Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

முன்னாள் காவல் அதிகாரிகளை கொண்டு செயல்பட ஏற்பாடு சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களை நிர்வகிக்க புதிதாக ‘எக்ஸ்போர்ஸ்’ படை: சென்னை மாநகராட்சி அதிரடி நடவடிக்கை

சென்னை: சென்னையில் 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தெருக்களில் வாகனங்களை நிறுத்தும் வசதியை நிர்வகிக்க, முன்னாள் காவல் அதிகாரிகளை கொண்ட ‘எக்ஸ்போர்ஸ்’ எனும் புதிய படையை சென்னை மாநகராட்சி களம் இறக்கி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. சென்னையில் நாளுக்கு நாள் மக்கள் தொகை மற்றும் வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் போக்குவரத்து நெரிசலும் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு உயர்ந்து வருகிறது. இதனால் எந்த இடத்தில் எந்த வாகனங்களை யார் நிறுத்துவது என்ற குழப்பமும், கேள்வியும் வாகன ஓட்டிகள் இடையே எழுந்துள்ளது. இந்த பிரச்னையை தீர்க்க புது பார்க்கிங் விதிமுறைகளை கொண்டுவர சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக சென்னை அண்ணாநகர் தெருக்களில் வாகனங்களை நிறுத்துவோரிடமிருந்து கட்டணம் வசூலிக்கும் முறை அமல்படுத்தப்பட உள்ளது. தொடர்ந்து சென்னையின் பல்வேறு இடங்களுக்கும் இந்த திட்டம் படிப்படியாக விரிவுபடுத்தப்பட உள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது: சென்னையில் தெருக்கள் மற்றும் சாலை ஓரங்களில் நிறுத்தப்படும் வாகனங்களை முறைப்படுத்த முன்னாள் காவல் அதிகாரிகளை கொண்ட ‘எக்ஸ்போர்ஸ்’ என்ற படையை தமிழ்நாடு அரசு உருவாக்கியுள்ளது. சென்னையில் 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இங்கு வாகன நிறுத்த வசதிகளை நிர்வகிக்கும் வகையில் இந்த படையை சென்னை மாநகராட்சி களம் இறக்கி உள்ளது. தற்போது பார்க்கிங் நிர்வாகத்தை சிவில் அமைப்பு நேரடியாக கையாண்டு வரும் நிலையில் சாலையோரங்களில் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களுக்கு 5 ரூபாயும், கார்களுக்கு 20 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஆனால் இதில் பல முறைகேடுகள் நடப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்தன.

குறிப்பாக, முந்தைய ஒப்பந்ததாரர் டூர்க் மீடியா சர்வீசஸ் நிறுவனம், வாடிக்கையாளர்களிடம் அதிக கட்டணம் வசூலித்த குற்றச்சாட்டின் பேரில் ஒப்பந்தத்தில் இருந்து விடுவிக்கப்பட்டது. அதிக கட்டணம் வசூலிப்பது, தவறான நிர்வாகம் போன்ற புகார்களுக்கு பிறகு, தற்போது சென்னை மாநகராட்சி, இந்த தமிழ்நாடு முன்னாள் காவல் அதிகாரிகள் படையை உருவாக்கியுள்ளது. தினசரி ஊதியம் அடிப்படையில் இவர்கள் ஊதியம் பெறுவர். இவர்கள் சென்னை மாநகராட்சியின் வருவாய் துறையால் நேரடியாக கண்காணிக்கப்படுவர். பார்க்கிங் கட்டணம் வசூலிக்க ஒப்பந்தம் அளிக்கப்பட்ட போது மாநகராட்சிக்கு நாள் ஒன்றுக்கு சுமார் ரூ.10 லட்சத்துக்கும் அதிகமாக நிதி பற்றாக்குறை ஏற்பட்டது. தற்போது மாநகராட்சியின் இந்த முயற்சியால் நிதி வருவாய் அதிகரிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

* கொள்கை வரைவு திட்டம்

சென்னையில் வாகன நிறுத்தம் தொடர்பான கொள்கைகளை வகுக்கும்படி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது. அதாவது, பொதுமக்கள் விதிமுறைகளை பின்பற்றாமல் ஆங்காங்கே தங்களது வாகனங்களை பார்க்கிங் செய்வதை எதிர்த்து தொடரப்பட்ட இந்த வழக்கில் இறுதி கொள்கை முடிவு 3 மாதங்களுக்குள் செயல்படுத்தப்படும், என உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு உறுதி அளித்துள்ளது. இந்த இந்த வழக்கு குறித்து விசாரித்து தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் சாலைகளில், வாகனங்களை பொதுமக்களுக்கு இடையூறாக நிறுத்துவதால் ஏற்படும் சிரமங்களை தவிர்க்கும் வகையில் இந்த இறுதிக் கொள்கை அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கிறோம், என தெரிவித்தனர். சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து கழகம் மோட்டார் வாகன பார்க்கிங் கொள்கை வரைவு திட்டத்தை கொண்டு வந்துள்ளதாகவும் சம்பந்தப்பட்ட துறைகளின் கருத்துக்களை பெற்று, 3 மாதங்களுக்குள் இது இறுதி செய்யப்படும் எனவும் உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.