ராமநாதபுரம், ஜூலை 24: ராமநாதபுரம் அருகே மகளிர் குழு பெண்களிடம் ரூ.27 லட்சம் கடன் பெற்று திருப்பி தர மறுப்பதாக தம்பதியினர் மீது பெண்கள் மாவட்ட எஸ்.பி சந்தீஷ்யிடம் மனு அளித்தனர். ராமநாதபுரம் மாவட்டம், நயினார்கோயில் அருகே உள்ள ஆரம்பகோட்டை கிராமத்தைச் சேர்ந்த மகளிர் குழு பெண்கள், நேற்று ராமநாதபுரம் எஸ்.பி அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட எஸ்.பி சந்தீஷை சந்தித்து புகார் மனு அளித்தனர்.
இதுகுறித்து ஆரம்பகோட்டை பெண்கள் கூறும்போது, ஆரம்பகோட்டை கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் இணைந்து மகளிர் குழுவை ஏற்படுத்தி தங்களுக்குள் குடும்ப தேவைகளுக்காகவும், வீட்டு விசேஷங்களுக்காகவும், பிள்ளைகளின் கல்வி, வேலை, திருமணம் உள்ளிட்டவற்றிற்கு பணம் சேமிப்பு செய்தும், வங்கியில் கடன் பெற்றும், அதனை தங்களுக்குள் குறைந்த வட்டியில் கடன் வழங்கி வருகிறோம்.
இந்நிலையில் தங்களது குழுவின் உறுப்பினராக இருந்த ஒரு பெண், தன்னுடைய கணவர் தொழில் செய்வதற்கு கடன் உதவி வேண்டும் என கேட்டு ரூ.27 லட்சம் பெற்றார். ஆனால் ஒரு வருடம் ஆகியும் பணத்தை திருப்பித் தரவில்லை. இதனால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே பணத்தை மீட்டு தர எஸ்.பி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.