`இனி சின்ராச கையிலேயே புடிக்க முடியாதுங்க... என்று சொல்லும் அளவுக்கு தேர்தல் வந்துவிட்டால் தூங்கி வழிந்த அரசியல்வாதியிலிருந்து ஆக்ரோஷமாக அறிக்கைவிட்டு கொண்டிருக்கும் அரசியல்வாதிகள் வரை எல்லோருக்கும் சுறுசுறுப்பு பலமடங்கு கூடிவிடும். எதிர்க்கட்சியாக இருந்தால், ஆளும் கட்சிகளின் தவறுகளை கண்டித்து பக்கம் பக்கமாக அறிக்கை வெளியிடுவார்கள். மைக்கை நீட்டுபவர்களிடமெல்லாம் நரம்பு புடைக்க விமர்சனங்களை முன்வைப்பார்கள். ஆளும் கட்சியாக இருந்தால், புதிய திட்டங்களை அறிவித்து வாய்ப்பு கிடைக்கும் இடங்களிலெல்லாம் தேர்தலுக்கான வாக்காளர்களை அறுவடை செய்ய தீவிரம் காட்டுவார்கள்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே இருக்கும் நிலையில், தேர்தல் புயல் தமிழகத்தில் இப்போதே மையம் கொள்ளத் தொடங்கிவிட்டது. அப்படி பார்க்கும் போது, தமிழக அரசியல் களத்தின் தலையெழுத்தை தீர்மானிக்கும் ஆண்டாக 2025 அமைந்துள்ளது. இந்த ஓராண்டில் நடக்கும் அரசியல் மாற்றங்களும், நிகழ்வுகளுமே சட்டமன்ற தேர்தலில் வலுவாக எதிரொலிக்க வாய்ப்பு உள்ளது. அந்த வகையில், 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, எதிர்கட்சிகள் அனைத்தும் 10 மாதங்களுக்கு முன்பே திடீரென சுற்றுப்பயணத்தை தொடங்கி இருப்பது விவாதப் பொருளாகியுள்ளது.
மக்களை சந்திப்பதில், தமிழகத்தில் உள்ள அரசியல் தலைவர்களில் முதலிடத்தை பெறுபவர் என்று சொன்னால் முதல்வர் மு.க.ஸ்டாலினைதான் குறிப்பிட முடியும். ஏனென்றால், அவரது கடந்த கால அரசியல் நடவடிக்கைகள் அதை உறுதிப்படுத்துவதாக உள்ளன. கடந்த 10 ஆண்டுகள் தமிழகத்ைத அதிமுக ஆட்சி செய்தது. அப்போது வலுவான எதிர்கட்சி தலைவராக மு.க.ஸ்டாலின் பதவி வகித்து வந்தார். 2017ம் ஆண்டு முதல்வராக இருந்த ஜெயலலிதா உடல் நலக்குறைவால் மறைந்தார். அவர் மறைவுக்கு பிறகு பரபரப்பான அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்துள்ள காலக்கட்டத்தில், எதிர்கட்சித் தலைவரான மு.க.ஸ்டாலின் எவ்வளவோ அரசியல் செய்திருக்க முடியும். ஆனால் அவர் பெருமளவில் அறிக்கை விடுதல், தனிப்பட்ட முறையில் திமுகவினரை கொண்டு அடையாளப் போராட்டங்கள் நடத்துதல் ஆகியவற்றோடு நிறுத்திக் கொண்டார்.
இந்த காலகட்டத்தில் மு.க.ஸ்டாலினின் சில செயல்பாடுகள் அவரை கண்ணியமான அரசியல்வாதியாக மக்கள் மனதில் பதியவைத்திருக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை. ஆனாலும், எதிர்கட்சித் தலைவர் என்றதோடு நிறுத்தி கொள்ளாமல், அப்போதைய ஆட்சியாளர்களை விட மக்களை நேரில் சந்தித்ததில் பெரும் பங்கு வகித்தவர் மு.க.ஸ்டாலின். குறிப்பாக சென்னையில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளப் பெருக்கின் போது பம்பரமாக சுழன்று பணியாற்றினார்.
அதுமட்டுமல்ல, கொரோனா காலகட்டங்களிலும் மக்களுக்கு தேவையான உதவிகளை நேரில் சென்று வழங்கும் பணிகளை திமுக தொண்டர்கள் மூலம் தமிழகம் முழுவதும் தீவிரப்படுத்தினார். தமிழகம் முழுவதும் அதிக அளவிலான சுற்றுப்பயணங்களை மேற்கொண்டு மக்கள் மனதில் அசையா இடத்தை பிடித்தார். இன்னும் சொல்லப் போனால், 2015ல் அவர் மேற்கொண்ட நமக்கு நாமே சுற்றுப்பயணம், மு.க.ஸ்டாலினுக்கு பெரிய அளவிலான வரவேற்பையும், பெற்று தந்தது எனலாம். மாணவர்களுடன் கலந்துரையாடல் நடத்தியது, கட்சியினரின் இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்தது, சாலையோர கடைகளில் தேநீர் அருந்தியது என அவரின் நமக்கு நாமே சுற்றுப்பயணத்தில் இயல்பாக நடந்து கொண்டது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுத் தந்தது.
