Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சுற்றுச்சூழல் பாதிப்புகளால் அழிவுகள் அதிகம்; உழவுக்கு துணை நிற்பதில் முக்கிய பங்காற்றும் பாம்புகள்: விழிப்புணர்வு நாளில் விவசாயிகள் பெருமிதம்

உலகளவில் 3,500 பாம்பு இனங்கள் உள்ளது. இதில் இந்தியாவில் மட்டும் 300 வகை பாம்புகள் உள்ளன. அவற்றில் 52 வகை பாம்புகள் மட்டுமே விஷம் கொண்டவை. தமிழ்நாட்டை பொறுத்தவரை சாரைப்பாம்பு, நீர்ச்சாரை, வெள்ளிக்கோல் வரையன், பச்ைசபாம்பு, கொம்ேபறி மூக்கன், மண்ணுளி பாம்பு உள்ளிட்ட வகைகள் அதிகளவில் உள்ளது என்று ஆய்வுகள் ெசால்கிறது. ஆனால், சுற்றுச்சூழல் பாதிப்பு, காடுகள் அழிப்பு போன்ற பல்வேறு காரணங்களால், பாம்பினங்கள் அழிந்து வருவதாக வனஉயிரின ஆர்வலர்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர். பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பது, நம்மில் பலர் உச்சரிக்கும் ஒரு சொல். பாம்ைப கண்டவுடன் பதறி அடித்து ஓடும் கூட்டம், அவற்றை அடித்துக் கொல்வதையே இலக்காக வைக்கிறது. இதுவும் பாம்புகளின் அழிவுக்கு ஒரு காரணம்.

இதுபோன்ற அவலங்களை தடுத்து, பாம்புகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், உலக பாம்புகள் தினம் ஆண்டு தோறும் ஜூலை 16ம்தேதி அனுசரிக்கப்படுகிறது. இந்த வகையில் இன்று, சர்வதேச பாம்புகள் தினத்தை முன்னிட்டு பல்வேறு தகவல்களை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 10சென்டிமீட்டர் அளவில் இருக்கும் பார்படாஸ்திரட் என்ற பாம்பினம் தான், உலகிலேயே மிகவும் சிறியது. ரெட்டிகுலேட்டடு பைத்தான் எனப்படும் ராஜமலைப்பாம்பு தான் உலகிலேயே நீளமானது. 30அடி நீளம்வரை வளரும் இந்த பாம்பினம், இந்தியாவில் தான் உள்ளது. தென்அமெரிக்காவில் உள்ள பச்சை அனகோண்டாவும் உலகிலேயே மிகப்ெபரிய பாம்பு. இதன் எடை 100 கிலோ வரை இருக்கும். மேலும், முட்டையிட்டு அடைகாப்பது ராஜநாகம் மட்டும் தான் என்று பல்வேறு அரிய தகவல்கள் இந்தநாளில் வெளியிடப்பட்டுள்ளது.

இது ஒருபுறமிருக்க, பாம்பு மனிதர்களுக்கு நன்மை செய்யும் ஒரு உயிரினம் என்பதை பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. மிக முக்கியமாக, உழவுக்கு துணை நிற்பது பாம்புகள் என்ற தகவலை விவசாயிகள் வெளியிட்டு ெபருமிதம் தெரிவித்துள்ளனர். இது குறித்து விவசாயி ராமலிங்கம் கூறியதாவது: விவசாயிகள் பயிரிடும் தானியங்களை நாசப்படுத்துவதில், எலிகளுக்கு முக்கிய பங்கு உள்ளது. ஒரு எலி வருடத்திற்கு சராசரியாக 10 கிலோ தானியங்களை தின்னும். சாரைப்பாம்புகள், அந்த எலிகளை பிடித்து உணவாக உட்கொள்கிறது. ஒரு சாரைப்பாம்பு வருடத்திற்கு ஆயிரம் எலிகள் வரை வேட்டையாடும். இதன்படி ஒரு சாரைப்பாம்பு வருடத்திற்கு 10 டன் தானியங்களை நமக்கு காப்பாற்றி தருகிறது. பாம்புகளால் மட்டுமே எலிகளின் வளைக்குள் புகுந்து வேட்டையாட முடியும். இந்த வகையில், உயிரியல் பொறியாக, பாம்புகள் விவசாயிகளுக்கு பல்வேறு நன்மைகளை செய்கிறது.

