Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆடி மாத பிறப்பை முன்னிட்டு திருப்புவனம் வாரச்சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடு விற்பனை: வரத்துக் குறைவால் விலை கிடுகிடு

திருப்புவனம்: ஆடி மாதப் பிறப்பை முன்னிட்டு திருப்புவனம் வாரச்சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனையாயின. இம்முறை வரத்துக்குறைவால், ஆடுகளின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை வாரச்சந்தை கூடும். இந்த சந்தையில் காலை 5 மணி முதல் 8 மணி வரை ஆடு, கோழி, மாடுகள் விற்பனையாகும். அதன்பின்னர் காய்கறி சந்தையாக செயல்படும். திருப்புவனம் பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் ஆடு, மாடு, கோழிகளை சந்தையில் விற்பனை செய்து, அதில் கிடைக்கும் பணம் மூலம், தங்கள் வீட்டுக்கு தேவையானப் பொருட்களை வாங்கிச் செல்வர்.

மாவட்டத்திலேயே திருப்புவனம் தாலுகாவில்தான் அதிகளவில் ஆடு உள்ளிட்ட கால்நடைகள் வளர்க்கப்படுகின்றன. திருப்புவனம் சந்தையில் தேனி, மதுரை, விருதுநகர், பரமக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகளும், அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் வியாபாரிகள் வந்து ஆடு, மாடுகளை வாங்கிச் செல்வர்.

ஆடி சேல்ஸ் டாப்

இந்நிலையில், நாளை மறுநாள் (ஜூலை 17) ஆடித் திருநாள் கொண்டாடப்பட உள்ளது. இதனால், திருப்புவனம் சந்தையில் இன்று அதிகாலையிலேயே ஆடு விற்பனை களைகட்டியது. இதையொட்டி 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன. கடந்த வாரம் ரூ.8 ஆயிரத்துக்கு விற்பனையான ஆடு, இந்த வாரம் 10 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானது. ஒரு கிலோ நாட்டுக்கோழி ரூ.250 முதல் ரூ.350 வரை விற்பனையானது. 6 கிலோ கொண்ட வான்கோழி ஜோடி ரூ.800, சண்டைச் சேவல் ரூ.3 ஆயிரத்துக்கும் விற்பனையானது. வியாபாரிகள் தாங்கள் வாங்கிய ஆடு, கோழிகளை சரக்கு வாகனம் மூலம் தங்கள் ஊர்களுக்கு கொண்டு சென்றனர்.

இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘பொதுவாக ஆடி, ரம்ஜான், தீபாவளி சமயங்களில் 5 ஆயிரம் ஆடுகள் வரை விற்பனையாகும். ஆனால், இம்முறை ஆடுகளின் வரத்து குறைந்துள்ளது. இதனால், விலை உயர்ந்துள்ளது. மொத்தம் ரூ.2 கோடி வரை ஆடுகள் விற்பனையாயின. சமீப காலமாக சில வியாபாரிகள் கிராமங்களுக்கே சென்று ஆடு வாங்குவதால், சந்தைக்கு ஆடுகளின் வருகை குறைந்துள்ளது’ என்றார்.

கிராமங்களில் ஆடி தான் டாப்

தமிழக கிராமப்புறங்களில் ஆடி மாதப்பிறப்பை தலை ஆடியாக கொண்டாடுவர். திருமணமான புதுமண தம்பதிகளை தலை ஆடிக்கு அழைத்து தடபுடலான அசைவ விருந்து கொடுப்பர். வீடு தோறும் ஆடு, கோழி என அசைவ விருந்து களைகட்டும். தீபாவளியை விட ஆடித்திருநாள் சிறப்பாக இருக்கும்.