ஸ்ரீவில்லிபுத்தூர், அக். 31: மேகமலை காப்பகத்தில் புலிகள் கணக்கெடுக்க வைக்கப்பட்டுள்ள கேமராக்களில் புலிகள் பதிவாகியுள்ளது என, துணை இயக்குநர் தெரிவித்தார். விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் வன விரிவாக்க அலுவலகத்தில் வனத்துறையினருக்கு நேற்று பயிற்சி முகாம் நடைபெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் முருகன் தலைமை வகித்தார். இதில் ஏசிஎப் ஞானப்பழம் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டம் நிறைவடைந்தபின் துணை இயக்குனர் முருகன் கூறுகையில், ‘‘நபார்டு மூலம் இந்த பயிற்சி நடைபெறுகிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தில் தீ பிடித்தால் உடனடியாக அணைப்பது தொடர்பாகவும் ஃபயர் லைன் அமைப்பது தொடர்பாகவும் பயிற்சி முகாமில் வனத்துறை ஊழியர்களுக்கு விரிவாக எடுத்துக் கூறப்பட்டது. ஏற்கனவே புலிகளை கணக்கெடுக்க வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் புலிகள் பதிவாகியுள்ளது. புலிகளை கண்காணிக்க மீண்டும் கேமராக்கள் பொருத்த உள்ளோம்’’ என தெரிவித்தார்.
 
  
  
  
   
