பேரையூர், மே 10: பேரையூர் அருகே மின்சாரம் தாக்கியதில், கூலித்தொழிலாளி ஒருவர் பரிதாபமாக பலியானார். பேரையூர் தாலுகா, சாப்டூர் 4வது வார்டைச் சேர்ந்த கிருஷ்ணசாமி மகன் முனியாண்டி (45). இவர் நேற்று வண்டாரியிலுள்ள செங்கல் காளவாசலுக்கு மண் குழைத்து கொடுக்கும் வேலைக்கு சென்றிருந்தார். உணவு நேரத்தில் அவர் கை, கால்களை அங்கிருக்கும் டிரம்மிலிருந்த தண்ணீரில் கழுவினார்.
அப்போது அருகிலிருந்த இரும்பு பைப்பை தொட்ட போது, அதில் இருந்த மின்சாரம் முனியாண்டியை தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார். தகலறிந்த சாப்டூர் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த மரணம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


