Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

நடப்பதெல்லாம் நன்மைக்கே!

கப்பல் ஒன்று கடலில் வழிதவறி செல்லும்போது புயலில் சிக்கி மூழ்கிவிடுகிறது. அதில் ஒருவன் மட்டும் எப்படியோ தப்பிவிடுகிறான். அருகிலுள்ள தீவில் கரையேறிய அவன் ‘‘இறைவா, இங்கிருந்து எப்படியாவது என்னை தப்பிக்க வைத்துவிடு, ஆள் அரவமற்ற இந்தத் தீவில் எத்தனை நாள் நான் இருப்பது? என் மனைவி மக்களை பார்க்கவேண்டாமா?’’ என்று கதறி அழுதான். ஏதாவது ஒரு ரூபத்தில் தனக்கு உதவிக்கரம் நீளும் என்று தினசரி எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாந்துவிடுகிறான். எதுவும் உதவி கிடைத்தபாடில்லை.

இப்படியே நாட்கள் ஓடுகின்றன. தன்னை காத்துக்கொள்ள, தீவில் கிடைத்த பொருட்கள் மற்றும் கப்பலின் உடைந்த பாகங்கள் இவற்றை கொண்டு ஒரு சிறிய குடிசை ஒன்றை கட்டி, அதில் தங்கி வந்தான். இப்படியே சில நாட்கள் ஓடுகின்றன. எனினும் பிரார்த்தனையை மட்டும் விடவில்லை. கடவுள் ஏதாவது ஒரு ரூபத்தில் நமக்கு நிச்சயம் உதவுவார் என்று தன்னை தேற்றிக் கொண்டான்.

ஒரு நாள் அவன் உணவு தேடுவதற்காக வெளியே சென்றுவிட்டு திரும்புகையில், அவன் கண்ட காட்சி அவனை திடுக்கிட வைத்தது. பட்ட காலிலே படும் என்பது போல, எது நடக்கக்கூடாதோ அது நடந்துவிட்டது. அவன் தங்குவதற்கென்று இருந்த ஒரே குடிசையும் வானுயுற எழும்பிய புகையுடன் தீப்பிடித்து எரிந்துகொண்டிருந்தது. அதை பார்த்த அவன், அலறித் துடித்தான்.

‘‘இறைவா… என்னை காப்பாற்றும்படி தானே உன்னிடம் மன்றாடினேன். நீரோ இருப்பவற்றையும் பறித்துக் கொண்டீரே… இதுதான் உமது நீதியோ…?’’ என்று கதறி அழுதான்.

அந்தநேரம் ஒரு கப்பலின் சப்தம் இவனை எழுப்பியது. அவன் தீவை நோக்கி அது வந்து கொண்டிருந்தது. ‘‘அப்பாடா… நல்ல வேளை… ஒரு வழியாக யாரோ நம்மை காப்பாற்ற வருகிறார்கள்’’ என்று உற்சாகத்தில் துள்ளி குதித்தான். கப்பல் சிப்பந்திகள் இவனை லைஃப் போட்டில் வந்து அழைத்து சென்றார்கள். தான் இங்கே தீவில் மாட்டிக் கொண்டிருப்பது எப்படி தெரியும் என்று அவர்களிடம் கேட்க, ‘‘தீவில் ஏதோ பற்றி எரிந்து புகை எழும்பியதை பார்த்தோம்.

யாரோ தீவில் கரை ஒதுங்கி காப்பாற்ற வேண்டி சிக்னல் கொடுக்கிறார்கள் என்று நினைத்து வந்தோம்’’ என்றார்கள். அப்போதுதான் இறைவன் குடிசையை எரித்த காரணம் இவனுக்கு புரிந்தது. மனம் நிறைந்து இறைவனுக்கு நன்றி சொன்னான். அந்த வழியில் கப்பல்கள் வருவதே மிக மிக அரிதான நிலையில், குடிசை மட்டும் தீப்பிடித்து எரியவில்லை என்றால், தன் நிலை என்னவாகியிருக்கும் என்று அவனுக்கு புரிந்தது. அவசரப்பட்டு இறைவனை நிந்தித்ததை நினைத்து வெட்கினான். இறை வாசகரே, இதைப் போலவே வாழ்க்கையில் பல சந்தர்ப்பங்களில் நாம் இப்படித்தான் நமது தேவனை அவசரப்பட்டு தவறாக எடை போட்டு விடுகிறோம்.

நம்மை காக்கவே அவர் ஒவ்வொரு கணமும் காத்திருக்கிறார். அவர் அனுமதிக்கும் சோதனைகள் அனைத்தும் நம்மை வேறொரு மிகப் பெரிய ஆபத்திலிருந்து காக்கவேதான் என்று நாம் புரிந்து கொண்டால், எதைப் பற்றியும் கவலை கொள்ளவேண்டியதில்லை. ‘‘தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்’’ (ரோமர் 8:28) என்று இறைவேதம் கூறுகிறது. ஆகவே நமது வாழ்வில் நடைபெறும் ஒவ்வொரு நிகழ்வுகளும் நமக்கு நன்மைக்கானதாகவே தேவன் அமைத்துத் தருகிறார் என்பதை நாம் நினைவில் வைத்திருப்பது நல்லது.

- அருள்முனைவர் பெவிஸ்டன்.