Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஒரு தெய்வம் தந்த பூவே

நன்றி குங்குமம் தோழி

முதல் குழந்தை வரமா? சாபமா?

குடும்பத்தின் மூத்த வாரிசை வளைகாப்பு, சீமந்தம் நடத்தி வரவேற்கும் பெற்றோர் அவர்களை சீராட்டி, பாராட்டி வளர்க்கிறார்கள். இப்படி ஒரு இளவரசனாக வலம் வரும் அந்தக் குழந்தை தனக்கு அடுத்து வரும் உடன்பிறப்பிற்கு தனது பெற்றோரும் மற்ற குடும்ப உறுப்பினர்களும் தரும் கவனிப்பையும், பாசத்தையும் பார்த்து துவண்டு போகிறார்கள். இதை மூத்த குழந்தை நோய்க்குறி என்கிறார்கள்.

மூத்த குழந்தை நோய்க்குறி என்பது ஒரு குடும்பத்தில் மூத்த மகனாகவோ அல்லது மகளாகவோ பிறந்ததன் விளைவாக உருவாகும் பல குணாதிசயங்களைக் குறிக்கிறது. அதாவது, தனக்குப்பின் இளைய குழந்தை பிறப்பதைத் தொடர்ந்து, முதல் குழந்தை தனது பெற்றோருக்கு தான் ‘ஒரே குழந்தை’ என்ற நிலையிலிருந்து குறைந்து, பெற்றோரின் அன்பையும் கவனத்தையும் இளைய உடன்பிறப்புடன் பகிர்ந்து கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகிறார்கள். இது மூத்த குழந்தைக்கு நிறைய மன அழுத்தம் மற்றும் இளைய உடன்பிறப்புடன் போட்டி, பொறாமைக்கு வழிவகுக்கிறது. ஆரம்பத்தில் சாதாரணமாகத் தோன்றினாலும், காலப்போக்கில் அதுவே நச்சுத்தன்மையாக மாறும் சூழலை உருவாக்கிவிடும்.

பொதுவாகவே இரண்டாவது குழந்தை பிறக்கும் வரை, வீட்டின் முதல் குழந்தைக்கு பெற்றோர் ஒதுக்கும் நேரமும், அதன் மீது செலுத்தும் கவனமும் சற்று கூடுதலாகவே இருக்கும். இதுவே, அடுத்த குழந்தை பிறந்துவிட்டால், அவர்களை பெரியவர்களாக பார்க்கத் தொடங்கிவிடுகிறார்கள். அவர்கள் பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டும், அவர்கள் விட்டுக் கொடுக்கவும், அனுசரித்துப் போகவும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்க ஆரம்பித்துவிடுகிறார்கள். அது மிகப்பெரிய தவறு. இரண்டாவது குழந்தை பிறக்காவிட்டால் முதல் குழந்தையை இன்னமும் குழந்தையாகத்தானே நடத்துவோம்.

இது அவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்துவதோடு, உடன்பிறப்பு சண்டைகளை தோற்றவிக்கும். பெற்றோரின் அன்பை உடன்பிறப்போடு பகிர்ந்து கொள்ள வேண்டிய நிலைக்கு தங்களை மாற்றிக்கொள்வதற்கான கால இடைவெளியை பெற்றோர் அவர்களுக்கு கொடுக்க வேண்டும். இல்லையெனில், அந்த மன அழுத்தம் அவர்களின் வளர்ச்சிப்படி நிலையை பாதிக்கும். மூத்த குழந்தையாக இருப்பதில் நன்மை, தீமைகள் கலந்து இருந்தாலும், சில நடத்தைகள் மற்றும் ஆளுமைப் பண்புகள் மூத்த குழந்தை நோய்க்குறிக்கு வழிவகுக்கும்.

மூத்த குழந்தை நோய்க்குறிக்கான அறிகுறிகள்

1. மூத்த குழந்தை உடன்பிறப்புகளை வழிநடத்தவும், ஆதிக்கம் செலுத்தவும் விரும்புகிறார்கள்.

குடும்பத்திற்கு இளைய உடன்பிறப்புகள் வரும்போது முதலில் பிறந்த குழந்தைகள் தலைமைப் பதவிக்கு தள்ளப்படுகிறார்கள். அவர்களின் இளைய உடன்பிறப்புகளை வழி நடத்துவது, அவர்களுக்கு உதவுவது மற்றும் தங்களின் முதிர்ச்சியைக் காட்டுவது போன்றவை மூத்த குழந்தையின் அடையாளமாக இருக்கலாம். ஆனால், அதுவே அவர்களை வழிநடத்திச் செல்வதற்கு பதிலாக அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தினால், அது மூத்த குழந்தை நோய்க்குறியின் அறிகுறியாக மாறும்.

