வேலூர்,: வேலூரில் திருமணம் செய்வதாக ஆசை கூறி பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
வேலூரை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் தனியார் பள்ளி ஒன்றில் பிளஸ்-1 படித்து வருகிறார். கடந்த மாதம் சில நாட்கள் மாணவி பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இதுகுறித்து பெற்றோர் கேட்டதற்கு மாணவி தான் படிக்கும் பாடப்பிரிவு பிடிக்கவில்லை என்றும், அதனால் தன்னை வேறு பள்ளியில் வேறொரு பாடப்பிரிவில் சேர்த்து விடும்படி கூறி உள்ளார். இதையடுத்து பெற்றோர் அவரை வேறு பள்ளியில் சேர்த்து விடுவதாக சமாதானப்படுத்தினர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரை உடனடியாக பெற்றோர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை டாக்டர் பரிசோதனை செய்ததில் சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து டாக்டர் மாணவியின் பெற்றோரிடம் தெரிவித்தனர்.
அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மகளிடம் விசாரித்தனர். அப்போது அவர், வேலூர் தோட்டப்பாளையம் அருகந்தபூண்டியை சேர்ந்த செந்தமிழ் (26) என்பவரை கடந்த ஓராண்டாக காதலித்து வருவதாகவும், அவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அதனால் கர்ப்பமானதாகவும் கூறினார்.
இதுகுறித்து மாணவியின் தாயார் வேலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிந்து செந்தமிழை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் போலீசார் நேற்றுமுன்தினம் செந்தமிழை கைது செய்தனர்.