மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் பாஜ மாஜி பெண் எம்.பி உட்பட 7 பேரும் விடுதலை: மும்பை சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
புதுடெல்லி: மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள மாலேகான் என்ற இடத்தில் கடந்த 2008ம் ஆண்டு செப்.29ல் பயங்கர குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. இதில் ஆறு பேர் உயிரிழந்தனர். சுமார் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதுதொடர்பாக பாஜ முன்னாள் எம்.பி., பிரக்யா சிங் தாக்கூர், லெப்டினன்ட் கர்னல் பிரசாத் புரோஹித் சமீர் குல்கர்னி, ராஜா ரஹீர்கர்,, சுவாமி அம்ரூதானந்த், சுதாகர் சதூர்வேதி உள்ளிட்ட ஏழு பேர் மீது, சட்டவிரோத தடுப்பு நடவடிக்கைகள் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது.
இந்த வழக்கை விசாரித்த மும்பை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பை ஒத்தி வைத்திருந்தது. இருப்பினும் வழக்கில் தொடர்புடையை பிரக்யா சிங் தாக்கூர் உள்பட, குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் அப்போது ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
சுமார் 17 ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டு வந்த மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் மும்பை சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஏ.கே.லஹோட்டி நேற்று தீர்ப்பு வழங்கினார். அதில், “இந்த வழக்கில் குற்றம்சடடப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்படுகின்றனர். குண்டு வெடிப்புக்கு சதித்திட்டம் தீட்டியதற்கான எந்தவித ஆதாரமும் இல்லை. மேலும் காந்த் புரோகித் ஆர்டிஎக்ஸ் கொண்டு வந்ததற்கான ஆதாரமும் கிடையாது. குண்டு இருந்ததாக கூறப்பட்ட மோட்டார் சைக்கிள் சாத்விக்கு சொந்தமானது கிடையாது. அதற்கான ஆதாரமும் இல்லை.
மேலும் அதனை நிரூப்பிக்க அரசு தரப்பு தவறி விட்டது. அதேபோன்று குண்டு வெடிப்பில் காயமடைந்தவர்களின் மருத்துவ சான்றிதழ்களில் மோசடி நடந்துள்ளது தெரிய வருகிறது. இவை அனைத்தையும் அடிப்படையாக கொண்டுதான் தற்போது அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். குண்டு வெடிப்பில் கொல்லப்பட்ட ஆறு பேரின் குடும்பத்தாருக்கு தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் இழப்பீடாக வழங்க வேண்டும். தீவிரவாதத்துக்கு மதம் என்பது கிடையாது. எந்த மதமும் தீவிரவாதத்தை ஆதரிக்கவில்லை. ஒருவருக்கு எதிரான யூகங்களின் அடிப்படையில் அவரை குற்றவாளியாக அறிவிக்க முடியாது. அதற்கு வலுவான ஆதாரங்கள் தேவை. இந்த வழக்கில் அத்தகைய ஆதாரங்கள் இல்லாததால் அனைவரும் விடுவிக்கப்படுகின்றனர்” என தீர்ப்பு வழங்கினார்.