Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

உள்ளிருந்து புத்துணர்வாகுங்கள்!

நன்றி குங்குமம் டாக்டர்

டீடாக்ஸ் ட்ரிக்ஸ்

நாம் உண்ணும் உணவுகள், சுவாசிக்கும் காற்று ஆகியவற்றாலும் பழைய செல்கள் உதிர்ந்து, புதிய செல்கள் தோன்றும். உடலின் இயல்பான வளர்சிதை மாற்றச் செயல்பாடுகளாலும் நம் உடலில் கழிவுகள் சேர்ந்துகொண்டே இருக்கும். இந்தக் கழிவுகளை முழுதுமாக வெளியேற்றி உடலைப் புத்துணர்வாக வைத்திருக்க அவ்வப்போது டீடாக்ஸ் முறைகளைப் பின்பற்ற வேண்டியது அவசியம்.

ரத்தம்

ரத்தம்தான் நம் உடல் முழுதும் பாயும் ஜீவநதி. காற்றில் உள்ள ஆக்சிஜன் முதல் உண்ணும் உணவுப் பொருட்களில் உள்ள சத்துகள் வரையிலும் அனைத்தையும் கொண்டு போய் உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும் சேர்ப்பது ரத்தம்தான். இது மட்டும் அல்ல. உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளைச் சுமந்து சென்று வெளியேற்றுவதிலும் ரத்தம் முக்கியப் பங்கு வகிக்கிறது. ரத்தத்தை சுத்தமாக்க இரும்புச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களையும், நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகளையும் கேரட், பீட்ரூட் போன்ற கரோடினாய்டு நிறைந்த காய்கறிகளையும், சிவப்பு வண்ணப் பழங்களையும் அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும். தினசரி 2-3 லிட்டர் தண்ணீர் பருகுவது ரத்தத்தை எப்போதும் தூய்மையாக வைத்திருக்கும் ஒரு டீடாக்ஸ் டிரிக்.

கல்லீரல்

உறுப்புகளின் அரசன் என்றால் அது கல்லீரல்தான். நாம் உண்ணும் உணவைச் செரிப்பதில் கல்லீரலின் பங்கு மகத்தானது. நம் உடலில் கல்லீரல் மட்டும்தான் பாதியாக அறுத்தாலும் மீண்டும் வளரும் இயல்புகொண்ட ஒரே உறுப்பு. அந்த அளவுக்கு கடினமான உழைப்பாளி இது. ஆரோக்கியமாக உள்ள கடைசி நொடி வரையிலும் சிறப்பாக வேலை செய்யும். இதனால்தான் கல்லீரல் பாதிப்புகளை முற்றிய நிலையிலேயே கண்டறிய முடிகிறது.

கல்லீரலைப் பாதுகாக்க எளிதில் ஜீரணமாகும் உணவுகளை அதிகமாக உண்பதும், இரவில் கண் விழிக்காமல் எட்டு மணி நேரம் உறங்குவதும் அவசியம். கீழாநெல்லி கல்லீரலின் நண்பன். இது, கல்லீரலில் உள்ள தேவையற்ற நஞ்சுகள், கொழுப்பை அகற்றி கல்லீரலைச் சுத்தம் செய்கிறது. மஞ்சள் காமாலை பாதிப்பு உள்ளவர்கள், மதுப் பழக்கத்துக்கு அடிமையானவர்கள் கீழாநெல்லியைப் பயன்படுத்தி கல்லீரலைச் சுத்தம் செய்யலாம்.

நுரையீரல்

தாயின் வயிற்றிலிருந்து வெளியே வந்ததும் செயல்படத் தொடங்கும் பிரதான உறுப்பு நுரையீரல்தான். நுரையீரலைப் பாதுகாப்பது என்பது நீண்ட ஆயுளுக்கான அடிப்படைகளில் ஒன்று. மூளை சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் செயல்பட நுரையீரல் வலுவாக இருக்க வேண்டும் என்று மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. சுற்றுப்புறச் சூழல் தூய்மையின்மையாலும் காற்று மாசு ஏற்படுவதாலும் புகைப்பழக்கத்தாலும் நுரையீரல் மோசமாகப் பாதிக்கப்படுகிறது.

நுரையீரலை சுத்திகரிப்பதில் புதினாவுக்குச் சிறப்பான இடம் உள்ளது. இதைத் தவிரவும் ஆன்டிஆக்சிடன்ட் நிறைந்த இஞ்சி, மஞ்சள் போன்றவையும் நுரையீரலைச் சுத்திகரிக்கவல்லவை. கிரீன் டீ, கேரட், எலுமிச்சை போன்றவற்றையும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். தினசரி காலை எழுந்ததும் பிராணாயாமம் எனும் மூச்சுப் பயிற்சி செய்வதும் ஓசோன் நிறைந்த அதிகாலைக் காற்றைச் சுவாசிப்பதும் நுரையீரலுக்கு நல்லது.