2. மூத்த குழந்தைகள் சரியானவராகவும், பொறுப்புகளை சுமப்பவர்களாகவும் இருக்க வேண்டிய கட்டாயம்.

மூத்த குழந்தையாக இருப்பதனாலேயே பல அழுத்தங்களுக்கு உள்ளாகிறார்கள். ஒரே குழந்தையாக இருந்து, பின்னர் உடன்பிறப்பு வந்தவுடன் தங்களின் பெற்றோரின் அன்பைப் பெறுவதற்கு தொடர்ந்து தங்களை சரியானவர்களாக நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவதால் அழுத்தத்தை சந்திக்கிறார்கள்.

3. பெற்றோரின் எதிர்பார்ப்பால் மூத்த குழந்தைக்கு அழுத்தம் ஏற்படுகிறது

தங்களின் மூத்த குழந்தை தொடர்ந்து கல்வி மட்டுமல்லாது, எல்லாத் துறையிலும் சிறந்து விளங்க வேண்டும் என்று பெற்றோர் எதிர்பார்க்கிறார்கள். உடன்பிறப்புகளுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்று போராடுவதன் மூலம் எப்போதும் பெற்றோரைப் பிரியப்பட வைக்க முயன்று கொண்டே இருக்கிறார்கள். எளிமையாகச் சொன்னால் பெற்றோரின் கவனத்தை ஈர்க்க மூத்த குழந்தைகள் போராடுகிறார்கள் என்றே சொல்லலாம். இவை அனைத்தும் அவர்களின் மன ஆரோக்கியத்தை பாதிப்பதோடு, உடன்பிறப்புகளுடனான உறவையும் பாதிக்கிறது.

4. மூத்த குழந்தைகள் அதிக சுயமரியாதையாளராக இருக்கிறார்கள்

சமீபத்திய ஆய்வுகளின்படி மூத்த குழந்தைகள் அதிக சுயமரியாதை மற்றும் தன்னம்பிக்கை கொண்டவர்களாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவர்களின் இந்த குணாதிசயம் கல்வி மற்றும் தொழில்முறையில் திறன்மிக்கவர்களாக ஒளிர உதவி புரியும் என்றாலும், சமூக வாழ்க்கையில் உதவியாக இருக்காது. அதிக சுயமரியாதையானது, ஈகோ பிரச்சனைகள் மற்றும் சமூகத்தில் இணக்கமற்ற தன்மைக்கு வழிவகுத்து பல மனக்கசப்புகளை சந்திக்க வேண்டிவரும். பணிவும், நன்றியுணர்வும் இல்லாவிட்டால். மற்றவர்கள் இவர்களை ஏற்றுக் கொள்வது மிகக் கடினம்.

5. ஆரோக்கியமற்ற போட்டி மனப்பான்மை கொண்டவர்கள்

பெற்றோர் இரண்டாவது குழந்தை பிறந்த பிறகு மூத்த குழந்தைக்கு செலவிடும் நேரத்தையோ, கவனிப்பையோ கண்டிப்பாக குறைத்துக் கொள்ளக்கூடாது. இதனால் உடன்பிறப்புகளுடனான போட்டியை மேலும் வளர்க்கும். உடன்பிறப்புகளின் போட்டி மற்றும் பொறாமை பெற்றோர்களால் சரியாகக் கையாளப்படாவிட்டால், முதல் குழந்தை அதை தங்கள் பெற்றோர் அல்லது தங்கள் இளைய உடன்பிறப்புக்கு எதிரான நிலையான வெறுப்பாக வைத்திருப்பார்கள். இது வளர்ந்த பிறகும் உடன்பிறந்தவர்களிடையே ஆரோக்கியமற்ற போட்டியை உருவாக்குகிறது இதுவும் மூத்த குழந்தை நோய்க்குறியின் அறிகுறியாகும்.

6. மூத்த குழந்தைகள் வெறித்தனமாக மாறக்கூடும்

மூத்த குழந்தை, தன்னை இளையவர்களின் பாதுகாவலராக நினைத்து அவர்களை காக்கும் வரையில் இதை ஒரு நல்ல குணமாக கருதி பெற்றோர்கள் நிம்மதி அடையலாம் . ஆனால், அதுவே தீவிரமாக மாறி, அவர்கள் மீது அதிகாரம் செலுத்தத் தொடங்கும்போது, பிரச்சனை ஆரம்பமாகிறது.

