Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

பூப்பெய்திய இளம் பெண்களுக்கான 10 உணவுகள்!

நன்றி குங்குமம் டாக்டர்

ஒரு பெண் குழந்தையின் வாழ்க்கையில் உடல் ரீதியாக பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவது பூப்பெய்தும் நிகழ்வுதான். விளையாட்டுத் தனமாக துள்ளித் திரிந்த ஒரு குழந்தை முதிர்ந்த பெண்ணாகத் தன்னை உருமாற்றிக் கொள்வதற்கான தொடக்கப்புள்ளிதான் பூப்பெய்தும் நிகழ்வு. அதனால் ‘பெண் குழந்தைகள் பூப்பெய்தும்போது அவர்கள் உணவு விஷயத்திலும் அதிகக் கவனம் செலுத்த வேண்டும்’ என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.“பூப்பெய்திய பெண் குழந்தைகளின் விஷயத்தில் முதலில் கண்காணிக்க வேண்டியது உடல் எடையைத்தான்.

பெண் குழந்தைகள் பூப்பெய்தியதும் ‘சத்துள்ள உணவாகச் சாப்பிட வேண்டும்’ என்று நினைத்து கெட்ட கொழுப்பு, கார்போஹைட்ரேட் அடங்கிய உணவுகளை அளவுக்கு மீறிச் சாப்பிடக்கொடுக்கிறார்கள். இதனால் சரியான எடையைப் பராமரிக்க முடியாமல், உடல் பருமன் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடல் எடை அதிகரிப்பதால், மாதவிடாய் தள்ளிப்போவது, தைராய்டு போன்ற பிரச்னைகள் ஏற்படும்.

மேலும், உடல் பருமனால் கருமுட்டை வளர்ச்சிக்குத் தேவையான ஃபாலிக்கில் ஸ்டிமுலேட்டிங் (Follicle Stimulating) மற்றும் லியூட்டினைஸிங் (Luteinizing) என்ற இரு ஹார்மோன்களும் பாதிக்கப்படும். இந்த இரண்டு ஹார்மோன்களும் பாதிக்கப்படுவதால் கர்ப்பப்பையில் நீர்க்கட்டிகள் (PCOS) உருவாகி, பிற்காலத்தில் தாய்மை அடைவதும் கேள்விக்குறியாகும். எனவே, ஒரு பெண் குழந்தை பூப்பெய்தியதும் உடலுக்குத் தேவையான அளவு மற்றும் ஆரோக்கியமான உணவுகளைச் சாப்பிட வேண்டியது அவசியம்’’ எனும் சித்த மருத்துவர் மானக்சா, பூப்பெய்தியதும் கொடுக்க வேண்டிய ஆரோக்கிய உணவுகள் குறித்து விளக்குகிறார்.

1.கறுப்பு உளுந்து - தோல் நீக்காமல் கறுப்பு உளுந்தில் வடை, களி செய்தும், சத்துமாவாகப் பொடித்தும் சாப்பிடலாம். சத்துமாவு மற்றும் களி தயாரிப்பதற்குக் கறுப்பு உளுந்தை நன்றாக வறுத்துப் பொடித்துக்கொள்ள வேண்டும். பின் நாட்டுச்சர்க்கரை அல்லது பனை வெல்லம் சேர்த்து சத்துமாவாகச் சாப்பிடலாம். அதே மாவைக் கூழ் போன்று காய்ச்சி, நல்லெண்ணெய், காய்ந்த திராட்சை, முந்திரி மற்றும் பாதாம் ஆகியவற்றுடன் சேர்த்துச் சாப்பிடக் கொடுக்கலாம். எலும்புகள் வலுவாகவும் மற்றும் சீரான மாதவிடாய் சுழற்சிக்கு உதவும் ஈஸ்ட்ரோஜன் (Estrogen), புரோஜெஸ்ட்டிரோன் (Progesterone) ஆகிய ஹார்மோன்கள் சீராகச் செயல்படவும் கறுப்பு உளுந்து உதவும்.

2.நல்லெண்ணெய் - ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்ட்டிரோன் ஆகிய ஹார்மோன்கள் செயல்பாட்டுக்கு நல்ல கொழுப்பு மிகவும் அவசியம். நல்லெண்ணெயில் இருந்து கிடைக்கும் கொழுப்பு, நல்ல கொழுப்பு வகையைச் சேர்ந்தது. எனவே, உணவில் அடிக்கடி நல்லெண்ணெய் மற்றும் நெய் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

3.நாட்டு முட்டை - பெண் குழந்தைகள் பூப்பெய்திய உடன் உடலுக்குத் தேவையான கொழுப்புச்சத்தை தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும். தினமும் ஒன்று அல்லது இரண்டு நாட்டுமுட்டையை மஞ்சள் கருவுடன் சேர்த்துச் சமைத்துச் சாப்பிட வேண்டும். எந்த முட்டையையும் சமைக்காமல் சாப்பிடக் கூடாது.

4.கம்பு - வறுத்த கம்பின் தானியத்தைப் பொடித்து, கூழாகவோ அல்லது களியாகவோ சமைத்துச் சாப்பிடலாம். எலும்புகள் வலுப்பெறக் கம்பு உறுதுணை புரியும்.

