Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கட்டுப்படுத்தாதீர்கள், இயல்பாக விடுங்கள் எல்லாமே சரியாக நடக்கும்!

நன்றி குங்குமம் தோழி

தன் மீதான வெளி உலகின் கண்ணோட்டத்தையும் சித்தரிப்புகளையும் உடைத்து, கலை, கல்வி, விளையாட்டு போன்றவைகளில் முன்னேற்றம் அடைந்து, புது வெளிச்சம் பெற்று ஜொலிக்கிறது கண்ணகி நகர். சமீபமாக ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்று, கபடியில் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்ற கார்த்திகா போன்ற விளையாட்டு வீரர்கள் இதற்கு சான்றாக உள்ளனர்.

மூன்றாவது ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டிகள் கடந்த அக்டோபர் 22ல் தொடங்கி 31ம் தேதி வரை நடைபெற்றது. பஹ்ரைனில் நடைபெற்ற இந்தப் போட்டிகளில் ஆசியாவிலிருந்து 45 நாடுகளை சேர்ந்த இளம் வீரர்கள் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளுக்காக பங்கேற்றனர். இதில் நம் இந்தியா 13 தங்கம், 18 வெள்ளி, 17 வெண்கலம் என மொத்தம் 48 பதக்கங்களை குவித்து அசத்தியுள்ளது. ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டிகளில் இந்திய அணிக்கு துணை கேப்டனாக விளையாடிய நிலையில் கபடியில் தங்கப் பதக்கம் வென்ற கண்ணகி நகரை சேர்ந்த கார்த்திகா பலரின் பாராட்டுகளை பெற்று வருகிறார்.

8ம் வகுப்பு படிக்கும் போதிலிருந்தே தனக்கு கபடியில் ஆர்வம் ஏற்பட்டதாக கூறும் கார்த்திகா, கண்ணகி நகரில் கபடி பயிற்சியாளராக இருக்கும் ராஜ் மற்றும் மூத்த கபடி வீரர்களையும் தன் முன்னுதாரணமாக கொண்டுள்ளார்.“எங்க பயிற்சியாளர் ராஜ் அவர்களின் அன்றாட கடின உழைப்பினால் நான் இன்றைக்கு இந்தியாவுக்காக விளையாடியிருக்கேன். போட்டிகளில் பங்கேற்பதில் பெரிதாக எந்த சிக்கல்களையும் நான் சந்திக்காத வண்ணம் என் பயிற்சியாளர் பார்த்துக்கொண்டார். என் வெற்றிக்கு காரணம் என் பயிற்சியாளர்தான்.

பஹ்ரைன் நாட்டில் விளையாடும்போது வேறு ஒரு நாட்டில் விளையாடுகிறோம் என்ற உணர்வு எனக்கு இருக்கவில்லை. காரணம், அங்கு பெரும்பாலும் தமிழ் மக்கள் அதிகமாக இருந்தனர். ‘கார்த்திகா’ எனும் என் பெயரையும் ‘கண்ணகி நகர்’ என்கிற என் ஊரின் பெயரையும் அதிகமாக சொல்லி உற்சாகப்படுத்தினார்கள்.

அது ரொம்ப பெருமையான தருணமாக அமைந்தது. என் ஊரான கண்ணகி நகருக்கு நற்பெயர் சேர்க்க வேண்டும் என்ற நோக்கமும் எனக்குள் இருந்தது. கண்ணகி நகர் பகுதியையும் ஊர் மக்களையும் உலகமெங்கும் தெரியப்படுத்த வேண்டும் என்பது என் ஆசை. வெற்றி இலக்கை அடைவதற்காகவே நாங்க கண்ணகி நகரிலிருந்து புறப்பட்டு வந்திருக்கிறோம் என்கிற எண்ணம் எப்பொழுதும் மனதில் இருக்க வேண்டும் என்பதையே பயிற்சியாளர் ராஜ் எங்களுக்கு எப்போதும் சொல்வார்.

