வத்திராயிருப்பு, செப்.30: சதுரகிரியில் நாளை மறுநாள் அம்பு விடும் நிகழ்வு நடைபெற உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் அமைந்துள்ள ஆனந்தவல்லி அம்மனுக்கு ஒவ்வொரு வருடமும் நவராத்திரி திருவிழா 10 நாட்கள் நடைபெறும். இந்த நிலையில் இந்த ஆண்டிற்கான நவராத்திரி திருவிழா கடந்த 23ம் தேதி காப்பு கட்டுடன் தொடங்கப்பட்டது. ஒவ்வொரு நாளும் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
ஒன்பதாம் நாளான நாளை சரஸ்வதி பூஜையை முன்னிட்டு ஆனந்தவல்லி அம்மன் சிறப்பு பூஜை மற்றும் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்க உள்ளார். முக்கிய நாளான அக்.2ம் தேதி பக்தர்கள் விரதம் இருந்து முளைப்பாரி போட்டு கோவிலில் முளைப்பாரி ஊர்வலம் மற்றும் மகிஷாசுர வர்த்தினி அலங்காரத்தில் ஆனந்தவல்லி அம்மன் வீதி உலாவும் நடைபெற உள்ளது. மகிஷாசுரவர்த்தினி அலங்காரத்தில் உள்ள அம்மன் வாழை மரத்தில் அம்பு விடும் நிகழ்வு நடைபெற உள்ளது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்ய உள்ளனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடு மற்றும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.