Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஈசனை ஈர்த்த அருணா!!

எப்போதுமே கோயில்கள் இருவிதமான விஷயங்களை முன்னெடுத்துச் செல்லும். ஒன்று, புறத்தே இருக்கும் சிலைகளைக் காட்டி அதற்குள் பொதிந்திருக்கும் தத்துவத்தை விளக்க முயற்சிக்கும். இரண்டாவது, புராண விஷயங்களை பூரணமாகக் கூறி அதற்குள் ஒளிந்திருக்கும் ஆழமான ஆத்மார்த்தமான விஷயத்தை பதிய வைக்கும். அதனால்தான் முதலில் கோயில்களுக்குச் சென்று வாருங்கள் என்று சொல்லி மெதுமெதுவாக ஒவ்வொரு விஷயத்தை கவனிக்கச் செய்து தலத்தின் மையமான விஷயத்தை புரிந்து கொள்ளவைக்க முயற்சிக்கிறார்கள். கார்த்திகை தீபத் திருவிழாவின் மையக் கருவாக அமைந்திருப்பது ‘அர்த்தநாரீஸ்வரர்’ ஆகும். ‘உண்ணாமுலை உமையாளோடும் உடனாகிய ஒருவன் எனும் சிவபெருமான் அர்த்தநாரீஸ்வரர் திருக்கோலத்தில் காட்சி தந்ததே திருவண்ணாமலையில்தான்.தமது திருமேனியில் அன்னைக்கு இடபாகம் அருள்வதற்காக, சிவபெருமான் நிகழ்த்திய திருவிளையாடலை அருணாசல புராணம் விவரிக்கின்றது. அதேபோல், காஞ்சியில் அவதரித்த காமாட்சியம்மன், அக்னி ஸ்தலமான அருணையில் குடிகொண்டு அண்ணாமலையாரின் இடபாகம் பெற்றார். அதை நினைவுகூறும் வகையில், திருவண்ணாமலை வடக்கு வீதியில் காமாட்சியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது.

கயிலாயத்தில ஆழ்நிலை தியானத்தில் இருந்த சிவபெருமானின் கண்களை மூடியதால், உலக இயக்கம் தடைபட்டது. அதனால் ஏற்பட்ட பாவத்தைப் போக்க, காஞ்சியில் காமாட்சியாக அவதரித்தார் பார்வதிதேவி. அப்போது, கம்பை நதி வெள்ளத்தில் இருந்து, மணல் லிங்கத்தை காமாட்சியம்மன் காப்பாற்றினார். அதனால், அவரது பாவத்தைப் போக்கினார் சிவபெருமான்.இறைவன் மீது அன்புகொண்ட பார்வதி தேவி, எப்போதும் உம்மைப் பிரியாத வரம் வேண்டும், உமது திருமேனியில் இடபாகம் அருளவேண்டும் என வேண்டினார். மனமுருகிய சிவபெருமான், திருவண்ணாமலை சென்று தவமிரு, அப்போது நீ கேட்டபடி நடக்கும் என அருள்புரிந்தார்.அதன்படி, காஞ்சியில் இருந்து திருவண்ணாமலைக்கு அன்னை வந்தார். வரும்வழியில், அன்னை தங்கியிருந்து தவமிருக்க வசதியாக, செய்யாற்றின் கரையோரம் முருகப் பெருமான் வாழை இலைகளால் பந்தல் அமைத்துக் கொடுத்தார். இன்றைக்கும் அந்த இடம் வாழைப்பந்தல் என அழைக்கப்படுகிறது. பச்சையிலை பந்தலில் அமர்ந்து தவமிருந்ததால், அங்குள்ள அம்மனுக்கு பச்சையம்மன் எனும் திருப்பெயர்.திருவண்ணாமலை வந்த காமாட்சியம்மன் வடக்கு வீதியில் உள்ள கௌதம மகரிஷி ஆசிரமத்தை (பவழக்குன்று) சேர்ந்தார். அக்னி ஸ்தல ரிஷியான கௌதமரின் ஆலோசனைப்படி, மலைக்கு மேற்குத் திசையில் தர்மசாலை அமைத்து அம்மன் தவமிருந்தார். காமாட்சியம்மனின் கடும்தவத்தை கலைக்க முயன்ற மகிடாசூரனை, காவல் தெய்வமான துர்க்கையம்மன் வாளால் வெட்டி வீழ்த்தினார்.

