விருதுநகர், ஆக.29: விருதுநகர் வ.உ.சி.தெருவை சேர்ந்தவர் நாகராணி(48). ஓ.சங்கரலிங்கபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் சம்பத்குமார் சிவில் இன்ஜினியராக உள்ளார். நேற்று காலை பள்ளிக்கூடத்திற்கு டூவீலரில் இனாம் ரெட்டியபட்டி-ஓ.சங்கரலிங்கபுரம் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த காரை ஓட்டி வந்த நபர் ஆசிரியை டூவீலரை ஓவர் டேக் செய்து முன் சென்று நிறுத்தினார்.
மாஸ்க் போட்ட நிலையில் காரில் இருந்து இறங்கிய இரண்டு வாலிபர்கள் திடீரென ஆசிரியை கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தாலிச் செயின், கேண்ட் பேக்கை பறித்து காரில் ஏறி ஓ.சங்கரலிங்கபுரத்தை நோக்கி சென்றனர். கேண்ட் பேக்கில் ரூ.1,500 பணம், இரு செல்போன்கள் இருந்துள்ளது. காரின் முன், பின் பகுதிகளில் நம்பர் பிளேட் இல்லை. இது தொடர்பாக ஆமத்தூர் போலீசில் ஆசிரியை நாகராணி புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறி செய்து தப்பிய வாலிபர்களை தேடி வருகின்றனர்.