பொன்னை, ஜூலை 14: வள்ளிமலை அருகே மழை வேண்டி ஏரிக்கரையில் வருண பகவானுக்கு பொங்கலிட்டு பெண்கள் ஒப்பாரி வைக்கும் வினோத நிகழ்ச்சி நடந்தது. வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா வள்ளிமலை பகுதியில் மழைவேண்டி ஆண்டுதோறும் வருணபகவானுக்கு பொங்கலிட்டு ஒப்பாரி வைக்கும் வினோத நிகழ்ச்சி நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக ஏரி குளங்கள் அனைத்தும் விரைந்து வற்றி வருகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் நேற்று மழை வேண்டி வருண பகவானுக்கு பொங்கலிட்டு ஒப்பாரி வைக்கும் வினோத நிகழ்ச்சி நடத்தினர்.
கிராம மக்கள் நேற்று மாலை வள்ளிமலை ஏரிக்கரையில் திரளாக ஒன்று கூடி பொங்கல் வைத்தனர். இதனைத் தொடர்ந்து பெண்கள் ஒன்று கூடி வருண பகவானை வேண்டி ஒப்பாரி வைக்கும் வினோத நிகழ்ச்சியை நடத்தினர். இதுபோன்ற வினோத நிகழ்ச்சியை காண சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்தவர்கள் அப்பகுதியில் திரண்டனர். இதுகுறித்து இப்பகுதி மக்கள் கூறுகையில், மழை வேண்டி பொங்கல் வைத்து ஒப்பாரி வைக்கும் நிகழ்ச்சி நடத்தினால் மழை பெய்யும். இதனால், ஆண்டுதோறும் இது போன்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறோம்’ என்றனர்.