உங்கள் மூத்த குழந்தை ஆவேச நிலைக்கு சென்று இளைய குழந்தையை தாக்க முயற்சிப்பதை நீங்கள் கண்டால், அதை அவர்களுக்கும் இளைய உடன்பிறப்புகளுக்கும் ஆரோக்கியமற்ற உறவின் எச்சரிக்கை அறிகுறியாக எடுத்துக் கொள்ள வேண்டும். இளைய குழந்தைகள் பாதுகாப்பிற்குப் பழகி, மூத்த குழந்தையைச் சார்ந்து கூட இருக்கலாம், ஆனால், மூத்தவர்கள் தங்கள் கட்டுப்பாட்டை இழந்து, தங்கள் உடன்பிறப்புகளிடம் வெறித்தனமாக தாக்கும் நிலைக்கு மாறலாம்.

7. மூத்த குழந்தை, உடன்பிறப்புகளுக்கு இரண்டாவது பெற்றோராக செயல்படுகிறார்கள்.

பெற்றோர்கள் தங்கள் இரண்டாவது குழந்தையை பெற்றெடுக்கும்போது, ​​ தங்கள் இளைய உடன்பிறந்தவர்களைக் கவனித்துக்கொள்ள தங்கள் மூத்த குழந்தைகளை ஊக்குவிக்கிறார்கள். பெரும்பாலும், பெற்றோரின் இந்த உத்தியானது உடன்பிறப்புகளின் உறவை வளர்ப்பதில் வேண்டுமானால் எளிய வழியாக இருக்கலாம். இவர்களின் இந்த உத்தியினால், முதல் குழந்தை இளைய உடன்பிறப்புக்கு இரண்டாவது பெற்றோராக மாறுகிறார்கள்.

இதனால், சில மூத்த குழந்தைகள் தங்கள் இளைய உடன்பிறப்புகளுடன் பெற்றோரின் உணர்வுகளையும் பொறுப்பையும் வளர்த்துக் கொள்ளலாம், இது அவர்களின் ஆளுமை மற்றும் நடத்தையில் தெளிவாகத் தெரியும். இந்த இணைப்பானது, எல்லைக்குள் இருக்கும் வரை அது சீராக செல்கிறது. எல்லை மீறும்போது, இருவருக்கும் தீங்கு விளைவிக்கும். மூத்த குழந்தையானது தாங்கள் எப்படி தங்கள் பெற்றோருக்குக் கீழ்படிந்து நடக்கிறார்களோ, அதே போல் இளைய உடன்பிறந்தவர்களும் தங்களுக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என்று எதிர்பார்க்கத் தொடங்குவார்கள்.

8. மூத்த குழந்தை இளையவர்களை கட்டுப்படுத்தலாம்

மூத்த குழந்தை தன்னுடைய பர்ஃபக் ஷன் மற்றும் சாதனைகளுக்கான தேடலில், தன்னுடைய இளைய உடன்பிறப்புகள் உட்பட சுற்றியுள்ள அனைத்தையும் கட்டுப்படுத்தும் போக்கை வளர்த்துக்கொள்ளலாம். இயல்பாகவே மூத்த குழந்தைக்கு இருக்கும் இளைய உடன்பிறப்புகளை வழிநடத்திச் செல்லும் தலைமைப்பண்பு மற்றும் அவர்களுக்கு இரண்டாவது பெற்றோராக செயல்படும் ஆற்றல் போன்றவை மற்றவர்களை அதீதமாக கட்டுப்படுத்தும் குணத்தை வளர்த்துவிடுகிறது. இதனால், இளைய குழந்தைகளைவிட மூத்த குழந்தைகள், தங்கள் குடும்பத்திற்கு அதிக முன்னுரிமை அளிப்பதாக ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

ஒரு மூத்த குழந்தையானது வலுவான, சுதந்திரமான, மற்றவர்களை கட்டுப்படுத்தும் மற்றும் தலைமைப்பண்புள்ள குழந்தையாகவும் இருக்கலாம் அல்லது அதற்கு நேர்மாறாக, இணக்கமான, மக்களை மகிழ்விக்கும் (People pleaser) குணமுடையவர்களாகவும் இருக்கலாம். எதிரெதிர் குணாதிசயங்களை உடையவர்களாக மூத்த குழந்தை இருப்பார்கள்.

மூத்த குழந்தை நோய்க்குறியிலிருந்து அவர்களை எப்படி வெளிக் கொண்டுவருவது?

