விருதுநகர், ஜூலை 31: வீடு, வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்கள் சேகரிக்கும் பணிக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார். விருதுநகர் கலெக்டர் சுகபுத்ரா வெளியிட்ட தகவல்: மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்டங்கள் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று சேரும் வகையில் உலக வங்கி நிதி உதவியுடன் தமிழ்நாடு உரிமைகள் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
விருதுநகர் மாவட்டத்தில் இல்லந்தோறும் சென்று அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளையும் கண்டறிந்து அவர்களின் முழு விவரங்கள் அடங்கிய சமூக தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் நகர்புற, ஊரக பகுதிகளில் முன் களப்பணியாளர்கள் மூலம் வீடு, வீடாக சென்று கணக்கெடுப்பு நடத்தி மாற்றுத்திறனாளிகள் குறித்து விவரங்கள் சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கான தேர்வு செய்யப்பட்ட சமூக சேவை வழங்கும் நிறுவனங்கள் மூலம் களப்பணியாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கணக்கெடுக்கும் பணி ஜூன் 2ம் தேதி துவங்கி ஆகஸ்ட் மாத இறுதிக்குள் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நடத்தப்படும் கணக்கெடுப்பிற்காக வீடுகளுக்கு வரும் முன்களப்பணியாளர்களுக்கு பொதுமக்கள் அனைவரும் தகுந்த ஒத்துழைப்பு வழங்கி கணக்கெடுப்பு பணி சிறப்பாக நடைபெற உதவ வேண்டும் என தெரிவித்துள்ளார்.