ஈரோடு, நவ. 25: தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருதுபெற விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஈரோடு கலெக்டர் கந்தசாமி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் துறையின் கீழ் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தங்களை முழுமையாக அர்ப்பணித்தவர்களுக்கு ‘தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருது’ வழங்கப்பட உள்ளது. இந்த விருதுடன் ரூ.1 லட்சம் பரிசுத்தொகையும் வழங்கப்படும். சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வை சிறப்பாக செயல்படுத்திய தனிநபர்கள், நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள், குடியிருப்போர் நலச்சங்கங்கள், உள்ளாட்சி அமைப்புகள், தொழிற்சாலைகள், தன்னர்வலர்கள் என 100 பேருக்கு தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருது வழங்கப்படும்.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், மாவட்ட கலெக்டர் தலைமையில் அமைக்கப்பட்ட பசுமை சாம்பியன் விருது தேர்வுசெய்யும் குழு மூலம் தகுதி வாய்ந்தவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எனவே, இந்த விருதுக்கான விண்ணப்ப படிவம் www.tnpcb.gov.in < http://www.tnpcb.gov.in/ > என்ற தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை உரிய ஆவணங்களுடன் வருகிற ஜனவரி மாதம் 20ம் தேதிக்குள் மாவட்ட கலெக்டரிடம் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு ஈரோடு மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் சுற்றுச்சூழல் பொறியாளரை அணுகலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


