் தான் உருவாக்கி வைத்து இருக்கிறது. ஆணின் பார்வையில் பதவியும், வருமானமும் தான் அறிவின் வளர்ச்சி என்று பார்க்கப்படுகிறது.

ஆனால் பெண்ணின் பார்வையில் பதவி, வருமானம் கடந்து, அவளுக்கான அங்கீகாரம், அவளுக்கான சுதந்திரம் என்று சொல்லி பேசவும், செயல்படவும் வேண்டும் என்பார்கள். இந்தச் செயல்கள் எல்லாம் ஆணின் பார்வைக்குள் இருக்கும் பெண்ணின் பிம்பத்தை முற்றிலும் உடைத்து விடுகிறது. இந்த பிம்பம் உடைவதை ஆணிற்கு ஏற்க முடியாமல், இருவரின் உறவுக்குள் விரிசலும், போராட்டமும் நடக்க ஆரம்பிக்கிறது.

பதவியில் இருக்கும் தெளிவான பெண்ணைப் பார்த்து காதல் கொள்ளும் ஆண், அவளுடைய காதலும் தெளிவாகத் தான் இருக்கும் என்று உணர்வதில்லை. இங்கு ஆணுக்கு தொழிற்துறை சார்ந்த கனவுகள் எந்த அளவுக்கு முக்கியமோ, அதே போல் பெண்ணுக்கும் தொழிற்துறை சார்ந்த கனவுகள் முக்கியம். ஆனால் ஆணோ, திருமணம் ஆனவுடன் அவன் நினைக்கும் போது எல்லாம் சமைத்துக் கொடுப்பதும், அவன் நினைக்கும் போது எல்லாம் உடலுறவு வைக்கவும், அடிக்கடி ஃபோன் செய்து பேசுவதும், அவனுடைய பார்வையில் எல்லாமே இருக்க வேண்டும். அவளுடைய மற்ற நேரத்தில் எத்தனை பிஸியான வேலை செய்தாலும், அவனுடன் ஏற்பட்ட வாழ்வில் எதுவும் தடைப்படக் கூடாது என்று யோசிப்பார்கள். அதற்காக ஆண், பாசம், அன்பு என்ற பெயரில் சில விசயங்களை செய்யும்போது, இம்மாதிரியான பெண்களுக்கு எந்த அளவுக்கு காதல், அன்பு இருக்க வேண்டுமோ, அந்த அளவுக்கு இருந்தால் போதும் என்று சொல்லி விடுவார்கள். அன்பின் பெயரில் அவளுடைய தொழிற்துறை சார்ந்த கனவுகளை தொந்தரவு செய்வதை விரும்ப மாட்டாள்.

இங்கு ஆண், பெண் காதல் என்ற உறவு என்றுமே ஒரு கற்பனையின் அடிப்படையில்தான் பேச ஆரம்பிக்கவே செய்யும். இதில் சினிமாவும், இலக்கியமும் அதை இன்னும் மெருகூட்டி வருகிறது. ஒரு காதலின் வெற்றி எது என்றால், ஆண் என்றுமே ஒரு பெண்ணை ராணி போல் பார்த்துக் கொள்வது, அவளுக்காக எத்தனை பெரிய சாம்ராஜ்யத்தையும் விட்டு வெளியே வந்து, அவளுக்காக, அவர்கள் காதலுக்காக ஒரு வாழ்க்கையை நடத்திக் காண்பிக்க வேண்டும். இதுவே பெண் என்றால், அவனுடைய ஆளுமையை வெற்றியடைய வைக்கவும், அவளின் திறமை எல்லாம் மறைத்து, குடும்பத்தை முறையாக, கௌரவமாக நடத்திக் காட்ட வேண்டும் என்பது தான் காதலின் வெற்றி என்று இன்னும் 2024இல் உள்ள பெரும்பான்மையான மனிதர்கள் நம்புகிறார்கள். இதுதான் காதலின் புனிதம் என்று பேச்சின் வழியே நிறைய பேசுகிறார்கள்.

ஆண், பெண் உறவில் இப்படித்தான் காதல் இருக்கும் என்ற பிம்பத்தை பெண் உடைக்கும்போது, ஆணுக்கு சந்தேகம் வருகிறது. தன் மீது ஈர்ப்பு குறைந்து விட்டதா, தன்மீது அவளுக்கு பாசம் இல்லையா என்று எல்லா நேரமும் பொசசிவ் என்ற பெயரில் அவர்கள் காதலை நிரூபிக்க கேட்கும்போது, பெண்கள் டயர்ட் ஆகிவிடுகிறார்கள். இது தொடரும் போது ஒரு கட்டத்துக்கு மேல், பெண் தன்னை சுதந்திரமாக வேலை பார்க்க விடு, வேறு எதுவும் வேண்டாம் என்று சொல்லும் போது, ஆண் சுயமாய் தனக்குள் உடைந்து போகிறான்.

தன்னைப் பார்க்காமல், தன்னைப் பற்றிச் சிந்திக்காமல், தன்னைப் பற்றி பேசாமல் இருக்கும் தெளிவான பெண்ணின் மீது பயத்துடன், அவன் பக்கம் திரும்ப வைப்பதற்கு சில வன்முறைகளை கையாளத் துவங்குகிறான். அதையும் அந்தப் பெண் கண்டுகொள்ளவில்லை என்றால், தன் ஆண்மை மீது சுய சந்தேகம் வந்து, ஒரு பெண்ணுடன் வாழத் தெரியாத ஆண் என்ற அடையாளம் வரக் கூடாது சொல்லி, மரணத்தை நோக்கி சிலர் நகர்கிறார்கள்.

ஆனால் இதே ஆண்களிடம் முரணான குணாதிசயங்களை சமுகத்தில் பார்க்க முடியும். அறிவில் சிறந்து விளங்கும் பெண்ணை நாட்டின் பிரதமராக தேர்ந்து எடுப்பார்கள், முதலமைச்சராக தேர்ந்து எடுப்பார்கள், சிறந்த தொழில் முனைவோர் என்று சொல்லி பாராட்டுவார்கள், தயக்கம் இல்லாமல் பெண்களை கொண்டாடுவார்கள். இம்மாதிரி பெண்களை உதாரணமாக அவர்கள் வீட்டுப் பெண்களுக்கு உதவி செய்வதாகட்டும், அலுவலகங்களில் பெண் ஊழியர்களுக்கு உதவி செய்வதாகட்டும், என்று பெண்கள் ரசிக்கும் ஆணாக இருப்பார்கள். ஆனால் இவை எல்லாமே செய்வது தோழிகளுக்கும், மகளுக்கும், தங்கச்சியாக இருந்தால் மட்டும் தான் பெண்கள் ரசிக்கும் ஆணாக இருக்கிறார்கள்.

இந்த காலக்கட்டம் என்பது அறிவு சார்ந்த உளவியலில் ஒரு மிகப் பெரிய மைண்ட் கேம் எல்லாருக்குள்ளும் நடக்கிறது. அதைக் கற்றுக்கொள்ளும் காலமாகத் தான் ஆண், பெண் காதலில் நாம் தற்போது பார்க்கிறோம். இவையே இன்றைய திருமணத் பந்தத்தில் ஒரு பெரிய மாற்றத்தை நம்மிடம் கொடுக்க ஆரம்பிக்கும். அதையும் நாம் காதலர்கள் போல் புதிதாகப் பழக ஆரம்பிப்போம்.