விருதுநகர், ஆக.27: விருதுநகர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதலமைச்சர் கோப்பை 2025க்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளை கலெக்டர் சுகபுத்ரா, எஸ்பி கண்ணன், மேயர் சங்கீதா இன்பம் முன்னிலையில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.
முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் 2025 அனைத்து மாவட்ட மற்றும் மண்டல அளவில் ஆக.26 முதல் செப்.10 வரை நடைபெற உள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள், அரசு பணியாளர்கள் என 5 பிரிவுகளில் ஆண், பெண் இருபாலரும் பங்கேற்கும் வகையில் மாவட்ட அளவில் 25 வகையான விளையாட்டு போட்டிகள், மண்டல அளவில் 7 வகையான விளையாட்டு போட்டிகள், மாநில அளவில் 37 வகையான விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட உள்ளன.
தனிநபர் போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெறுவோருக்கு முதல்பரிசு ரூ.1 லட்சம், 2ம் பரிசு ரூ.75 ஆயிரம், 3ம் பரிசு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும். குழு போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெறுவோருக்கு முதல்பரிசு தலா ரூ.75 ஆயிரம், 2ம் பரிசு தலா ரூ.50 ஆயிரம், 3ம் பரிசு தலா ரூ.25 ஆயிரம் வழங்கப்பட உள்ளது.
மாவட்ட அளவிலான பேட்டிகளை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்து பேசுகையில், தமிழ்நாடு முதலமைச்சர் இளைஞர்களின் கல்வி, விளையாட்டிற்கு பல்வேறு திட்டங்களை தீட்டி சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். மாணவர்களுக்கு எப்படி கல்வி முக்கியமோ, அதுபோல் உடல் வலிமை மிக முக்கியம். இளைஞர்களுக்கு விளையாட்டில் ஆர்வம் செல்லும் போது, வேறு தவறான பழக்கங்களில் கவனம் போகாது.
எனவே இளைஞர்கள் எதிர்கால சவால்களை சந்திக்க அறிவையும், உடலையும் தயார் செய்து கொள்ள வேண்டும். விளையாட்டில் நல்ல முறையில் கலந்து கொண்டு மாநில அளவில் தேர்வாக வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் குமார மணிமாறன், கோட்டாட்சியர் கனகராஜ், நகர்மன்ற தலைவர் மாதவன், அரசு அலுவலர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.