இதேபோல், மண்ணுளி பாம்பை உழவன்பாம்பு என்றே அழைக்கலாம். இவை மண்ணுக்குள் புகுந்து செல்லும் போது, ஏற்படும் துளைகளில் காற்று செல்கிறது. இதனால் மண் இலகுவாக மாறி, தாவரங்களின் வேர் எளிதாக செல்ல வழிவகுக்கிறது. பச்சை பாம்புகள், பூச்சிகளை உண்டு கட்டுப்படுத்துகிறது. மேலும், பாம்புகள் பிற விலங்குகளுக்கு உணவாக உள்ளது. கழுகிற்கு பாம்பு தான் முதன்மை உணவு. நீரோடைகளில் காணப்படும் தண்ணீர் பாம்பு, நாரை போன்றவை பறவைகளுக்கு உணவாகிறது. மொத்தத்தில் விவசாயத்திற்கான சூழல் அமைவிலும், பாம்புகளின் பங்கு மிகவும் முக்கியமானது. இவ்வாறு விவசாயி ராமலிங்கம் கூறினார்.

4 வகை பாம்புகளால் மட்டுமே உயிர் பலிகள்

இந்தியாவை பொறுத்தவரை பாம்பு-மனித மோதல்கள் அதிகரித்து வருகின்றன. ஆண்டுக்கு ஒரு லட்சம் பேர் வரை பாம்புக்கடியால் பாதிக்கப்படுகின்றனர். அதில் 50ஆயிரம் பேர் வரை பலியாகின்றனர். இந்தியாவில் உள்ள 52 வகை விஷப்பாம்புகளில் நல்லபாம்பு, கட்டுவிரியன், கண்ணாடிவிரியன், சுருட்டைவிரியன் போன்ற 4 இனங்கள் மட்டுமே, மனித குடியிருப்புகளை சுற்றி வாழ்கின்றன. பெரும்பான்மையான உயிர்பலிகளுக்கு இந்த 4 பாம்பினங்கள் மட்டுமே காரணம். நல்லபாம்பு, கட்டுவிரியன் பாம்புகளின் விஷம், நரம்பு மண்டலத்தை பாதிக்கும். கண்ணாடி விரியன், சுருட்டை விரியன் பாம்புகளின் விஷம், ரத்தமண்டலத்தை பாதிக்கும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அனைத்திற்கும் ஒரே மருந்து தான்

பாம்பு கடித்தால் பதற்றப்படாமல், உடனடியாக மருத்துவமனைக்கு செல்லவேண்டும். கடித்த இடத்தில் கயிற்றை கொண்டு இறுக்கமாக கட்டக்கூடாது. அவ்வாறு கட்டுவதால், அந்த உறுப்பை வெட்டி எடுக்க வேண்டிய சூழல் வரும். பாம்பு கடிபட்ட இடத்தை பிளேடு, கத்தியால் வெட்டி ரத்தத்தை எடுப்பதும், வாயை வைத்து ரத்தத்ைத உறிஞ்சுவதும் தவறான வழிமுறைகள். பாம்பு கடித்த இடத்தை ஆட்டாமல், அசைக்காமல் வைத்துக் கொள்ள வேண்டும். பதற்றப்படுவதால் ரத்த ஓட்டம் அதிகமாகி, விஷம் வேகமாக பரவிவிடும். முடிந்தவரை விரைவாக மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும். எந்த பாம்பு கடித்தாலும் மருத்துவமனையில் ஒரே விஷமுறிவு மருந்து தான் கொடுக்கப்படும். எனவே, கடித்த பாம்பை தேடி நேரத்தை வீணடிக்காமல், உடனடியாக சிகிச்சைக்கு செல்ல வேண்டும் என்பது மருத்துவர்கள் வழங்கியுள்ள அறிவுரை.