இந்தியாவுக்காக விளையாட சென்ற எங்க கபடி அணியில் இந்த முறை நான் துணை கேப்டனாக பங்காற்றினேன். இந்திய அணியின் கேப்டன் ஆக வேண்டும் என்பதே என் அடுத்த குறிக்கோள். ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று இந்தியாவுக்கு தங்கப் பதக்கம் வெல்ல வேண்டும் என்பது என் மிகப்பெரிய கனவு. ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்று சென்னை திரும்பியதும் எனக்கு பலரிடமிருந்தும் பிரமாண்டமான வரவேற்பு கிடைத்தது.

முதலமைச்சர் எங்களுக்கு அழைப்பு விடுத்து, உயர் ரொக்க பரிசினை வழங்கியதோடு மட்டுமின்றி, நான் வைத்த கோரிக்கைகளையும் கேட்டுக் கொண்டார். தற்போது வாடகை வீட்டில் வசிக்கும் எனக்கு சொந்த வீடு வழங்குவதாகவும், கண்ணகி நகரின் பார்க் மைதானத்தில் கபடி பயிற்சி செய்து வரும் எங்களுக்கு, இண்டோர் மைதானம் அமைத்து தரப்படும் எனவும், அரசு வேலை வழங்கப்படுவதற்கான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என உறுதிஅளித்தார். தொடக்கத்தில் ‘ஏன் பெண்பிள்ளைகளை கபடி விளையாட அனுப்புகிறீர்கள்’ என்றவர்கள் இன்று எங்களை நினைத்து பெருமைப்படுகிறார்கள்” என்ற கார்த்திகாவை தொடர்ந்தார் கபடி பயிற்சியாளர் ராஜ்.

“கார்த்திகா கடினமாக உழைக்கக்கூடிய பெண். பத்தாம் வகுப்பு படிக்கும் போதும் கூட தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்றார். இந்த சிறுவயதில் அவ்வளவு உழைத்ததால்தான் இன்றைக்கு சாதிக்க முடிந்துள்ளது. கண்ணகி நகர் பகுதி குழந்தைகளுக்குள் நிறைய விளையாட்டுத் திறமைகள் ஒளிந்திருக்கு. வருகின்ற 2030ம் ஆண்டில் நடைபெறவிருக்கிற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் கபடி சேர்க்கப்பட்டிருக்கு, இதேபோல 2036ல் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியிலும் கபடி சேர்க்கப்படலாம் என்கிற எதிர்பார்ப்பும் இருக்கு. அதில் பங்கேற்பதுதான் எங்களோட முக்கிய இலக்கு” என்றார்.

தங்களுக்கு மட்டுமின்றி கண்ணகி நகர் பகுதிக்கே மகள் கார்த்திகா பெருமை சேர்த்திருப்பதாக அவரின் பெற்றோரும் ஊர் மக்களும் கொண்டாடி மகிழ்கின்றனர். “கபடி மாதிரியான விளையாட்டுகளில் பெண் பிள்ளைகளுக்கு அடிபட்டுவிடுமென்று பயப்படுவது இயல்பு. இருப்பினும் பெண் குழந்தைகள் துணிந்து வெளிய வரணும்னு விளையாட அனுப்பினேன்” என்கிறார் கார்த்திகாவின் தாயார்.

“படிப்பும் முக்கியம், விளையாட்டும் முக்கியம்” என அவரை ஆதரிக்கும் தந்தை, “உனக்கு எந்த விளையாட்டு நன்றாக வருகிறதோ அதுதான் உனக்கு சிறந்தது என்று என் மகளிடம் சொல்வேன். ஆனால், கபடி விளையாட்டில் இவ்வாறு பெரிய அளவில் சாதனை செய்வாள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ராஜ் நன்றாக பயிற்சியளித்தார். பெண் பிள்ளைகளை எதுவும் செய்யாதே என்று கட்டுப்படுத்தாதீர்கள், இயல்பாக விடுங்கள். எல்லாமே சரியாக நடக்கும். ‘நான் மட்டுமில்லை, கண்ணகி நகரில் என்னைப்போல நிறைய பேர் இருக்காங்க’ என்று கார்த்திகா அடிக்கடி சொல்லுவாள்” என்று நெகிழ்கிறார்.

தொகுப்பு: ஆர்.ஆர்