Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மனம் பேசும் நூல் 6

நன்றி குங்குமம் தோழி

கையறு நதி

பொதுவாக மருத்துவமனைகளிலும், நீதிமன்ற வளாகத்திலும் அழுது கொண்டிருக்கும் மனிதர்களையும், கவலையில் இருக்கும் முகங்களையும் கண்டும் காணாமல் போய்க் கொண்டிருப்போம். ஆனால், இந்த உலகின் ஒட்டு மொத்த மனிதாபிமானம் குறித்தும் பக்கம் பக்கமாய் பேசுவோம். அது மாதிரிதான் இந்த புத்தகமும். பாதிக்கப்பட்ட நபர்களுக்காகவும், அவர்களின் உறவுகளுக்காகவும் மனிதாபிமானம் பேசும் சமூகம், எதையும் சரியாய் செய்வதில்லை என்பதைக் கூறுகிறது.

மனநலம் பாதிக்கப்பட்ட நபர்கள் குறித்தும், மனநலம் பாதிக்கப்பட்ட நபர்களின் நடவடிக்கைகள், அதனால் ஏற்படும் பாதிப்புகள், அவர்களை எப்படி நடத்த வேண்டும் என்பது குறித்து பல விழிப்புணர்வு புத்தகங்கள் பேசுகின்றன. ஆனால், எந்த புத்தகமும் மனநலம் பாதிக்கப்பட்ட நபர்களுடன் வசிக்கும் உறவுகள் குறித்தும், அவர்களின் வாழ்வாதாரம் எந்தளவு பாதிக்கப்படுகிறது என்பது குறித்தும் பேசவில்லை.

முதல் முறையாக ‘கையறு நதி’ மனநலம் பாதிக்கப்பட்ட நபரோடு இருக்கும் குடும்ப உறுப்பினர்கள் குறித்து பேசுகிற புத்தகமாக இருக்கிறது. நாவல் ஆரம்பிக்கும் இடமே அழகான குடும்பக் கதை போல், நூலின் ஆசிரியர் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் நமக்கு அறிமுகப்படுத்துகிறார். கதை மாந்தர்களான அம்மா, அப்பா, வளரிளம் வயதிலுள்ள இரண்டு பெண் குழந்தைகள் என குடும்பத்தில் உள்ள அனைவரும் அவரவர் வேலைகளில்... படிப்பில் சிறந்து விளங்குகிறார்கள். நன்றாகப் போய்க் கொண்டிருக்கும் அவர்களின் குடும்ப வாழ்க்கையில் ஒரு நாள் ஏற்பட ஆரம்பித்த பாதிப்பு, அடுத்தடுத்து வருகின்ற நாட்களையும் அர்த்தமற்றதாய் புரட்டிப்போட ஆரம்பிக்கிறது.

குடும்பத்திலுள்ள அவர்களின் இரண்டாவது மகளின் நடவடிக்கையில் சிறுசிறு மாற்றங்கள் தெரிய, தொடர்ந்து அவர் பள்ளிக்குச் செல்லவில்லை. அளவுக்கு அதிகமான கோபம். வகுப்பில் உடன் படிக்கும் தோழிகளுடன் சண்டை. ஆசிரியர்களுடன் வாக்குவாதம் என அவரின் தொடர் நடவடிக்கையால், பள்ளியிலிருந்து வீட்டிற்கு புகார்கள் வந்த வண்ணம் இருக்கிறது.நன்றாக படித்துக் கொண்டிருந்தவள் திடீரென ஏன் இப்படி நடந்துகொள்கிறாள் எனப் புரியாமல் பெற்றோர் தவிக்க, அவளை திட்டியும், அடித்தும் கேட்கிறார்கள். மாணவியோ தன்னை அனைவரும் கிண்டல் செய்கிறார்கள் எனவும், தன்னை யாரோ தொடர்ந்து கண்காணிக்கிறார்கள் எனவும் புகார்களை பிறர் மீது தெரிவிக்கிறார்.