மேலும், டெல்லியில் போராடிய விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் அவர் தலைமையில் நடந்த எதிர்க்கட்சிகளின் கடையடைப்பு போராட்டம் பெருமளவு வெற்றிபெற்றது. தமிழகத்தில் பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு எதிர்க்கட்சியால் அழைப்பு விடுக்கப்பட்ட போராட்டத்துக்கு அவ்வளவு ஆதரவு கிடைத்தது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.
இப்படி எதிர்கட்சி வரிசையில் இருந்த போதும், மக்கள் பிரச்னையாக பல்வேறு போராட்டங்களையும் முன்னெடுத்து வெற்றி பெற்றார். மக்கள் சந்திப்பு, சுற்றுப்பயணம் என அவரது மக்களை சந்திக்கும் பயணம் என்பது பெரிய அளவில் அப்போதைய அரசியலில் பேசப்பட்டது. நிலைமை இப்படி இருக்கும் போது, தமிழக அரசியல் தற்போது 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி பரபரப்பாக நகர்ந்து கொண்டிருக்கிறது. ஆனாலும், ஆளுங்கட்சியாக இருந்த போது முதல்வர் மு.க.ஸ்டாலின் வழக்கமான மக்கள் சந்திப்பை நடத்தி வருகிறார். அந்த வகையில், கடந்த 1ம்தேதி முதல் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற பிரசாரத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் வீடு வீடாகச் சென்று மக்களைச் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்கவும் திமுக உறுப்பினர் சேர்க்கையை மேற்கொள்வதற்கும் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், எதிர்கட்சிகளாக இருக்கக்கூடிய அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் கடந்த 4 ஆண்டுகளாக இருக்கும் தெரியாமல் இருந்து விட்டு, இப்போது தேர்தல் நெருங்கும் நிலையில் பிரசார வாகனங்களில் மக்களை சந்திக்க படையெடுத்திருப்பது மக்கள் மத்தியில் பேசும் பொருளாக மாறியுள்ளது. வெள்ள பாதிப்பு உள்ளிட்ட இயற்கை பேரிடர்களின் போது மக்களை நேரில் சென்று சந்திக்காத எதிர்கட்சிகள் எல்லாம் இப்போது வரிந்து கட்டிக் கொண்டு மக்களை சந்திக்க புறப்பட்டது தான் தமிழக அரசியலில் தற்போது ஹாட் டாப்பிக்காக உள்ளது என சொல்லலாம். எதிர்கட்சி தலைவர் எங்கே இருக்கிறார் என்று மக்கள் விமர்சித்து வரும் நிலையில், சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் எடப்பாடி பழனிசாமி கடந்த 7ம்தேதி முதல் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.
அவர் மட்டுமல்ல, பாமக தலைவர் அன்புமணி ‘தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம்’ என்ற பெயரில் இன்று முதல் சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். அவரது சுற்றுப்பயணமும் மக்கள் மத்தியில் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. தனது தந்தையிடம் இருந்து கட்சியை மீட்பதற்காகவே இந்த சுற்றுப்பயணத்தை அவர் தொடங்கி உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் விவாதம் எழுந்துள்ளது. ஏனென்றால் அன்புமணியின் சுற்றுப்பயணத்தை காவல் துறை தடை செய்ய வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
இது ஒருபுறம் இருக்க, இவ்வளவு நாள் சினிமாவில் தீவிரம் காட்டி வந்த நடிகர் விஜய், கட்சியை தொடங்கி சட்டமன்ற தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறார். தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள உள்ளார். இப்படி தேர்தல் ஒன்றை மட்டுமே குறி வைத்து, எதிர்கட்சிகள் ஒவ்வொன்றாக மக்களை சந்திக்கிறோம் என்ற பெயரில் வரிசை கட்டிக் கொண்டு சுற்றுப்பயணத்தை தொடங்கி இருப்பது தமிழக அரசியலில் எதிர்கட்சிகள் மீதான விமர்ச்சனங்களை அதிகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மக்களை திசை திருப்பும் முயற்சி நாஞ்சில் சம்பத் குற்றச்சாட்டு
எதிர்க்கட்சிகளின் சுற்றுப்பயணம் குறித்து, திராவிட இயக்க சொற்பொழிவாளர் நாஞ்சில் சம்பத்திடம் கேட்ட போது அவர் கூறியதாவது:
அவர்கள் அறுவடை காலத்துக்கு வருகிற வெட்டுக் கிளிகள். திமுகவை பொறுத்தவரை தேர்தல் காலம் என்பது விதைக்கிற காலம். எடப்பாடி பழனிசாமி, அன்புமணி போன்றவர்களுக்கு இது அறுவடை காலம் என்று அவர்கள் கருதுகிறார்கள். ஆனால் வெண்ணைக்கும், சுண்ணாம்புக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் அல்ல மக்கள். பச்சைக் கொடிக்கும், பச்சை பாம்புக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் அல்ல மக்கள். திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்பு தமிழக முதல்வராக அவர் முடிசூட்டப்பட்ட பின்பு கண்ட களங்கள் அனைத்திலும் வாகை பூக்களை சூடியுள்ளார்.