இதயம்

நாம் துடிப்புடன் இருக்க நமக்காகத் துடித்துக்கொண்டே இருக்கும் உறுப்பு இதயம். உடல் முழுதும் ரத்த ஓட்டம் சீராக இருக்க இதயத் துடிப்பு சீராக இருக்க வேண்டியது அவசியம். ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாடாக வைத்திருப்பது இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கான முக்கியமான வழி. புகைப் பழக்கம் இதயத்துக்கு எமன். கேரட், பீட்ரூட் போன்ற கரோட்டினாய்டு நிறைந்த உணவுகளும் சாத்துக்குடி, ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற சிட்ரிக் நிறைந்த உணவுகளும் இதயத்தைச் சுத்திகரிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. வாக்கிங், ஜாகிங், நீச்சல், சைக்கிளிங், ஸ்கிப்பிங் போன்ற கார்டியோக் பயிற்சிகளும் நடனம், ஏரோபிக்ஸ் பயிற்சியும் இதயத்தைக் காக்கும் நற்பழக்கங்கள்.

சிறுநீரகம்

நமது உடலின் கழிவுத் தொழிற்சாலை இதுதான். உடல் முழுதும் பயணித்து ரத்தம் சேகரித்துக்கொண்டுவரும் தேவையற்ற கழிவுப் பொருட்களை ரத்தத்தில் இருந்து பிரிக்கும் முக்கியமான வேலையைச் சிறுநீரகங்கள் செய்கின்றன. தினசரி போதுமான அளவு தண்ணீர் பருகாதது, மதுப்பழக்கம், அதிக உப்புத்தன்மை கொண்ட தண்ணீர் போன்றவற்றால் சிறுநீரகம் பாதிக்கப்படுகிறது. வாழைத்தண்டு சிறுநீரகத்தை சுத்திகரித்து சிறப்பாகச் செயல்படவைக்கிறது. நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள், பழங்கள் அதிகமாக எடுத்துக்கொள்வதன் மூலம் சிறுநீரகத்தைக் காக்கலாம்.

டீடாக்ஸ் டிரிங்க்ஸ்

நுரையீரல் - கொள்ளு-கண்டந்திப்பிலி ரசம்

தேவையானவை:

கொள்ளு - 2 டீஸ்பூன்,

கண்டந்திப்பிலி - 1 துண்டு,

மிளகு, சீரகம் - தலா 1/4 டீஸ்பூன்,

பூண்டு - 2 பற்கள்,

மஞ்சள் தூள், கறிவேப்பிலை - சிறிதளவு,

உப்பு - தேவையான அளவு.

செய்முறை: அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து விழுதாக அரைக்க வேண்டும். பிறகு, தேவையான அளவு தண்ணீரில் அனைத்தையும் போட்டு நன்கு கொதிக்க வைத்து,

இளஞ்சூடாகப் பருகலாம்.

இதயம் - செம்பருத்தி ஜூஸ்

தேவையானவை:

செம்பருத்திப்பூ - 4,

பன்னீர் ரோஜா - 2,

பனங்கற்கண்டு அல்லது தேன் - சிறிதளவு,

எலுமிச்சை சாறு அல்லது இளநீர் - 1 கப்.

செய்முறை: செம்பருத்தி, ரோஜா இதழ்களை நீரில் போட்டு நன்கு கொதிக்கவைக்க வேண்டும். இதனுடன் பனங்கற்கண்டு சேர்த்துக் கலக்கி ஆறவிடவும். பிறகு எலுமிச்சை சாறு அல்லது இளநீர் சேர்த்துக் கலந்து பருகலாம்.

கல்லீரல் - கீழாநெல்லி ஜூஸ்

தேவையானவை:

கீழாநெல்லி இலை - 1 கைப்பிடி,

கொத்தமல்லித் தழை, பனை வெல்லம் - சிறிது,

எலுமிச்சைச் சாறு - 1 டீஸ்பூன்,

இந்து உப்பு - தேவையான அளவு.

செய்முறை: அனைத்தையும் மிக்ஸியில் போட்டு அரைத்து வடிகட்ட வேண்டும். பிறகு தேவையான அளவு நீர் சேர்த்துப் பருகலாம்.

சிறுநீரகம் - வாழைத்தண்டு வெள்ளரி ஜூஸ்

தேவையானவை:

வாழைத்தண்டு (பொடியாக நறுக்கியது) - 1 கப்,

வெள்ளரித் துண்டுகள் - ½ கப்,

எலுமிச்சைச் சாறு - 1 டீஸ்பூன்,

பனங்கற்கண்டு - தேவையான அளவு.

செய்முறை: அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைக்க வேண்டும். பிறகு, வடிகட்டிப் பருகலாம். பனங்கற்கண்டுக்குப் பதிலாக தேனும் பயன்படுத்தலாம்.

ரத்தம் - முருங்கைக்கீரை ஜூஸ்

தேவையானவை:

முருங்கைக்கீரை - 1 கப்,

மிளகு - 5,

சீரகம், - 1 டீஸ்பூன்,

எலுமிச்சைச் சாறு - 1 டீஸ்பூன்,

இந்துப்பு, பனங்கற்கண்டு - தேவையான அளவு.

செய்முறை: முருங்கைக் கீரையுடன் மிளகு, சீரகம், எலுமிச்சைச் சாறு சேர்த்து மிக்ஸியில் அடித்து, வடிகட்ட வேண்டும். பிறகு, இந்துப்பு, பனங்கற்கண்டு சேர்த்து பருகலாம். பனங்கற்கண்டுக்குப் பதிலாகத் தேனையும் பயன்படுத்தலாம்.

தொகுப்பு: லயா