இப்போது அசலமான ஈசனை அடைவதற்காக அருணா என்கிற பார்வதி தேவி மலையை பெரும் வியப்புணர்வோடு பார்த்தபடி இருந்தாள். கௌதம மகரிஷியும் அவளின் ஆச்சரியத்தையும், புத்தியால் வெல்லப்படாத மலையின் பிரமாண்டமான ஞானம் குறித்த விஷயத்தையும் புரிந்து கொண்டார். பார்வதி அம்மை மெல்லிய குரலில் ரிஷியை நோக்கி பேசத் தொடங்கினாள்.‘‘அருணாசலம் அக்னி ஸ்தம்பமாக அல்லவா இருந்தது.’’ பார்வதி தேவி கௌதமரை நோக்கி வினவினாள்.‘‘அம்மா... உண்மையில் அருணாசலன் அக்னியே ஆவான். ஆனால், கல்லையும் கனி தரும் மரங்களையும் தன்மேல் போர்த்திக் கொண்டிருப்பது என்பது கருணையினால் உலகை ரட்சிப்பதற்கே ஆகும். அக்னியா... என்று பதைத்து ஓடாது, அருணாசலா... என்று அன்பாய் அருகே வரவழைக்கவே மலையுருவக் கோலம் பூண்டிருக்கிறான். ஈசனின் ஞானாக்னி சொரூபத்தை உலகம் தாங்காது. ஆகையால் உலகம் என்னைத் தாங்க வேண்டுமாயின் நான் குளிர்ந்து மலைவடிவாக மாறியிருக்கிறேன் என்று ஈசனே உறுதி கூறியிருக்கிறார். அதையும் தவிர அருணகிரி சித்தன் என்ற வடிவில் இந்த கிரியின் வடபாகத்தில் உச்சியில் எக்காலத்திலும் ஈசன் வசிக்கிறார். இந்த மலை வடிவத்தின் கண், இகபர ஐஸ்வர்யங்களுடன் குகைகளும் விளங்குகின்றன. எனவே, இதை வலம் வருவோர் நிச்சயம் ஆத்ம விழிப்புணர்வை அடைவர். தன்னை அறிதலில் மிகத் தீவிரமாக ஈடுபடும் தீவிரத்துவத்தை, இம்மலை அளிக்கும். மோட்சத்திற்கான பாதைகள் திறந்து விடும்போது போக விஷயங்கள் எம்மாத்திரம்.‘‘அப்போது கிரியுருவில் விளங்கும் அருணாசலத்தை பிரதட்சணமாக வலம் வந்தாலே போதுமா’’ என்று அம்பிகையைச் சுற்றியுள்ள சீடர்கள் கேட்டார்கள்.

‘‘அதிலென்ன சந்தேகம். தாராளமாக வலம் வாருங்கள். வந்த பிறகு பாருங்கள்.’’‘‘என்ன செய்யும்? எப்படிச் செயலாற்றும்? இதன் ரகசியம் என்ன? சற்றே விளக்கிச் சொல்லுங்கள் மகரிஷி. ஏனெனில், நாங்கள் இதை மலை வடிவிலேயே பார்த்துக் கொண்டிருக்கிறோம்.’’ சீடர் புத்தி பூர்வமாக அறிந்து கொள்ளும் பொருட்டு கேட்டார்.‘‘சரி, சொல்கிறேன். ஏனெனில், அருணாசலத்தை வலம் வருகிறோமே. இந்த மலை நம்முடைய ஸ்தூலமான கண்களுக்கு கல்லும் மலையுமாகத்தானே தெரிகிறது. ஒரு கட்டத்தில் ஈசனே இந்த மலையுருவில் இருக்கிறார் என்று சொல்லியும் கூட ஒருபுறம் சந்தேகமும், மனதின் மறுபக்கத்தில் ஈசனே இதுதான் என்கிற நிச்சய உணர்வும் மாறி மாறி அல்லவா அலைக்கழிக்கிறது. பரவாயில்லை, இவை யாவும் மானிடர்களின் இயல்பே. அதில் தவறுமில்லை. ஆனால், அருணாசலத்தை அறிவது என்பது என்ன? ஈசனை அறிவது என்பது என்ன? வெளியே இருக்கும் பொருளை அறிந்துகொள்வது போலா? அருணாசலத்தை அறிவது என்பது நம்முடைய ஆத்மாவை அறிவதேயாகும். இங்கிருப்போர் அனைவரும் வெளிப்புறமான பூஜைகளையும், வழிபாடுகளையும் அது சார்ந்த மற்ற வேதம் கூறும் வேள்விகளையும் நன்றாகத் தெரிந்து வைத்திருப்பீர்கள். இந்த விஷயங்களை மிகச் சிரத்தையாகச் செய்வதால் என்ன கிடைக்கப் போகிறது என்பதையும் அறிவீர்கள். அதாவது சித்த சுத்தி என்கிற எந்தவிதமான மாசுக்களும் அணுகாத ஒரு நிலையை அளிக்கும். அதாவது மனத்துக் கண் மாசுக்களே இல்லாத ஒரு நிலை. அந்த நிலைக்குப் பிறகு மனம் சத்வ குணத்தை கைக்கொண்டு ஆத்ம விசாரம் பழகுவதற்கு ஏதுவாக இருக்கும். எதற்கு இவ்வளவு விதிமுறைகளை விதித்திருக்கிறார்கள்? இந்த விஷயங்கள் எல்லாவற்றினுடைய மையமும் என்ன? சொல்லுங்கள் பார்ப்போம்’’ வேறொரு சீடரைப் பார்த்துக் கேட்டார்.‘‘வேதாந்தத்தின் மையத்தில் கூறப்படும் தன்னை அறிவதற்குண்டான பக்குவத்தை இந்த ஆத்மீக மயமான சாதனைகள் கொடுக்கும். அதற்காகவே இதையெல்லாம் விதித்திருக்கிறார்கள்.’’‘‘மிகச் சரியாகச் சொன்னாய். அதாவது தான் என்கிற இந்த நான் யார் என்பதை அறிய வேண்டும். இந்த நான் என்பது அதுவேயாகும். ஆனால், நான் உடம்பு என்று அகங்காரக் கோலம் பூண்டு மயங்கி நிற்கிறது. அப்படி மயங்கியிருக்கும் இந்த உடம்பே நான் என்றும், இந்த உலகமே ஒட்டுமொத்த சுகமென்றும் மயங்கி நிற்கும் இந்த நான் யார் என்று அறிய வேண்டும். இப்படி தன்னை அறிதலே சகல சாஸ்திரங்களின் சாரம் என்பதில் யாருக்கும் ஐயம் இருக்காது. எதை அறிதல்...’’

