Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பொன்னேரி அடுத்த தச்சூர் முதல் புன்னப்பாக்கம் வரை ரூ.820.59 கோடி மதிப்பீட்டில் ஆறுவழிச்சாலை பணி விறுவிறு: இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்க இலக்கு

ஊத்துக்கோட்டை , ஜூலை 8: பொன்னேரி அடுத்த தச்சூர் முதல் புன்னப்பாக்கம் வரை ரூ.820.59 கோடியில் ஆறுவழிச்சாலை அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  பெரும்புதூர், இருங்காட்டுக்கோட்டை, ஒரகடம், சிங்கப்பெருமாள்கோவில் மற்றும் சுற்றியுள்ள பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து சென்னை - எண்ணூர் துறைமுகத்திற்கு தினந்தோறும் ஏராளமான கனரக வாகனங்கள் வந்து செல்கின்றன. இப்படி வந்து செல்லும் கனரக வாகனங்களால் சென்னையில் அதிகளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் உரிய நேரத்தில் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்ல முடியாமல் மாணவ, மாணவிகள் அவதிக்குள்ளாகின்றனர். மேலும் வேலைக்குச் செல்பவர்களும் பாதிப்புக்குள்ளாகின்றனர். இதுமட்டுமின்றி நோயாளிகளை ஏற்றிச்செல்லும் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் சிரமத்திற்குள்ளாகி வருகின்றன.

அதுமட்டுமின்றி புறநகர் பகுதியில் இருந்து நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகனங்களால் சென்னைக்குள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. எனவே இந்த போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் தமிழக அரசு சார்பில் 2022ம் ஆண்டு சென்னை எல்லை சாலைத்திட்டம் என்ற பெயரில் எண்ணூர் துறைமுகம் முதல் மாமல்லபுரம் பூஞ்சேரி கிழக்கு கடற்கரை சாலை வரையில் ₹12,301 கோடி திட்ட மதிப்பீட்டில் 133 கிமீ தொலைவிற்கு ஆறு வழிச்சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டு தொடர்ந்து பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணியனது பிரிவு ஒன்றின் படி எண்ணூர் முதல் தச்சூர் வரை 25 கிமீ தொலைவிலும், பிரிவு இரண்டின் படி தச்சூர் முதல் புன்னப்பாக்கம் வரை 13.30 கிமீ தொலைவிலும், பிரிவு மூன்றின் படி திருவள்ளூர் நெடுஞ்சாலை முதல் வெங்கத்தூர் வரையிலும், பிரிவு நான்கின்படி பெரும்புதூர் முதல் சிங்க பெருமாள்கோவில் வரை 24 கிமீ தொலைவிலும், பிரிவு ஐந்தின்படி சிங்கப்பெருமாள் கோவில் முதல் மாமல்லபுரம் பூஞ்சேரி வரை 30 கிமீ தொலைவிலும் என மொத்தம் 133 கிமீ வரை இப்பணியானது தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில் பிரிவு இரண்டில் தச்சூர்-புன்னப்பாக்கம் பணிகள் மட்டும் ரூ.820.59 கோடியில் நடந்து வருகிறது. இந்த ஆறு வழிச்சாலை பணியானது தற்போது பெரியபாளையம் அடுத்த கன்னிகைப்பேர் பகுதியில் மும்முரமாக நடக்கிறது.

இச்சாலை அமையும் வழித்தடங்களில் 349 பாலங்கள், 5 பெரிய பாலங்கள், 20 சிறிய பாலங்கள், 324 தரைப்பாலங்கள், 49 சுரங்க வழிகள், 4 மேம்பாலங்கள், 3 ரயில்வே மேம்பாலங்கள் கட்டப்பட உள்ளன. 81 கிராமங்கள் வழியாக நிலங்கள் கையகப்படுத்தும் பணிகளும் நடந்து வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டுமென ஏற்கனவே துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்டோர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.