5.பொட்டுக் கடலை - பொட்டுக் கடலையை அப்படியே சாப்பிடலாம் அல்லது பொடித்து நாட்டுச்சர்க்கரைச் சேர்த்து சத்துமாவாகச் சாப்பிடலாம். இதுவும் எலும்பை வலுப்படுத்த உதவும்.

6.அசைவ உணவுகள் - மீன், ஆட்டிறைச்சி மற்றும் கோழி இறைச்சி ஆகியவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். ஆனால் குறைவான அளவு மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். உடலுக்குத் தேவையான புரதத்தை அசைவமே சிறப்பாக வழங்குகிறது.

7.கீரை வகைகள் - மாதவிடாய் நாட்களில் ரத்தப்போக்கு ஏற்படுவதால், சிலருக்கு ரத்தசோகை வர வாய்ப்பு உள்ளது. இதைத் தடுக்க முருங்கைக் கீரை, அரைக்கீரை, பொன்னாங்கண்ணி கீரை, பசலைக் கீரை மற்றும் முள்ளங்கி கீரை இவற்றில் ஏதேனும் ஒரு கீரையை வாரத்துக்கு மூன்று முறை எடுத்துக்கொள்ள வேண்டும்.

8.பாகற்காய், சுண்டைக்காய் - சில பெண் குழந்தைகளுக்கு மாதவிடாய் நாட்களில் ரத்தப்போக்கு சற்று குறைவாக இருக்கும். மேலும் உடலில் ரத்தத்தின் அளவும் குறைய நேரிடும். இதற்கு வயிற்றில் இருக்கும் நாக்குப் பூச்சியும் காரணமாக இருக்கலாம். உணவில் பாகற்காய், சுண்டைக்காய் ஆகிய இரண்டையும் அதிக அளவில் சேர்த்துக்கொண்டால் நாக்குப்பூச்சி தொந்தரவு ஏற்படாது. மருத்துவரின் ஆலோசனையுடன் நாக்குப் பூச்சி மாத்திரைகளையும் எடுத்துக்கொள்வது நல்லது.

9.சத்து மாவு உருண்டை - கேழ்வரகு, கம்பு, நாட்டுச் சோளம், பொட்டுக்கடலை மற்றும் பயத்தம் பருப்பு ஆகியவற்றால் தயாரிக்கப்படும் சத்து மாவு உருண்டையை மாதத்துக்கு மூன்று நாட்கள் சாப்பிட வேண்டும். மாதவிடாய் நாட்களில் சாப்பிட்டால் அதிக அளவு பலன் பெறலாம்.

10. கொண்டைக் கடலை - கறுப்பு அல்லது வெள்ளைக் கொண்டைக் கடலையை வாரத்துக்கு இரண்டு முறை சேர்த்துக்கொண்டால் கர்ப்பப்பை ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது.

தொகுப்பு: லயா

பதற்றம் வேண்டாம்

சில பெண் குழந்தைகளுக்கு பூப்பெய்திய அடுத்த நான்கைந்து மாதங்களுக்கு மாதவிடாய் வராமல் இருக்கும். இதனால் பெற்றோர் பதற்றம் அடையத் தேவையில்லை. சத்தான உணவுகளைக் கொடுக்கும்போது மாதவிடாய் சீராகும். சில பெற்றோர் பொறுமையாக இல்லாமல் குழந்தைகளுக்குத் தேவையற்ற மருந்து, மாத்திரைகளைக் கொடுக்கிறார்கள். இதன் விளைவாக ஹார்மோன்களின் செயல்பாடு குறைந்துவிடும் அல்லது அதிகரித்துவிடும்.

எதற்கெல்லாம் சாப்பிட தடா?

ஆரோக்கியமான உடல் நலத்துக்கு என்ன சாப்பிடுகிறோம் என்பதைப் போலவே என்ன சாப்பிடக் கூடாது என்பதிலும் கவனமாய் இருக்க வேண்டியது அவசியம்.

எண்ணெய்ப் பலகாரங்கள், ஸ்நாக்ஸ், இனிப்புகள் போன்றவற்றில் கெட்ட கொழுப்பு நிறைந்திருக்கும். எனவே, எப்போதாவது ஆசைக்கு சிறிது சாப்பிடலாம். இவற்றை நிறைய எடுத்துக்கொள்வதால், உடல் எடை அதிகரித்து ஹார்மோன் கோளாறுகள் உருவாகக்கூடும்.

நூடுல்ஸ், பாஸ்தா போன்ற ஃபாஸ்ஃபுட்ஸ்கள், பானிபூரி, பேல்பூரி, காளான், கோபி மஞ்சூரியன், பீட்சா, பர்கர், மோமோ, அத்தோ போன்ற ஜங்க் ஃபுட்ஸ்கள், கோலா போன்ற கார்போனேட்டட் பானங்கள், செயற்கைப் பழரசங்கள் போன்றவற்றையும் எப்போதாவது சாப்பிடலாம். அடிக்கடி சாப்பிட்டால் செரிமானத்தைப் பாதிப்பதோடு, உடல் எடையையும் கட்டுப்பாடில்லாமல் அதிகரிக்கச் செய்யும். பல இளம் பெண்களுக்கு அடிவயிற்றில் இளம் தொப்பை உருவாக இந்த உணவுகளே காரணம்.