பெற்றோருக்கோ மகள் படிக்கும் பள்ளி சொல்கிற புகார் உண்மையா? அல்லது மகள் சொல்லும் புகார் உண்மையா?

என்ற குழப்பம் வருகிறது. ஒரு கட்டத்தில், பள்ளிக்குப் போக மாட்டேன் என மறுக்கிறாள். மகளின் நடவடிக்கை புரியாமல் அப்பா கோபப்படுகிறார்.வீட்டில் ஒரு நாள் குறிப்பிட்ட பெண் அதிகம் கோபப்பட்டு, அக்கா, அம்மாவை தகாத வார்த்தைகளால் பேசி, வீட்டிலுள்ள பொருட்களை உடைத்து, பின்னர் தனது அறைக்குள் சென்று தாழிட்டுக் கொள்கிறாள். மகளது நடவடிக்கையின் தீவிரம், அப்போதுதான் அவளின் தந்தைக்கு புரிய வருகிறது. மகளை அழைத்துக்கொண்டு, மனநல மருத்துவரைப் பார்க்கச் செல்கிறார்.

மருத்துவர் பெற்றோரிடமும், குறிப்பிட்ட பெண்ணிடமும் பேசிய பிறகு, அவர்களின் மகளுக்கு மனச்சிதைவு நோய் ஏற்பட்டிருப்பதை சொல்கிறார். மனச்சிதைவு என்ற வார்த்தையை

இந்தக் குடும்பம் முதல் முறையாக கேள்விப்பட, அதற்கான மருந்து, மாத்திரை, மருத்துவம் என வாழ்க்கை நரகமாகிறது. மருத்துவத்திற்குப் பிறகாவது மகள் சரியாகி விடுவாள் என பெற்றோர் நம்புகிறார்கள். மாத்திரை எடுக்கும் போது தங்களின் மகள் நன்றாக இருந்தாலும், பழைய நிலைக்கு திரும்ப முடியாத நிலையில், மனநல மருத்துவம், மனநல ஆலோசனை என சிகிச்சைகளை தொடர்கின்றன.

இந்த சமூகம் பிறரை நோக்கி விரல் நீட்டி கேட்பதற்கு, சில கேள்விகளை எப்போதும் தயார் நிலையில் வைத்திருக்கும். அந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாத நபர்களை ஏளனமாகவும், கிண்டலாகவும் பார்க்கும். இந்தப் புத்தகத்தை படித்து முடிக்கும் நாமும், சமூகம் தயாரித்து வைத்திருக்கும் அம்மாதிரியான கேள்விகளை கேட்பதை குறைக்க முயற்சிப்போம்.

கேள்விகளில் சில...

திருமணமாகி விட்டதா?

குழந்தைகள் உண்டா?

குழந்தைகள் படிக்கிறார்களா?

நல்ல மதிப்பெண் எடுக்கி றார்களா?

பரிசு, விருது வாங்கியிருக்கிறார்களா?

வேலை கிடைத்துவிட்டதா?

வேலை கிடைத்துவிட்டது என்றால், திருமணம்?

இந்த வட்டத்திற்குள் உள்ள கேள்விகளுக்கு யாரிடமும் பதில் இருக்காது என்பதே உண்மை. சுற்றியிருப்பவர் எழுப்பும் இம்மாதிரியான கேள்விகளால், பெண்ணின் அம்மா, அப்பா மற்றும் அக்காவால், இந்த சமூகத்தை தினம் தினம் எதிர்கொள்வது கடினமாகிறது. தன் மகளை ஏதாவது ஒரு துறையில், அவளாகவே அவளைப் பார்த்துக் கொள்ளும் நிலைக்கு கொண்டுவர, பெண்ணின் அப்பா முயற்சிக்கிறார். மனநல மருத்துவர் உதவி மற்றும் மனநல ஆலோசகரின் வழிகாட்டலில், கைத்தொழில் சார்ந்த பயிற்சிகளுக்கு அனுப்புகிறார். சில நாட்கள் பயிற்சிக்கு செல்வதும், பிறகு வீட்டுக்குள் முடங்குவதுமாக அந்தப் பெண் இருக்கிறாள்.

