Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வொர்க் அவுட் செய்தபின் செய்யக் கூடாத 10 தவறுகள்!

நன்றி குங்குமம் டாக்டர்

தினசரி அன்றாட வேலைகளை பார்க்க வேண்டியதாக இருக்கு இது எங்கிருந்து நாம் உடற்பயிற்சி செய்யப்போகிறோம். நேரமில்லை. அதிலும் குடும்பப் பெண்களுக்கு கேட்கவே வேண்டாம் அதைவிட தாண்டி வேலைக்கு செல்லும் பெண்களின் நிலை உடற்பயிற்சிக்கு என்று நேரம் ஒதுக்குவது மிக கடினமான ஒன்றுதான். ஆனாலும் நம் ஆரோக்கியத்தின் மீது அக்கறை கொண்டு உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்க வேண்டியது அவசியம். அதேபோல் வொர்க் அவுட் செய்து முடித்த பிறகு நீங்கள் இந்த பத்து விஷயங்களில் கண்டிப்பாக கவனம் செலுத்தியாக வேண்டும். அதுதான் நல்ல பலனைத்தரும்.

கார்போ உணவுகள் வேண்டாம்

கார்போஹைட்ரேட் உணவுகள் வேண்டாம். வொர்க் அவுட் முடிந்ததும் கார்போ ஹைட்ரேட் உணவுகளை உண்ணக் கூடாது. இவை உடல் எடையை அதிகரிக்க வழிவகுக்கும். மாறாக, அதிக புரோட்டின் சத்துள்ள உணவுகளை உண்பதால் அவை உடலின் தசை வளர்ச்சிக்கு உதவும்.

ரன்னிங், சைக்கிளிங் கூடாது

ட்ரெட்மில்லில் ஓடுதல், சைக்கிளிங் போன்ற கார்டியோ வார்ம் -அப் வகைப் பயிற்சிகளை வொர்க் - அவுட் செய்த பிறகு, கண்டிப்பாகச் செய்யக் கூடாது ஏற்கெனவே கடுமையான உடற்பயிற்சிகளைச் செய்துவிட்டு மீண்டும் வார்ம் - அப் பயிற்சிகளைச் செய்வதால், அது மூட்டுகளையும் தசைகளையும் பாதிக்கும் உடற்பயிற்சி செய்வதற்கு முன்புதான் இவற்றைச் செய்ய வேண்டும். உடற்பயிற்சி முடித்த பிறகு, ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகளைத்தான் செய்ய வேண்டும்.

தண்ணீர் வேண்டும். ஆனால் வேண்டாம்.

உடற்பயிற்சி செய்து முடித்ததும் தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம். அதே நேரத்தில் குறைந்தபட்சம் ஐந்து நிமிட இடைவெளிக்குப் பிறகே குடிக்க வேண்டும். ஏனெனில் கடுமையான உடற்பயிற்சியின் போது அதிகமாக இருந்த ரத்த அழுத்தம் மற்றும் இதயத்துடிப்பு சாதாரண நிலைக்கு வரச் சிறிது நேரம் எடுத்துக்கொள்ளும். எனவே, உடனே தண்ணீர் குடிப்பதைத் தவிர்த்துவிடுங்கள்.

குளிர்பானங்கள் வேண்டாம்

வொர்க் - அவுட் முடித்தவுடன் உடல் களைப்பாக இருப்பதாக உணர்ந்தால், உடனே அதிகம் சர்க்கரை சேர்க்கப்பட்ட குளிர் பானங்களையோ, சோடா போன்றவற்றையோ குடிக்கக் கூடாது. அதிகமான சர்க்கரை மீண்டும் உடலின் கலோரிகளை அதிகரித்துவிடும். எனவே தண்ணீர் குடிப்பதே சிறந்தது.

உடையை மாற்றிவிடுங்கள்

வொர்க் -அவுட் முடித்ததும் நேராக வீட்டுக்குச் சென்று உடையை மாற்றிக் கொள்ள வேண்டும். ஏனெனில், உடற்பயிற்சியின் போது ஏற்பட்ட வியர்வையால், உடையில் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளின் தொற்று ஏற்பட்டிருக்கலாம். வொர்க்-அவுட்டின்போது உடுத்திய உடையை நீண்ட நேரம் உடுத்தினால், சருமத்தில் நோய்த்தொற்றுகள் ஏற்படலாம்.

சீஸ் வேண்டாம்

உடற்பயிற்சி செய்து முடித்ததும் சீஸ் சேர்த்த, சிக்கன், பர்கர் போன்ற உணவுகளை உண்ணக் கூடாது. ஏனெனில், அவற்றில் கொழுப்பு மற்றும் உப்பு அதிக அளவில் நிறைந்திருக்கும். இவை உடல் எடையை அதிகரிப்பதோடு, செரிமான மண்டலத்தையும் பாதிக்கும்.

வெள்ளை பிரெட் சாப்பிடாதீர்கள்

பிரெட்டில் உள்ள ஸ்டார்ச் வேகமாகச் சர்க்கரையாக மாறக்கூடியது. எனவே, இதை அதிக அளவில் சாப்பிடாமல், குறைந்த அளவில் சாண்ட்விச்சாக உண்ணலாம். முக்கியமாக வெள்ளை நிற பிரெட் உண்பதை அறவே தவிர்க்க வேண்டும்.

ஷவர் குளியலுக்கு நோ

வொர்க்- அவுட் முடித்ததும் வியர்வைப் படலம் ஏற்பட்டு, பாக்டீரியாவின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். எனவே, உடற்பயிற்சிக்குப் பிறகு, குளித்துவிடுவது நல்லது. ஆனால், ஷவரில் குளிப்பது ஏற்றதல்ல. குளிர்ந்த அல்லது வெதுவெதுப்பான நீரில் குளியுங்கள்.

ஜூஸ், மில்க் ஷேக் வேண்டாம்

ஜூஸ், மில்க் ஷேக் போன்றவற்றை உடற்பயிற்சிக்குப் பின் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். அவற்றில் சர்க்கரை அதிகம் இருப்பதால். அவையும் உடல் எடையை அதிகரிக்க காரணமாகிவிடும்.

ஆம்லெட்டுக்கு நோ சொல்லுங்கள்

உடற்பயிற்சிக்குப் பின் முட்டை சாப்பிடுவது நல்லதுதான். முட்டையில் புரோட்டின் மற்றும் கோலைன் அதிகம் உள்ளது. ஆனால் முட்டையைப் பொரித்தோ வறுத்தோ சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். வேகவைத்து உண்ணலாம்.

தொகுப்பு: பொ.பாலாஜிகணேஷ்