விருதுநகர், அக். 30: புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி விருதுநகரில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் அந்தோணி ராஜ் தலைமை வகித்தார். தேர்தல் வாக்குறுதிப்படி புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
அரசு அறிவித்தபடி 3 சதவீத அகவிலைப்படியை ரொக்கமாக உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகள் குறித்து தேனி மாவட்ட செயலாளர் முருகன், விருதுநகர் மாவட்ட செயலாளர் வைரவன் ஆகியோர் பேசினர். இதில் சங்கத்தைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.
