நீடாமங்கலம்,ஜூலை 10: நீடாமங்கலம் அருகேயுள்ள நரசிங்கமங்கலம் கிராமத்தைச்சேர்ந்தவர் ராமதாஸ் மகன் சற்குணம் (26) கூலித்தொழிலாளி.இவர் டூவீலர் வாகனத்தில் வெளியூர் சென்று விட்டு நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.
அப்போது நரசிங்கமங்கலம் அருகே கொண்டியாறு பாலம் பகுதியில் டூவீலர் மீது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோதியது. இதில் சற்குணம் தூக்கியெறியப்பட்டு பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
சம்பவம் பற்றி அறிந்த நரசிங்கமங்கலம் கிராமத்தினர் அடையாளம் தெரியாத வாகனத்தை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க கோரி சாலைமறியல் நடத்தினர். தகவலறிந்த நீடாமங்கலம் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.