அரியலூர்: வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் செயல்பாடு மற்றும் பராமரிப்பு குறித்த மாவட்ட அளவிலான சிறப்பு விழிப்புணர்வு முகாமினை மாவட்ட கலெக்டர் இரத்தினசாமி துவக்கி வைத்தார். அரியலூர் மாவட்டம், அரியலூர் நகராட்சி சந்தை வளாகத்தில், வேளாண்மைப் பொறியியல் துறையின் சார்பில், வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் செயல்பாடு மற்றும் பராமரிப்பு குறித்த மாவட்ட அளவிலான சிறப்பு விழிப்புணர்வு முகாமினை மாவட்ட கலெக்டர் இரத்தினசாமி, துவக்கி வைத்துப் பார்வையிட்டார்.இந்நிகழ்ச்சியில் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா கலந்துகொண்டார்.
அரியலூர் மாவட்டத்தில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் பழுது நீக்கம்மற்றும் பராமரிப்பு வழிமுறைகளை விவசாயிகள் அறிந்து கொள்வதற்காக அரியலூர் மாவட்ட வேளாண்மைப் பொறியியல் துறையும், தனியார் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் விற்பனை நிறுவனங்களும் இணைந்து இன்றையதினம் அரியலூர் நகராட்சி சந்தை வளாகத்தில் மாவட்ட அளவிலான சிறப்பு விழிப்புணர்வு முகாம் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.
இம்முகாமில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை இயக்குதல், பராமரித்தல், செய்ய வேண்டிய மற்றும் செய்யக் கூடாத பணிகள், பழுதுகளைக் கண்டறிதல், உதிரிப் பாகங்கள் குறித்த தெளிவுரை, மசகு எண்ணெய் மற்றும் உயவுப் பொருட்கள் பயன்பாடு பற்றி விவசாயிகளுக்கு தெளிவுரை வேளாண் பொறியாளர்களாலும் தனியார் இயந்திர நிறுவனங்களாலும் வழங்கப்பட்டது. வேளாண்மைப் பொறியியல் துறைக்கு சொந்தமான நடமாடும் பழுது நீக்கும் இயந்திரத்தின் மூலம்விவசாயிகளுக்கு சிறு பராமரிப்பு பணிகள் மேற்கொள்வது குறித்த செயல் விளக்கங்களும் அளிக்கப்பட்டது. மேலும், 08 களையொடுக்கும் இயந்திரங்கள் 60 சதவீதம் மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.
மேலும், விவசாயிகள் தங்களது சொந்த டிராக்டர் மற்றும் உபகரணங்களை இம்முகாமில் கொண்டு வந்து பராமரிப்பு செய்து கொள்வதற்கான வசதிகளும், முகாமில் கலந்துகொள்ளும் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு இத்துறையில் நடத்தப்படும் திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் டிராக்டர் ஓட்டுநர் பயிற்சியில் சேர்ந்து பயன்பெறுவதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இம்முகாமினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என கலெக்டர் இரத்தினசாமி தெரிவித்தார்.
இம்முகாமில், வேளாண்மைப் பொறியியல் துறை செயற்பொறியாளர் சிவபிரகாஷ்,அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தராஜன், அரியலூர் வட்டாட்சியர் முத்துலெட்சுமி, உதவி செயற்பொறியாளர்கள், விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் இதர அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.