Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நாமக்கல் கலெக்டர் ஆபீசில் தீக்குளிக்க முயன்ற பெண்

நாமக்கல், ஜூலை 3: நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், கந்து வட்டி கொடுமையில் இருந்து காப்பாற்றக்கோரி, பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.நாமக்கல் அருகே வேட்டாம்பாடியை சேர்ந்தவர் ஜிலானி (43). இவர் சேந்தமங்கலத்தை சேர்ந்த ஒருவரிடம் கந்துவட்டிக்கு ரூ.6லட்சம் கடன் வாங்கினார். அதற்காக புரோநோட்டு எழுதிக் கொடுத்துள்ளார். இதுவரை அசலும், வட்டியுமாக ரூ.13லட்சம் வரை அவர் கட்டியுள்ளார். ஆனால் இன்னும் அசல் பணம் செலுத்த வேண்டும் என பணம் கொடுத்தவர் மிரட்டியுள்ளார். இது குறித்து அவர் 2022ம் ஆண்டு, நாமக்கல் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். இதற்கிடையில், பணம் கொடுத்தவர் ஜிலானியின் வீட்டை ஜப்தி செய்ய நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இன்னும் ரூ.14.51 லட்சம் பணம் தர வேண்டும் என அவர் கேட்டுள்ளார். இதனால் ஜிலானி மிகுந்த மன உளைச்சல் அடைந்தார்.

இதனிடையே, நேற்று நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்த ஜிலானி, தன்னிடம் மறைத்து வைத்திருந்த கேனில் இருந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அங்கிருந்த போலீசார், அவர் மீது தண்ணீர் ஊற்றி தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து, கலெக்டர் துர்கா மூர்த்தி, ஜிலானியிடம் விசாரணை நடத்தினார். அவரிடம் இருந்து மனுவை பெற்ற கலெக்டர், இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக அவருக்கு ஆறுதல் கூறினார். மேலும், ஜிலானி கொடுத்த மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க, அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். எம்பிக்கள் ராஜேஸ்குமார், மாதேஸ்வரன் ஆகியோர், 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை வரவழைத்து, அவரை நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.