அந்த ஒரு கணத்தின் இடைவெளியில் ஏற்பட்ட மௌனம் எல்லோர் மீதும் கவிந்தது. மெல்ல அங்கொரு சீடர் எழுந்தார். கைகூப்பினார்.‘‘அருணாசலம் இப்படிச் செய்யும் என்கிற விஷயம் இப்போதுதான் எனக்குத் தெரியும். ஏதோ மோட்ச பூமி என்று சொன்னார்கள். ஆதலால், இங்கு வந்து தங்கியிருக்கிறேன். ஆனால், இதையெல்லாம் அறியாத பாமரர்களுக்கும் இப்படிப்பட்ட விஷயங்கள் நடக்குமா? அருணாசலம் என்பதை இப்படித்தான் புரிந்து கொள்ள வேண்டுமா?’’‘‘ஆமாம்...’’ என்றார் கௌதம மகரிஷி.சகலமும் அறிந்த பார்வதி தேவியின் முன்பு அருணாசல மகாத்மியத்தை சொல்கிறோம் என்கிற சந்தோஷமும், இதைச் சொல்ல வைப்பதும் அவளே என்கிற எண்ணத்தோடும் கௌதம மகரிஷி அருணாசலம் குறித்துச் சொன்னதுதான் அருணாசல மகாத்மியம் ஆகும். தொடர்ந்து பேசத் தொடங்கினார்.பார்வதி தேவி இமைகள் மூடாது நெடுநெடுவென்றிருக்கும் அருணாசலத்தை மீண்டும் பார்த்தாள். மெல்ல கிரிவலமாக வந்து அசலமாக இருக்கும் ஈசனோடு கலந்தாள். அதுவரையிலும் அந்த மலைக்கு அசலேஸ் வரர் என்றுதான் பெயர். இப்போது அருணா என்கிற பார்வதி தேவி அவரோடு கலந்ததால் அந்த மலைக்கு அருணாசலேஸ்வரர் என்று பெயர். அருணா என்கிற பார்வதி தேவியை ஈசன் தன் இடபாகத்தில் ஏற்றுக் கொண்டு அர்த்தநாரீஸ்வரராக காட்சி அளித்தார்.

இதைத்தான் கார்த்திகை தீபத் திருவிழாவின் மையத்தில் வைத்திருக்கிறார்கள். இந்த புராண விஷயத்தை அனுசரித்துத்தான், ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை திருநாளில், பௌர்ணமியும், கிருத்திகையும் சேரும் நாளில், மிகச் சரியாக மாலை 6 மணிக்கு அண்ணாமலையார் கோயிலில் அர்த்தநாரீஸ்வரர் எழுந்தருளி காட்சி தருகிறார். கோயிலுக்குள் இருந்து அர்த்தநாரீஸ்வரர் துள்ளிக் குதித்துக் கொண்டு வருவார். இந்த துள்ளிக் கொண்டு வருவதைக் காண கண்கோடி வேண்டும். இதோ பக்தர்களாகிய உங்களை அருள்பாலிக்க வேண்டி நாங்கள் துள்ளிக் குதித்து வருகிறோம் என்பதுபோல் அங்கு அம்மையும் அப்பனுமாகிய இணைந்த கோலத்தில் வருவார்கள். சட்டென்று மலையின் உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். அப்போதுதான் வாண வேடிக்கைகள் முழங்கும். உலக இயக்கத்தின் ஆதாரம் எனும் தத்துவத்தை உலகுக்கு உணர்த்திய இறைவனின் திருவடிவே ‘அர்த்தநாரீஸ்வரர்’.அண்ணாமலையார் திருக்கோயில் இரண்டாம் பிராகாரத்தில், மூலவருக்கு அடுத்ததாக அமைந்திருக்கிறது அர்த்தநாரீஸ்வரர் சந்நதி. ஆண்டுக்கு ஒருமுறை தீபத் திருவிழா திருநாளில், மகா தீபம் ஏற்றும்போது சில நிமிடங்கள் மட்டுமே ஆனந்த தாண்டவத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார் அர்த்தநாரீஸ்வரர்.