வீட்டு பணிப்பெண் அளித்த பாலியல் வன்கொடுமை வழக்கில் முன்னாள் பிரதமர் பேரனுக்கு சாகும் வரை ஆயுள்: பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவு
பெங்களூரு: பாலியல் வழக்கில் மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் முன்னாள் எம்பியும், தேவகவுடாவின் பேரனுமான பிரஜ்வல் ரேவண்ணாவை குற்றவாளி என தீர்ப்பளித்த பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றம், அவருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டது. கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி மஜத முன்னாள் எம்.பியும், முன்னாள் பிரதமர் தேவகவுடா பேரனுமான பிரஜ்வல் ரேவண்ணா மீது மைசூரு கே.ஆர்.நகரைச் சேர்ந்த பெண் ஒருவர், பிரஜ்வல் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளித்தார்.
அந்த புகாரின் அடிப்படையில் பிரஜ்வல் ரேவண்ணா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர் மேலும் பல பெண்களை பலாத்காரம் செய்து அதை செல்போனில் வீடியோவாக எடுத்து வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வரவே, பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றார். பின்னர் அவர் நாடு திரும்பியதும், இந்த வழக்கை விசாரிக்க அமைக்கப்பட்டிருந்த எஸ்.ஐ.டி அதிகாரிகள் அவரை கடந்த ஆண்டு மே மாதம் பெங்களூரு கெம்பேகவுடா விமான நிலையத்தில் கைது செய்தனர். அவரது செல்போனையும் பறிமுதல் செய்தனர். அதில் 2,900 ஆபாச வீடியோ பறிமுதல் செய்யப்பட்டது.
குற்றவாளி
எஸ்.ஐ.டி அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணா, கடந்த 14 மாதங்களாக பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கை விசாரித்துவரும் மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில், கடந்த ஆண்டின் இறுதியில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. 123 ஆதாரங்களைச் சேகரித்து சுமார் 2000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை எஸ்.ஐ.டி குழு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இந்த வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என சிறப்பு நீதிமன்ற நீதிபதி சந்தோஷ் கஜனனபட் நேற்று முன் தினம் தீர்ப்பளித்தார். தண்டனை விவரத்தை ஆகஸ்ட் 2ம் தேதி அறிவிப்பதாக தெரிவித்தார்.
அதன்படி மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்தில் நீதிபதி சந்தோஷ் கஜனனபட் முன்னிலையில் நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு சிறப்பு வழக்கறிஞர் பி.என்.ஜெகதீஷ் மற்றும் அரசு வழக்கறிஞர்அசோக்நாயக் ஆகியோர் வாதிடும்போது, இதுபோன்ற குற்றத்தில் ஈடுபட்டுள்ளவருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் அல்லது குறைந்த பட்சம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்க வேண்டும் . இது எதிர்காலத்தில் இதுபோன்ற செயலில் ஈடுபடுவோருக்கு பாடமாக இருப்பதுடன் பெண்களுக்கு பாதுகாப்பாக நீதிமன்றம் இருக்கிறது என்ற நம்பிக்கை ஏற்படுத்தும் என்று வாதிட்டனர்.
பிரஜ்வல் கண்ணீர்
நீதிபதி முன் நேற்று பிரஜ்வல் ரேவண்ணா பேசும்போது, ‘நான் பள்ளி கல்லூரிகளில் படிக்கும் போது முதல் ரேங்க் மாணவனாக இருந்தேன். பொது வாழ்க்கையில் நேர்மையை கடைப்பிடித்தேன். 5 ஆண்டுகள் மக்கள் பிரதிநிதியாக இருந்து, சிறப்பாக சேவை செய்தேன். எனது வாழ்க்கையில் நான் செய்த பெரிய தவறு, அரசியலில் வேகமாக வளர்ந்தது மட்டுமே. நான் செய்யாத தவறுக்கான தண்டனையை அனுபவிக்கிறேன். நீதிமன்றம் எனது எதிர்காலத்தை காப்பாற்ற வேண்டும் என்று கண்ணீருடன் வேண்டினார்.
ஆயுள் தண்டனை
இருதரப்பு வாதங்களையும் கேட்ட பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்ற நீதிபதி சந்தோஷ் கஜனனபட், தண்டனையை நேற்று அறிவித்தார். அதில் சமூகத்தில் மிக பெரிய கொடூரத்தை செய்துள்ள குற்றவாளி பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு அதிக பட்ச தண்டனையாக சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்தார். உரிய சட்ட அடிப்படையில் அவரது எஞ்சிய வாழ்நாளை சிறையில் கழிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும் குற்றவாளி மீது இரு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளதால் தலா ரூ.5 லட்சம் என மொத்தம் ரூ.10 லட்சம் அபராதம் விதித்தும் உத்தரவிட்டார். இதில் ரூ.7 லட்சத்தை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நிவாரணமாக வழங்க வேண்டும் என்றும் ஹாசன் சட்ட சேவைகள் ஆணையம் மூலம் ₹11 லட்சம் பாதிக்கப்பட்ட பணிப்பெண்ணுக்கு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்தார்.
