விருதுநகர், அக். 24: கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் மகன் புவனேஷ்(25). இவர் தற்போது புதுச்சேரியில் வசித்து வருகிறார். இந்த நிலையில் செப்.16 அன்று காரில் புதுச்சேரியிலிருந்து மது பாட்டில்கள் கடத்தி வருவதாக விருதுநகர் மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சாத்தூர் டோல்கேட் அருகே போலீசார் நிறுத்திய போது, புவனேஷ் காருடன் தப்பிச் சென்றார். காரை, அருப்புக்கோட்டை பேருந்து நிலையம் அருகே நிறுத்திவிட்டு தப்பி சென்றார்.
இதுகுறித்து மதுவிலக்கு காவல் இன்ஸ்பெக்டர் சித்ரகலா தலைமையிலான போலீசார் வழக்கு பதிந்து, புதுச்சேரியில் பதுங்கி இருந்த புவனேஷை கைது செய்தனர். இவர் மீது ஏற்கனவே சிதம்பரம் காவல் நிலையத்தில் வழக்கு உள்ளது. இந்த நிலையில் எஸ்பி கண்ணன், புவனேஷை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய கலெக்டருக்கு பரிந்துரைத்தார். கலெக்டர் உத்தரவின் பேரில் புவனேஷை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் இன்ஸ்பெக்டர் சித்ரகலா நேற்று கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தார்.
