அண்ணாநகர்: சென்னை கொளத்தூர் பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி கணேசன் (எ) ஆட்டோ கணசேன்(37). இவர் நேற்றுமுன்தினம் இரவு கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே நின்றபோது 2 பைக்குகள், ஆட்டோவில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் கணேசனை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர். படுகாயம் அடைந்த ரவுடி கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்துவிட்டு பின்னர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றார்.
இதுபோல், ராஜமங்கலம் சிவசக்திநகர் பகுதியை சேர்ந்த சந்திரா(52), அவரது மகன் ராமேஷ் ஆகியோரை வெட்டிவிட்டு கும்பல் தப்பியது. இதன்பின்னர் கொளத்தூர் கிரிஜா நகர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (35), தமிழ்ச்செல்வன் (25), மனோஜ் கிரண் (32), விஷால் ஆகிய 4 பேரையும் வெட்டிவிட்டு தப்பினர். இதுசம்பந்தமாக கோயம்பேடு காவல்நிலைய இன்ஸ்பெக்டர் விஜயரங்கன் தலைமையில் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர். இந்தநிலையில், நேற்றிரவு கோயம்பேடு காவல் நிலையத்தில் பிரபல ரவுடி மாசி(எ) அமாவாசை விக்கி (28), இவரது கூட்டாளிகள் சின்ன ஜீவா(20), சின்ன கருப்பு(19) பெரிய கருப்பு(20), முத்தையா(22) ஆகியோர் சரணடைந்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் பிரபல ரவுடி விக்கி கூறியதாவது;
குண்டாஸ் வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த மாதம் 31ம்தேதி ஜாமீனில் வெளியே வந்தேன். ரவுடி ஆட்டோ கணேசன், ராஜமங்கலம் பகுதியை சேர்ந்த ரவுடி ஆகாஷ் ஆகியோர் சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் என்னை கொலை செய்வதற்கு திட்டம் போடுவதை அறிந்து கொண்டேன். எனவே, அதற்கு முன்பே கணேசனை கொன்றுவிட வேண்டும் என்று கூட்டாளிகளுடன் சேர்ந்து ஆகாஷை தேடிசென்றபோது அவர் இல்லை என்றதால் ஆத்திரம் அடைந்தோம். அப்போதுதான் சந்திரா என்பவர் நீங்கள் யாருப்பா என்று கேட்டபோது அவரது தலையில் வெட்டினோம். தடுக்கவந்த அவரது மகனையும் வெட்டினோம். ராஜேஷை கத்தியால் வெட்டிவிட்டு பின்னர் கொளத்தூர் பகுதியில் பைக்கில் நின்றுகொண்டிருந்த 4 பேரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றோம். இதன்பிறகு கோயம்பேடு பேருந்து நிலையம் வந்து ரவுடி கணேசனை வெட்டினோம். ஆனால் அவர் தப்பித்து பிழைத்துவிட்டார்.
இவ்வாறு தெரிவித்துள்ளார். இதையடுத்து ரவுடிகள் 5 பேர் மீது வழக்குபதிவு செய்து இன்று காலை புழல் சிறையில் அடைத்தனர்.
