விருதுநகர், நவ. 19: விருதுநகர் சூலக்கரை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை, குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் போதை பொருள் துஷ்பிரயோகத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கலெக்டர் சுகபுத்ரா தலைமை வகித்து உறுதிமொழியை வாசிக்க அரசு அலுவலர்கள், மாணவ- மாணவிகள் எடுத்து கொண்டனர்.
அதன்பின், போதை பொருள் இல்லாத இந்தியாவிற்கான பிரசாரம் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலெக்டர் பேசுகையில், ‘இளைஞர்கள் தேசத்தின் சக்தியாக திகழ வேண்டும். சமூகம் மற்றும் நாட்டின் வளர்ச்சியில் இளைஞர்கள் பங்களிப்பு முக்கியம் என்பதால் போதை பழக்கத்திற்கு அடிமையாகாமல் இருக்க வேண்டும்.
மாணவர்கள் போதை பழகத்திற்கு ஆளாகாமல் கல்வியில் கவனம் செலுத்தி உங்களுக்கும், பெற்றோர், சமூகம், நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும். விருதுநகர் மாவட்டத்தை போதை பொருட்கள் இல்லாத பாதுகாப்பான மாவட்டமாக மாற்ற நாம் அனைவரும் பாடுபட வேண்டும்’ என்றார். இந்நிகழ்வில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மீனாட்சி, அரசு அலுவலர்கள், மாணவ- மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.


