Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

குன்னூரில் 6 பள்ளிகளை சேர்ந்த 562 மாணவர்களுக்கு இலவச சைக்கிள்

*அமைச்சர் ராமசந்திரன் வழங்கினார்

ஊட்டி : குன்னூர் புனித மரியன்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு 6 பள்ளிகளை சேர்ந்த 562 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கினார். பள்ளிக்கு கல்வித்துறை சார்பில் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா குன்னூர் புனித மரியன்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. விழாவில், நீலகிரி மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு முன்னிலை வகித்தார்.

தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் ராமசந்திரன் கலந்து கொண்டு குன்னூர் புனித மரியன்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 190 மாணவியர்களுக்கும், உபதலை அரசு மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 65 மாணவர்களுக்கும், குன்னூர் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 27 மாணவர்களுக்கும், அருவங்காடு புனித அன்னாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 101 மாணவர்களுக்கும், குன்னூர் ஸ்ரீசாந்தி விஜய் பெண்கள் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 32 மாணவர்களுக்கும், குன்னூர் புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 147 மாணவர்களுக்கும் என மொத்தம் 6 பள்ளிகளைச் சார்ந்த 562 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.27.01 லட்சம் மதிப்பிலான விலையில்லா ைசக்கிள்களை வழங்கினார். தொடர்ந்து அவர் பேசியதாவது:

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆட்சிப்பொறுப்பேற்றது முதல் பல்வேறு நலத்திட்டங்களையும், வளர்ச்சித்திட்டப்பணிகளையும் அறிவித்து, அதனை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். ஒரு சராசரி மனிதனின் அடிப்படை தேவையான உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க இருப்பிடம் முக்கியமானது. அதுமட்டுமல்லாமல் மருத்துவம் மற்றும் கல்வி ஆகியவை அனைவருக்கும் சென்று சேர்க்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் பல்வேறு திட்டங்கள் தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும், ரேஷன் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாசிய உணவுப்பொருட்களும், இலவச வேட்டி - சேலைகளும், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் குடியிருப்புகளும், தற்போது கலைஞர் கனவு இல்லத்தின் கீழ் வீடுகளும் வழங்கப்பட்டு வருகிறது. நமது மாவட்டத்தில் கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையானது 3வது ஆண்டில் மருத்துவ மாணவர்களுடன் அடியெடுத்து வைத்துள்ளது. குறிப்பட்ட, கட்டுமான பணிகள் விரைவில் முடிவடைந்து பொதுமக்களின் பயன்பாட்டிற்காக விரைவில் திறந்து வைக்கப்படவுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில், குக்கிராமங்களில் நோயாள் பாதிக்கப்படும் பொதுமக்கள் நகரத்திலுள்ள மருத்துவமனைகளுக்கு வரும் சிரமத்தை போக்குவதற்காக அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதுமான மருத்துவர்களை நியமித்து, மருத்துவ சேவை வழங்கப்பட்டு வருகிறது. மேலும், கல்வித்துறையை பொறுத்தவரை புதுமைப் பெண்திட்டம், தமிழ் புதல்வன் திட்டங்கள் மூலம் மாணவ, மாணவியர்களின் வங்கிக்கணக்கில் மாதந்தோறும் தலா ரூ.1000 வழங்குவதன் மூலம் உயர்கல்வி பயில்வதை அரசு உறுதி செய்துள்ளது.

மேலும், இல்லம் தேடிக்கல்வி எனும் சிறப்புத்திட்டம் செயல்படுத்தும் விதமாக தன்னார்வலர்கள் மூலம் ஒவ்வொரு கிராமத்திலும் குழந்தைகளுக்கு கல்வி கற்றுக்கொடுத்து அவர்களின் கல்வி ஆற்றலை மேம்படுத்துவது, நான் முதல்வன் திட்டம் மூலமாக பள்ளிக்கல்வி முடித்து, உயர்கல்வி செல்லும் மாணவ, மாணவியர்களுக்கு வழிகாட்டி ஏற்படுத்தி, அவர்களுக்கு நல்வழி காட்டுவது, பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத்திட்டத்தின் மூலம் பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்துவது, காலை உணவுத்திட்டத்தின் மூலம் பள்ளிக்கு வரும் குழந்தைகள் பசியின்றி கல்வி கற்பதை உறுதி செய்வது போன்ற சிறப்பு வாய்ந்த திட்டங்கள் அரசால் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில், பள்ளிக்கல்வித்துறை சார்பில் விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டத்தின்கீழ், 2021-2022ம் கல்வியாண்டில் 5410 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.2.75 கோடி மதிப்பீட்டிலும், 2022-2023ம் கல்வியாண்டில் 4074 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.1.96 கோடி மதிப்பீட்டிலும், 2023-2024ம் கல்வியாண்டில் 4087 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.1.97 கோடி மதிப்பீட்டிலும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், 2024-2025ம் கல்வியாண்டில் 4040 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.1.94 கோடி மதிப்பீட்டில் விலையில்லா சைக்கிள் வழங்கப்படுகிறது.

அதோடு மட்டுமல்லாமல், பள்ளிகல்வித்துறை மூலம் மாணவ, மாணவியர்கள் நலன் காக்க, கல்வி மேம்படுத்த அரசு வழங்கும் பல்வேறு நலத்திட்டங்களை பயன்படுத்தி, மாணவ, மாணவியர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்’’ என்றார். குன்னூர் வருவாய் கோட்டாட்சியர் சதீஷ், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா, குன்னூர் நகர மன்ற துணைத்தலைவர் வசீம்ராஜா, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின நல அலுவலர் சுரேஷ்கண்ணன், குன்னூர் ஊராட்சி ஒன்றியத்தலைவர் சுனிதாநேரு, திட்டக்குழு உறுப்பினர் ராமசாமி, குன்னூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்திரசேகர், சுப்ரமணி, எடப்பள்ளி ஊராட்சித்தலைவர் முருகன், புனித மரியன்னை மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் மார்கிரேட் ஆரோக்கியமேரி, நகரமன்ற உறுப்பினர் உமா வினோத் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.