மூன்று மாதங்களில் விசாரணை நிறைவு
பொதுவாக பாலியல் வன்கொடுமை தொடர்பாக வழக்குகள் நீதிமன்றங்களில் குறைந்தபட்சம் ஓராண்டும் அதிக பட்சம் மூன்றாண்டுகள் வரை நடக்கும். ஆனால் சிறப்பு புலனாய்வு படை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தபின், ஜாமீனில் விடுதலை செய்யக்கோரி குற்றவாளி தரப்பில் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் வரை சென்றதால், விசாரணை நிலுவையில் வைத்திருந்த நீதிபதி, ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை நீதிமன்றங்கள் தள்ளுபடி செய்ததை தொடர்ந்து, 2025 மே 2ம் தேதி விசாரணையை தொடங்கியது.
மூன்று மாதங்களில் அரசு மற்றும் குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர்கள் வாதம் செய்தனர். எஸ்ஐடி தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர்களாக பி.என்.ஜெகதீஷ் மற்றும் அசோக்நாயக், குற்றவாளி தரப்பில் மூத்த வழக்கறிஞர்களாக பி.வி.நாகேஷ், நளினமாயகவுடா மற்றும் அருண் வாதம் செய்தனர். மூன்று மாதங்களில் விசாரணை முடித்து குற்றவாளிக்கு தண்டனை வழங்கும் தீர்ப்பை நீதிபதி சந்தோஷ் கஜனனபட் வழங்கி சாதனைபடைத்துள்ளார்.
மேல்முறையீடு செய்ய வாய்ப்பு
பாலியல் வன்கொடுமை வழக்கில் மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்தால் குற்றவாளி என்று பிரஜ்வல் ரேவண்ணா உறுதி செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் விசாரணை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யலாம். ஒருவேளை விசாரணை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை, உயர்நீதிமன்றம் உறுதி செய்தால், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளது.
புகார் கொடுத்தவர் மாயம்
முன்னாள் அமைச்சரும் தற்போதைய ஹொளேநரசிபுரா தொகுதி பேரவை உறுப்பினருமான எச்.டி.ரேவண்ணா வீட்டில் வேலை செய்து வந்த கே.ஆர்.நகர் தாலுகாவை சேர்ந்த பெண்ணை, பிரஜ்வல் ரேவண்ணா பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் கொடுத்தார். அவர் போலீசார் மற்றும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி தனக்கு நடந்த கொடுமை குறித்து வாக்கு மூலம் கொடுத்தார். பின் கடந்த பத்து மாதங்களாக புகார் கொடுத்த பெண், தான் வாழ்ந்து வந்த வீட்டை காலி செய்துவிட்டு, குடும்பத்தினருடன் வேறு எங்கோ சென்றுவிட்டார். அவர் இதுவரை எங்குள்ளார் என்பது தெரியவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
வீட்டில் முடங்கிய பெற்றோர்: குலதெய்வத்துக்கு சிறப்பு பூஜை
பாலியல் வன்கொடுமை வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா விடுதலையாவார் என்று அவரது பெற்றோர் எச்.டி.ரேவண்ணா மற்றும் பவானி ரேவண்ணா ஆகியோர் நம்பிக்கையில் இருந்தனர். இதற்காக பல கோயில்களில் சிறப்பு யாகம், ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் செய்தனர். இருப்பினும் நீதிமன்றம் அவரை குற்றவாளி என்று அறிவித்தது. இது பிரஜ்வல் ரேவண்ணாவின் பெற்றோருக்கு அதிர்ச்சியும் கவலையும் ஏற்படுத்தியது. பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்த பிரஜ்வல் ரேவண்ணாவை போலீசார் பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தனர். ஆனால் அவரது பெற்றோர்கள் நீதிமன்றத்திற்கு வரவில்லை. மகனுக்கு குறைந்த பட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று ஹாசனில் உள்ள வீட்டில் குலதெய்வத்திற்கு சிறப்பு பூஜை செய்தனர். நீதிபதி எவ்வளவு நாட்கள் சிறை தண்டனை வழங்குவார் என்று வீட்டில் இருந்தபடி சோகத்துடன் எதிர்பார்த்திருந்தனர். வீடு முழுவதும் அமைதி நிலவியது.