கொடைக்கானல், ஜூலை 9: கொடைக்கானலில் தனியார் பள்ளி முன்பு உலா வந்த காட்டு மாட்டினால் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் அச்சமடைந்தனர்.
கொடைக்கானலில் சமீபகாலமாக வனவிலங்குகளின் தொந்தரவும், அச்சுறுத்தலும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக காட்டு மாடு, காட்டுப்பன்றிகளின் நடமாட்டம் சர்வசாதாரணமாக இருந்து வருவதால் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கடும் அச்சத்திற்குள்ளாகி வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொடைக்கானல் மேல்மலை கிராமம் மன்னவனூர் பகுதியில் காட்டுப்பன்றி தாக்கியதில் தோட்டத்தில் வேலை பார்த்து கொண்டிருந்த 3 பேர் படுகாயமடைந்தனர்.
இதேபோல் காட்டுமாடுகளின் தாக்குதலுக்கு பலர் காயமடைந்த நிலையில், சிலர் உயிரிழந்தும் உள்ளனர். இந்நிலையில் நேற்று கொடைக்கானல் ஆனந்தகிரி பகுதியில் உள்ள தனியார் பள்ளி வளாகம் முன்பாக காட்டுமாடு ஒன்று உலா வந்தது. இதனால் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் அச்சமடைந்தனர். சிறிதுநேரத்தில் காட்டுமாடு அங்கிருந்து சென்ற பின்னரே அனைவரும் நிம்மதியடைந்தனர். எனவே வனத்துறையினர் கொடைக்கானல் நகர் மற்றும் குடியிருப்பு பகுதிக்குள் உலா வரும் காட்டுமாடுகளை நிரந்தரமாக வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.