மனநோயால் பாதிக்கப்பட்டவரை எப்படிக் கையாள்வதென குடும்ப உறுப்பினர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டு அறிவுரையும் வழங்கப்பட்டு இருப்பதால், பெற்றோரும், உடன் பிறந்தவர்களும் அவளை நன்றாகப் பார்த்துக் கொள்கிறார்கள்.

ஆனால், இந்த சமூகம்?

பாதிக்கப்பட்ட நபர்களை சரியாகக் கையாளத் தெரியாமல், தொலைபேசி அழைப்பு வந்தாலே, குடும்பத்தில் உள்ளவர்கள் பதறுகிற சூழலே நிலவுகிறது. இத்தகைய சூழல் மாறும் போதே, பாதிக்கப்பட்டவர்கள் உணர்வு அமைதியாகும் என்கிறார் இதழின் ஆசிரியர்.சிகிச்சைக்கான செலவுகள், சிகிச்சைக்கான பாதிப்புகள் மட்டுமின்றி, இந்த சமூகம், குறிப்பிட்ட குடும்பத்தை எள்ளளுடன் கையாள்வதுதான் தாங்க முடிவதில்லை. வாழ்க்கை நன்றாக இருந்தால் புண்ணியம் செய்தவர் எனவும், மோசமான சூழலில் இருப்பவர் எனில், என்ன பாவம் செய்தார்களோ இப்படி அவதிப்படுகிறார்கள் அல்லது என்ன சாபமோ இந்த குடும்பத்தை பாடாய்படுத்துகிறது எனவும் நகைப்பார்கள்.

குடும்பத்தில் இருப்பவர்கள் தினம் தினம் எதிர்கொள்ளும் பிரச்னைகள் மூலம், வேலை, வருமானம், கல்வி, வாழ்வியல் சார்ந்த பிற தேவைகள் என அனைத்தும் பாதிக்கப்பட, ஒரு கட்டத்தில் அந்த பெண்ணை மனநல மருத்துவமனையிலே முழுவதுமாக உள் நோயாளியாய் தங்கியிருந்து சிகிச்சை எடுக்க ஏற்பாடு செய்கிறார்கள். உடலோ, மனமோ பாதிக்கப்படுதல் என்பது எந்தகைய நிலையிலும் நிகழலாம் என்பதைப் புரிந்து கொள்ளாமல், பாவம், புண்ணியம் கணக்கில் சேர்க்கும் சமூகத்திடம் என்ன எதிர்பார்க்க முடியும் என்கிற ஆசிரியரின் கேள்விதான் பயத்தை நமக்கு ஏற்படுத்துகிறது.

தன் மகளுக்கு இப்படியான பாதிப்பு இருக்கிறது என்பதை பெற்றோர்களால் எப்படி சொல்ல முடியும்? எத்தனை பேரிடம் சூழலை விளக்க முடியும். இதற்கான புரிதல் மக்களிடம் உண்டா? என்ற ஆசிரியரின் கேள்விக்கு வாசகராகிய நாமும் குற்றவாளியாய் மாறி தலை குனிந்து நிற்கும் நிலைதான். மனநலம் பாதிக்கப்பட்ட நபர் இருக்கிற ஒரு குடும்பம் படும் கஷ்டத்தில் நாம் பங்கேற்பதோ, உதவுவதோ இல்லை. ஆனால், அத்தகைய குடும்பத்தைப் பார்த்து எள்ளி நகையாடி, விலகி நிற்கும் சமூகத்திடம், இந்தப் புத்தகம் சொல்கிற ஒரே விஷயம்... இக்கட்டான சூழலில், “நாங்கள் இருக்கிறோம்” எனக் கைக்கொடுக்கும் சமூகமே தேவை என்பதைதான்.

மனநல ஆலோசகர்: காயத்ரி மஹதி,