இடைத்தேர்தல் என்றால் ஆளுங்கட்சி தான் வெல்லும் என்ற எழுதப்படாத நியதி இந்த மண்ணில் இருந்தது. அந்த நியதியை நிர்மூலமாக்கி, 23 தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் அதிமுகவிடம் இருந்து 23ல் 13 தொகுதிகளை தன்வசமாகி கொண்ட தலைவர் மு.க.ஸ்டாலின். வரும் சட்டமன்ற தேர்தலில் திமுகவின் வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது. விக்கிரவாண்டி, ஈரோடுக்கு வர முடியாதவர்கள் சந்தடி சாக்கில் பொதுத் தேர்தல் என்ற போர்வையை போர்த்திக் கொண்டு மக்களை சந்திக்க வருகிறார்கள்.
4 ஆண்டு காலம் எதிர்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி கடமை ஆற்றவே இல்லை. எதிர்கட்சி என்பது ஆளுங்கட்சியை எதிர்ப்பது அல்ல. ஆளுங்கட்சி தவறு செய்யுமானால், இது தவறு என்று அடையாளப்படுத்த வேண்டிய பொறுப்பு எதிர்கட்சிக்கு உண்டு. ஆனால், தமிழகத்தின் உரிமைகளை மீட்டெடுக்க ஒரு வல்லாதிக்கத்தோடு மு.க.ஸ்டாலின் போராடும் போது அவர்களுக்கு வால் பிடித்து கொண்டிருந்தார் எடப்பாடி பழனிசாமி. 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்த போது, நயினார் நாகேந்திரன் வெளிநடப்பு செய்தார் அது எனக்கு புரிகிறது. ஆனால் எடப்பாடி பழனிசாமி வெளிநடப்பு செய்தது எனக்கு இன்னும் புரியவில்லை.
சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் தராத நிலையில், நீதிமன்றத்தை நாடி அதை பெற்று தந்திருக்கிறார் முதல்வர். எனவே தென்னகத்தின் முதல்வராக மு.க.ஸ்டாலின் உருவெடுத்திருக்கிறார். இந்த அரசால் தமிழ்நாட்டில் பலன் பெற்றவர்கள் எண்ணிக்கை 2 ேகாடியே 88 லட்சம் பேர். இந்த மக்கள் மட்டும் வாக்களித்தால் திமுக வெற்றி பெற்றுவிடும். இதை திசை திருப்ப அவர்கள் செய்யும் முயற்சி பலிக்காது.
இப்போது கடை திறந்து வைத்திருக்கிறார். கொள்வார் இல்லை என்ற நிலமைக்கு எடப்பாடி பழனிச்சாமி தள்ளப்பட்டிருக்கிறார். அவரது பயணம் எந்த இடத்திலும் சோபிக்கவில்லை. சுடர் விடவில்லை. மக்கள் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிறார். நான் சொல்கிறேன், ‘சம்பாதித்ததை காப்போம், சம்பந்தியை மீட்போம்’ என்பதற்காக தான் இந்த பயணம். மக்களை திசை திருப்பவே அவர் இந்த பயணத்தை தொடங்கி இருக்கிறார். ராமதாசின் ஆதிக்கத்தில் இருந்து விடுபட தெரியாமல் எந்த சுவரில் முட்டுவது என்று தெரியாமல் அன்புமணி தத்தளிக்கிறார். நலிவுற்ற நிலையிலும் தமிழ்நாடு நலிந்து விடக்கூடாது என்று மருத்துவமனையில் இருந்தே மக்கள் பணியை முதல்வர் தொடர்ந்துள்ளார். அவருக்கு மக்கள் கருணை காட்டுவார்கள் என்று நம்புகிறேன். 7வது முறையாகவும் திமுக ஆட்சிக்கு வரப்போகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