வேண்டுமென்றோ அல்லது தற்செயலாகவோ, மூத்த குழந்தைகள் மீது திணிக்கப்படும் எதிர்பார்ப்புகளின் வெடிப்பு அவர்கள் மீது பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தும். உங்கள் மூத்த குழந்தை மக்களை மகிழ்விக்கும் (People pleaser) பண்புகளைக் கொண்டிருந்தால், எதிர்காலத்தில் அவர்கள் தோல்வியைச் சந்திக்கும்போது, அவர்கள் மிகவும் மோசமாக உடைந்து போகவோ அல்லது சுயபச்சாதாபமாகவோ உணரலாம். இவர்களின் இத்தகைய குணாதிசயம் மூத்த குழந்தையாக பிறந்ததால் வரக்கூடிய பரிபூரணவாதத்தின் (Perfectionism) போக்கிலிருந்து உருவாகிறது.

அவர்கள் தோல்வியை சந்திக்கும் தருணங்களில் பெற்றோர் அவர்களை ஊக்குவிக்க வேண்டும் மற்றும் பாராட்ட வேண்டும். சில சமயங்களில் தோல்வியடைய அவர்களை அனுமதித்து, இந்தத் தோல்வியை எப்படி மனதார ஏற்றுக்கொள்வது என்பதை அவர்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும்.உங்கள் மூத்த குழந்தை மீது அதிக பொறுப்பகளையும், எதிர்பார்ப்புகளையும் சுமத்த வேண்டாம். அதற்குப் பதிலாக, அவர்களின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு போதுமான வாய்ப்புகளை கொடுங்கள். மூத்த குழந்தை தன்னுடைய தலைமைத்துவ பண்புகளை வளர்த்துக்கொள்ளும் அதே நேரத்தில், மற்றவர்களின் சுதந்திரத்தை மதிக்கவும், மற்றவர்களின் மீது அதிக முதலாளியாகவோ அல்லது ஆதிக்கம் செலுத்தவோ கூடாது என்பதையும் அவர்களுக்கு கற்றுக் கொடுங்கள்.

உங்களுக்கு எத்தனை குழந்தைகள் இருந்தாலும், ஒவ்வொரு குழந்தைக்கும் தனிப்பட்ட நேரம் ஒதுக்குங்கள். மூத்த குழந்தையுடன் சாதாரணமாகவும் நட்பாகவும் பேச வேண்டும். நீங்கள் அவர்களின் நண்பர்கள் என்பதை உணர்த்துங்கள். உங்களின் பள்ளிப்பருவ வாழ்க்கை, வகுப்பு தோழர்கள், உங்கள் குழந்தைப் பருவ நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளலாம் மற்றும் அவர்களின் எதிர்காலத் திட்டங்களைப் பற்றி அவர்களிடம் பேசலாம்.

அவ்வாறு செய்வது அவர்களுக்கு தன்னம்பிக்கையையும், உங்களின் மீது நம்பிக்கையையும் வளர்க்கிறது. மேலும், தனக்கு இளைய உடன்பிறப்புகள் இருந்தபோதிலும், தங்களின் பெற்றோர்கள் தன்னை சமமாக நேசிக்கிறார்கள் என்பதை அவர்களுக்கு உணர்த்துகிறது.மூத்த குழந்தைகள் எதிர்கொள்ளும் பல கடினமான சூழ்நிலைகளில் ஒன்று அதிக கவனம் செலுத்தும் வளர்ப்பு ஆகும், ஏனெனில் பெற்றோர்கள் தங்கள் மூத்த குழந்தை மீது அதிக கவனத்தை செலுத்துகிறார்கள்.

இது, உடன்பிறந்தவர்களின் வருகைக்குப் பிறகு அவர்களின் வளர்ப்பை கடினமாக்கும். இதை சமன் செய்ய, உங்கள் மூத்த குழந்தைக்கு சில சிறப்பு சலுகைகளை வழங்க வேண்டும். அதாவது தாமதமாக தூங்கும் நேரம், பள்ளிக்குப் பிறகு அதிக நேரம் அவர்களுடன் விளையாடுவது மற்றும் சில விவாதங்களில் பேசுவது போன்ற சலுகைகளை வழங்கலாம். உங்கள் எல்லா குழந்தைகளுக்கும் சில விதிகளை அமைத்து, உங்கள் ஒவ்வொரு குழந்தைக்கும் சில சிறப்பு சலுகைகளை வழங்குங்கள். இது உங்கள் பிள்ளைகளின் மனதில் இருக்கும் எந்த ஒரு சார்புநிலையையும் சமன் செய்கிறது.

தொகுப்பு: உஷா நாராயணன்