படிக்கட்டில் இருந்த மின்கம்பத்தில் மின்கசிவு என வதந்தி ஹரித்துவார் மானசா தேவி கோயில் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலி: 30க்கும் மேற்பட்டோர் காயம்
ஹரித்துவார்: உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் 500 அடிக்கு மேல் சிவாலிக் மலை உச்சியின் மேல் அமைந்துள்ள மானசா தேவி கோயிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். இதனிடையே, ஆண்டுதோறும் சாவன் புனித மாதத்தில் நடைபெறும் கன்வார் யாத்திரை கடந்த 25ம் தேதியுடன் நிறைவடைந்தது. நடப்பாண்டு யாத்திரையின்போது 4.5 கோடி பக்தர்கள் ஹரித்துவாரில் குவிந்தனர்.
கன்வார் யாத்திரை முடிந்த நான்கு நாள்களில் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மானசா தேவி கோயிலில் வழக்கமான நாள்களை விட பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. ஏராளமான பக்தர்கள் படிக்கட்டு வழியே மேலே சென்று அம்மனை வழிபட்டு கொண்டிருந்தனர். அப்போது படிக்கட்டில் உள்ள ஒரு மின்கம்பத்தில் மின்கசிவு ஏற்பட்டதாக வதந்தி பரவியது.
இதனால் பீதியடைந்த பக்தர்கள் அவசர, அவசரமாக கீழே இறங்க முயன்றனர். அப்போது படியில் ஏறி கொண்டிருந்தவர்கள் சிலர் கீழே விழுந்தனர். கீழே விழுந்தவர்களை மிதித்து கொண்டும், ஒருவரையொருவர் தள்ளி கொண்டும் பக்தர்கள் உயிரை காப்பாற்றி கொள்ள முண்டியடித்து கொண்டு வேகவேகமாக கீழே இறங்கினர். இதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலிலும், கீழே விழுந்தவர்கள் மிதிபட்டதாலும், ஒருவரையொருவர் தள்ளி விட்டதாலும் ஏராளமானோர் காயமடைந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் மற்றும் மீட்பு குழுவினர் காயமடைந்த 35க்கும் மேற்பட்டோரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு 6 பேர் பலியாகினர். மீதமுள்ளவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்துக்கு உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, பிரதமர் மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.