விருதுநகர், செப்.22: தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பொறியியல் பட்டதாரிகளுக்கான தொழில்நுட்ப வேலைவாய்ப்பு பயிற்சித் திட்டம் வழங்கபட உள்ளது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: தாட்கோ, சென்னையில் உள்ள முன்னணி தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சார்ந்த பொறியியல் பட்டதாரிகளுக்கான, வேலைவாய்ப்பு பயிற்சி திட்டம், ட்ரோன் தயாரிப்பு, கூட்டமைப்பு, சோதனை மற்றும் பறக்கும் தொழில்நுட்ப பயிற்சி, எம்பெடெட் சென்சார் சோதனை பயிற்சி, பிரிண்டெட் சர்க்யூட் போர்டு வடிவமைப்பு பயிற்சி ஆகியவை அளிக்கப்படவுள்ளது.
இந்த பயிற்சியை பெற 18 முதல் 35 வயது நிரம்பியவராகவும், ஏதேனும் ஒரு இளநிலை பொறியியல் பட்டப்படிப்பு அல்லது ஏதேனும் ஒரு டிப்ளமோ தேர்ச்சி பெற்றவராக இருத்தல் வேண்டும். இதற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதார்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். விருப்பமுள்ள இளைஞர்கள் இப்பயிற்சியில் சேருவதற்கு www.tahdco.com என்ற தாட்கோ இணையதளத் பதிவு செய்து விண்ணப்பிக்கலாம். மேலும் தங்கும் விடுதி மற்றும் உணவு உட்பட செலவினம் தாட்கோ மூலமாக வழங்கப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.